சென்னை: மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யாமல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களிடம் தவெக அரசு குதிரை பேரம் செய்து வருகிறது என்று ஆளுநரை நேற்று நேரில் சந்தித்து திமுக, அதிமுக, பாஜவினர் தனித்தனியாக பரபரப்பு புகார் மனு அளித்தனர்.
தமிழகத்தில் அதிமுக எம்எல்ஏக்களை தவெக அரசு, பல்வேறு ஆசைவார்த்தைகளை கூறி இழுப்பதாக புகார்கள் எழுந்தன. அதற்கு ஏற்றார்போல 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அதிமுக புகார் அளித்தது. இதனால் ஒவ்வொருவராக மீண்டும் எடப்பாடி அணிக்கு திரும்பினர். இதனால் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள் தவிர மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று எடப்பாடி கேட்டுக் கொண்டார். ஆனால் மன்னிப்பு கடிதம் கொடுத்த புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர். மேலும் 7 எம்எல்ஏக்களிடம் தவெக பேச்சுவார்த்ைத நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் திமுக எம்எல்ஏக்களுக்கும் தவெக சார்பில் ஆசை வார்த்தைகளை கூறி அழைப்பதாக கூறப்படுகிறது. இதனால் தவெக அரசு குதிரை பேரத்தில் தீவிரமாக ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்பி வில்சன், திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன், அமைப்பு துணை செயலாளர் ஆஸ்டின் எம்எல்ஏ ஆகியோர் நேற்று மாலை 3 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து பேசினர். அப்போது பரபரப்பு புகார் மனு ஒன்றையும் அளித்தனர்.
ஆளுநரை சந்தித்த பின்னர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற குதிரை பேரம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரிடத்தில் நேரடியாக விளக்கினோம். கடந்த 1ம் தேதி அன்று அரசுக்கு தொடர்பில்லாத இரண்டு பேர், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய 2 பேர் அமைச்சர்களை விட அதிகாரம் பெற்றவர்களாக எல்லா கூட்டங்களிலும், அமைச்சரவை கூட்டத்திலிருந்து மற்ற அரசியல் அரசு உயர்மட்ட கூட்டங்களிலே அமர்ந்து முதல்வர் முன்னிலையிலே அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகிற ஒரு கேவலமான நிலைமை தமிழ்நாட்டிலே ஏற்பட்டிருக்கிறது. அதை வலியுறுத்தி சொன்னோம். ஆளுநர் அதை மிகவும் கூர்மையாக கேட்டுக்கொண்டார்.
அந்த 2 பேர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று நாங்கள் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே சொன்னார். அப்படி அவர்கள் அவசியமாக இந்த கூட்டங்களிலே கலந்து கொள்ள வேண்டும் என்றால், அவங்க இரண்டு பேரையும் அமைச்சராக்கி இருக்க வேண்டியது தானே முதல்வர் என்று ஆளுநர் சொன்னார். ஆகவே இதுகுறித்து அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அனிதா ராதாகிருஷ்ணனை திருச்செந்தூரிலே கைது செய்து, தூத்துக்குடிக்கு கொண்டு போய் உட்கார வைத்து 5 மணி நேரம் போலீஸ் அதிகாரிகள் அவரை துன்புறுத்தியுள்ளனர். ‘ஏன் சார் இந்த கஷ்டம் எல்லாம் உங்களுக்கு. பேசாம தவெகவிற்கு வந்து சேர்ந்தீங்கன்னா எல்லாம் சரியாயிடும்’ என்று சொல்லி அவரைப் பயமுறுத்தி, தவெகவில் சேர்ப்பதற்கு அவரை வற்புறுத்தி இருக்கிறார்கள்.
