×

செய்யூரில் 800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கும் பணி எப்போது தொடங்கும்?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு

 

மதுராந்தகம்: செய்யூரில் 800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதையடுத்து, பணியை உடனே தொடங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் செங்கல்பட்டு, திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகள் தொழில் வளர்ச்சி அடைந்த தொகுதிகளாகும். இதில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய இரண்டு தொகுதிகள் தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. இந்த தொகுதிகளில் உள்ள மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் சென்னைக்கு அருகில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

செய்யூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சென்னையை ஒட்டிய பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு சென்று வர இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும், பெண்களும் நீண்ட நேரம் பயணம் செய்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிப்படைகின்றனர். இந்நிலையில் செய்யூரில் உள்ள 2,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட உப்பளம் பகுதியை ஒட்டி சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் அனல் மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த பணிகள் நின்று போனது.

பின்னர் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு செய்யூர் பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தது. அன்றிலிருந்து நிலங்கள் கையகப்படுத்துதல், தொழில் பூங்கா அமைப்பதற்கான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு செய்யூர் பகுதியில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் ஏதும் நடைபெறாமல் உள்ளதாக பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாவட்டத்திலேயே மிகவும் பின்தங்கிய செய்யூர் தொகுதியில் தொழில் பூங்கா அமைப்பதற்கான பணியை உடனே தொடங்கி வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர்.

Tags : Sayyur ,Madhurantakam ,Chengalpattu district ,Chengalpattu ,Thiruporur ,Tambaram ,Pallavaram ,
× RELATED 3 நாட்களுக்கு முன்பு காணாமல் போன...