×

முத்துப்பேட்டை அலையாத்திகாடு பகுதியில் அம்மன் சிலை ஒன்று கரை ஒதுங்கியதால் பரபரப்பு..

 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அலையாத்திகாடு கடல் லகூன் பகுதி செல்லும் படகு தளம் அருகே கோரையாறு கரையோரத்தில் இன்று சுமார் 3அடி உயரமும், 1.3 அடி அகலமும் கொண்ட சிமெண்டால் ஆன சிங்கத்துடன் இருக்கும் அம்மன் கற்சிலை ஒன்று கரை ஒதுங்கி காணப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அலையாத்திகாடுக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் லகான் பகுதிக்கு வருகை தந்தனர். அப்போது சாமி சிலை கரையில் ஒதுங்கி இருப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் கூடினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை போலீசாருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்குவந்த முத்துப்பேட்டை மண்டல துணை வட்டாட்சியர் தங்கதுரை, ஜாம்புவானோடை கிராம நிர்வாக அலுவலர் மோகன்தாஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அந்த சிலையை மீட்டு எடுத்து சென்று முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்தநிலையில் இந்த சிலை எப்படி இங்கு வந்தது? ஏற்கனவே யாரும் இங்குவந்து போட்டு சென்றார்களா? தண்ணீர் வற்றியதால் வெளியில் தெரிந்துள்ளதா? என்பது குறித்து போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Amman ,Alaiyathikadu ,Muthupettai ,Koraiyaru river ,Alaiyathikadu sea lagoon ,Muthupettai, Tiruvarur district ,
× RELATED முன்பதிவு தரிசன சீட்டுகளில்மூத்த...