திமுகவினுடைய அமைப்பு துணைச் செயலாளராக ஆஸ்டின் நாகர்கோவிலிலே வெற்றி பெற்றார். அவரை இன்புளுயன்ஸ் பண்ணி, ‘இவ்வளவு அனுபவம் உள்ளவங்களுக்கு எந்த மந்திரி போர்ட்போலியோ கேட்கிறீங்களோ அதை கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கட்சிக்கு வாருங்கள், ராஜினாமா செய்துவிட்டு நில்லுங்கள். விஜய்யே வந்து உங்களுக்குப் பிரசாரம் செய்து, நீங்கள் என்ன இலாகாவை கேட்கிறீர்களோ அந்த இலாகாவைக் கேட்டுக் கொடுக்கிறோம்’ என்று ஆபர் பண்ணாங்க. இதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிக்கிறோம். அதேபோல சீனிவாசன், வேப்பனஹள்ளி தொகுதி, அவரைப் போய் ‘நீ இளைஞரா இருக்கிறாய். நீயும் இங்க வந்து சேர்ந்துட்டேன்னா திமுகவை ஒண்ணுமே இல்லை என்று ஆக்கிடலாம். 50 கோடி ரூபாய் தருகிறோம் உனக்கு.
நீ என்ன வாரியம் கேட்கிறாயோ, எதை கேட்கிறாயோ நாங்க தரோம்’ என்று ஆபர் பண்ணியிருக்கிறார்கள். அதையும் புகாரில் யார் யார் பேசினாங்க என்பதை எல்லாம் கொடுத்திருக்கிறோம். விஜய்பாஸ்கர் நேற்று தான் தவெகவில் சேர்ந்தார். அவர் ஓ.எஸ்.மணியன் கிட்ட பேசியிருக்கிறார். ஓ.எஸ்.மணியனிடம் சொல்றார். இங்கு வந்துட்டீங்கன்னா, உங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கிறோம். ஆக ஆள் பிடிப்பதற்காகவே இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமான பணிகள் செய்ய வரவில்லை என்பதை தெளிவாக ஆளுநரிடத்திலே சொல்லியிருக்கிறோம். என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை எடுக்கிறேன் என்று ஆளுநர் சொன்னார். ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டப்பூர்வமாக நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல ஆளுநர் அர்லேகரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இன்பதுரை எம்பி ஆகியோர் நேற்று மாலை 4 மணிக்கு சந்தித்து தவெக வெளிப்படையாக குதிரை பேரம் நடத்துவதாக புகார் மனு அளித்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் அவர்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தில் அடிப்படையில் நாங்கள் கொடுத்த மனுவின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். ஏற்கனவே குதிரை பேரத்தின் மூலமாக அதிமுகவினுடைய 6 எம்எல்ஏக்களை தவெக அரசு, விலை கொடுத்து வாங்கிக் கொண்டு இருப்பதை கண்டித்தும், தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகளை இந்த அரசு நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ஆளுநரிடம் கூறியுள்ளோம்.
தவெக ஆட்சி அமைக்கும்போது ஆதரவு கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் அதிமுக கட்சி கிடையாது. ஆனால் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்த ஒரு இடத்துக்கு முதல்வரே நேரடியாக சென்றார். உள்ளே போய் சில வாக்குறுதிகளை கொடுத்திருந்ததாக இப்போது தெரியவருகிறது. அவர் கொடுத்திருந்த வாக்குறுதிகளில், ஏற்கனவே எங்களது கொறடா கொடுத்த உத்தரவை மீறி 25 பேர் வாக்களித்தனர். அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருந்தோம். அந்த மனு நிலுவையில் இருக்கும்போதே 6 பேர் ராஜினாமா செய்துவிட்டு, அதே வேகத்தில் தவெகவில் இணைகிறார்கள். இது குதிரை பேரம். இதில் நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு முழு அதிகாரம் இருக்கிறது.
ரகசியகாப்பு உறுதிமொழியை மீறி 2 பேர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதை கண்டும் காணாமல் ஆளுநர் இருக்க முடியாது. குதிரை பேர விவகாரத்தில் சட்டப்பிரிவு 167ன் படி ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம். எங்களிடம், எனக்கு இருக்கும் அதிகாரத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக காலையில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளுநர் அர்லேகரை சந்தித்து பேசினார். அப்போது பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது நயினார் நாகேந்திரன், தவெக விஜய் ஆட்சியில் நடைபெற்ற முக்கிய குற்றங்கள் குறித்து புகார் அளித்தார். குறிப்பாக, கடந்த ஜூன் 21ம் தேதி, மதுரையில் நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற சிறுமிகளிடம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து உடனடியாக முறையான விசாரணை நடத்த உத்தரவிடவும், மேலும் விசாரணை நிறைவடையும் வரை அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து இடைநீக்கம் செய்து, தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனு அளித்தார்.
மேலும் அமைச்சரவைக் கூட்டத்தில், எந்தவித அரசுப் பொறுப்பும் வகிக்காத தனிநபர்களான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்றதாக எழுந்துள்ள புகாரைக் கருத்தில் கொண்டு, அதுகுறித்தும் உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனி மனுவொன்றையும் ஆளுநரிடம் அளித்தார்.
ஆளுநருடனான சந்திப்புக்கு பின்னர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
இந்த ஆட்சி பொறுப்பேற்று கிட்டத்தட்ட 54 நாட்களில் 151 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்திருக்கிறது. 85க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருக்கிறது. 80க்கும் மேற்பட்ட போதை பொருள் கடத்தல் நடந்து கொண்டிருக்கிறது. இதை ஆளுநரிடம் மனு மூலமாக தெரிவித்திருக்கிறோம்.
ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பே, அமமுக எம்எல்ஏ காமராஜை கூட்டிட்டு போய், அந்த கட்சியினுடைய பொதுச் செயலாளருடைய கையெழுத்துப் போட்டது மாதிரியே போட்டு அவ்வளவு வேலைகளை பார்த்தாங்க. தொடர்ந்து இப்ப எல்லா எம்எல்ஏக்களும் போயிட்டே இருக்கிறார்கள். அப்ப குதிரை பேரம் நடக்குதா இல்லையா? அமைச்சர் நிர்மல்குமார் சட்டம் படிச்சிருக்காரே தவிர, சட்டத்தை பற்றி தெரியுமா அப்படிங்கிறது எங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஒரு நீதிபதி திருப்பரங்குன்றத்தில தீபம் ஏற்றலாம் என்று சொன்ன பிறகும், அதை முடியாதுன்னு சொன்னா, இவர் சட்டத்துறை அமைச்சராக எப்படி நீடிக்கிறார் என்பதுதான் தெரியல.
எனக்கு தெரிந்த வரையிலும் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் ஒன்றிய அரசினுடைய திட்டங்களை ஆய்வு செய்யவும், அவர் எங்கெல்லாம் போகிறாரோ அந்த இடங்களில் ஆய்வு செய்வதற்கு அவர்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அதை வந்து கொச்சைப்படுத்தி பேசுவது ஒரு அமைச்சருக்கு அழகல்ல. நிர்மல் குமார் மேலேயே நிறைய கம்ப்ளைண்ட் வந்திருக்கிறது. அதாவது பப்ளிக் ப்ராசிக்யூட்டர் போடுவதற்கும் தமிழ்நாடு முழுவதும் 5 லட்சத்திலிருந்து 50 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக கூட புகார்கள் வந்திருக்கிறது. ஆக, நாங்க பகிரங்கமா குற்றம் சொல்லிட்டோம். நாங்க வந்து யாருக்கும் பின்புலமாக இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுநரை திமுக, அதிமுக, பாஜவினர் அடுத்தடுத்து தவெக அரசு மீது புகார் அளித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் மாளிகை விளக்கம்
ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: தமிழக பாஜவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மற்றும் தமிழ்நாடு பாஜ பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோர் இணைந்து, தமிழ்நாடு ஆளுநரை நேரில் சந்தித்து மனு ஒன்றை வழங்கினர். அந்த மனுவில், ‘‘சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களை தவிர இரண்டு தனிநபர்கள் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டு, அது சட்டவிரோதமான செயலாகவும், ரகசியக் காப்பு உறுதிமொழியினை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை கடுமையாக கண்டித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய நிகழ்வுகள் இனி நடைபெறாதவாறு உறுதி செய்ய, தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்குமாறும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வைகோ பேட்டியை தொடர்ந்து முதல்வர் விஜய் மீது நடவடிக்கை
திமுக சார்பில் ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகார் மனுவில், ‘‘கடந்த 1.7.2026 அன்று ஆளுநருக்கு அனுப்பப்பட்ட புகாரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து குறித்து கடிதம் எழுதப்பட்டது. முதல்வர் விஜய், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட சீர்காழி மற்றும் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யச் சொல்லி இடைத்தேர்தலில் போட்டியிடுங்கள். அவர்களை வெற்றிபெற செய்கிறேன் எனச் சொன்னதாக கூறி வைகோ அளித்த பேட்டியில் தெரிவித்ததை ஆளுநரிடம் தெரிவித்து, அதன் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
