நடப்பு சாம்பியனுக்கு தண்ணி காட்டிய குட்டித்தீவு

மயாமி: பிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 32 சுற்றில், கற்றுக்குட்டி அணியான கபோ வெர்டோவை 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்ற நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா அணி காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியது. நடப்பு தொடர் தொடங்குவதற்கு முன்பாக கபோ வெர்டே என்ற ஒரு நாடு பற்றி நம்மில் பெரும்பாலோர் கேள்விப்பட்டிருக்க கூட வாய்ப்பு இல்லை. ஆப்ரிக்காவின் மேற்கு கடற்கரையோரமாக அமைந்திருக்கும் குட்டித்தீவுக் கூட்டம் தான் கபோ வெர்டே. மொத்த மக்கள் தொகை 5 லட்சத்துக்கு கொஞ்சம் அதிகம்! அவ்வளவுதான்.

லீக் சுற்றில் அந்த அணி பலம் வாய்ந்த ஸ்பெயின் அணிக்கு எதிராக 0-0 என டிரா செய்தபோது கால்பந்து உலகமே வாய்பிளந்தது. 40 வயது கோல் கீப்பர் வோஸின்ஹா பாய்ந்து பாய்ந்து 7 கோல் முயற்சிகளை முறியடித்த விதம், ஒரே இரவில் அவரை ஒபாமா ஆக்கியது. ஆனாலும், ஸ்பெயினுக்கு எதிரான டிரா அதிர்ஷ்டவசமானது என்றே பலரும் நினைத்தனர். எச் பிரிவில் சவுதி அரேபியா, உருகுவே அணிகளுக்கு எதிராகவும் டிரா செய்த கபோ வெர்டே 2வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியதே கனவு போல இருந்தது. இந்த நிலையில் தான், மகத்தான வீரர் மெஸ்ஸி தலைமையிலான நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணியை ரவுண்ட் ஆப் 32ல் எதிர்கொண்டது கபோ வெர்டே. மயாமி அரங்கில் நடந்த இப்போட்டியில், கபோ வெர்டே அணியை அர்ஜென்டினா மிக எளிதாக ஊதித்தள்ளும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும், கணிப்பாகவும் இருந்தது.

அதற்கேற்ப, 29வது நிமிடத்தில் மெஸ்ஸி அபாரமாக கோல் அடிக்க அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது. அதன் பிறகு சுதாரித்துக்கொண்ட கபோ வெர்டே தரப்பு தற்காப்பு அரணை பலப்படுத்திக் கொண்டதுடன் அவ்வப்போது தாக்குதலையும் தொடுத்து உலக சாம்பியனுக்கு தண்ணி காட்டியது. இரு அணி கோல் கீப்பர்களும் விழிப்புடன் துடிப்பாக செயல்பட்டதால் இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதியிலும் சளைக்காமல் ஈடுகொடுத்து விளையாடிய கபோ வெர்டே அணிக்கு டெராய் டுரேட் 59வது நிமிடத்தில் கோல் அடித்து உயிரூட்டினார்.

2வது பாதி முடிவில் 1-1 என சமநிலை நீடித்ததால் ஆட்டம் 30 நிமிட எக்ஸ்ட்ரா டைமுக்கு சென்றது. அதில் லிசாண்ட்ரோ மார்டினஸ் (92வது நிமிடம்) கோல் அடிக்க, அர்ஜென்டினா 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. அதே உற்சாகத்துடன் அலை அலையாக தாக்குதலைத் தொடுத்த சாம்பியனின் முயற்சிகளை கோல் கீப்பர் வோஸின்ஹா வெற்றிகரமாகத் தடுத்துக்கொண்டே இருந்தார்.

103வது நிமிடத்தில் கபோ வெர்டே வீரர் சினி லோபஸ் கர்பால் அடித்த ஷாட்டில் பந்து அப்படியே காற்றில் பறந்து வளைந்து எமிலியானோ மார்டினஸை ஏமாற்றி வலைக்குள் தஞ்சம் புக… அர்ஜென்டினா வீரர்களும் ரசிகர்களும் தங்கள் கண்களையே நம்ப முடியாமல் திகைத்துப் போயினர். 2-2 என மீண்டும் சமநிலையை எட்டியதால், கபோ வெர்டேவின் உற்சாகம் எல்லை மீறியது. இதைத் தொடர்ந்து, அர்ஜென்டினா அவசரம் அவசரமாக மேற்கொண்ட பல துல்லிய தாக்குதல்களை வோஸின்ஹா அநாயசாக முறியடிக்க… மெஸ்ஸியின் விரக்தி அவரது முகத்தில் தெரிந்தது.

ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டை நோக்கி செல்வதாகத் தோன்றிய நிலையில், மெஸ்ஸி அடித்த கார்னர் கிக்கை கிறிஸ்டியன் ரொமேரோ தலையால் முட்ட… பந்து கபோ வெர்டே வீரர் டைனி போர்ஜஸ் மீது பட்டு சுய கோலாக மாறியது. அர்ஜென்டினா 3-2 என மீண்டும் முன்னிலை பெற்றபோதும் கபோ வெர்டே சரணடைவதாக இல்லை. கடைசி நிமிடங்களில் அவர்கள் அடித்த சில ஷாட்களை எமிலியோ மார்டினஸ் சிறப்பாக செயல்பட்டு முறியடிக்க, எக்ஸ்ட்ரா டைம் முடிவில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியது. உலக கோப்பையில் இருந்து வெளியேறினாலும், கடைசி விநாடி வரை மனம் தளராமல் உறுதியுடன் போராடிய கபோ வெர்டே வீரர்கள் கால்பந்து ரசிகர்களின் ஒருமித்த பாராட்டை ஒட்டுமொத்தமாக அள்ளினர்.

ஜூலை 7ம் தேதி அட்லான்டா அரங்கில் நடக்கும் ரவுண்ட் ஆப் 16 போட்டியில் அர்ஜென்டினா-எகிப்து அணிகள் மோதுகின்றன.

Related Stories: