ராமதாஸ்-அன்புமணி இணைந்ததால் விரக்தி அருள் புதிய கட்சி?

சேலம்: பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவருடைய மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு கட்சி ரீதியாக கருத்து மோதல் ஏற்பட்டது. இதனால் பாமக இரு அணியாக செயல்பட்டது. சேலம் மேற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏ அருள், பென்னாகரம் ெதாகுதி முன்னாள் எம்எல்ஏ ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர், ராமதாஸ் ஆதரவாளர்களாக செயல்பட்டனர். அப்போது அன்புமணியை அருள் கடுமையாக விமர்சித்தார். பதிலுக்கு அன்புமணியும் விமர்சனம் செய்திருந்தார். ஒரே கட்டத்தில் அருள் கார் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் ராமதாசின் 61வது திருமண நாளையொட்டி அன்புமணி குடும்பத்துடன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றார். அங்கு தந்தை-மகன் இருவரும் உணர்ச்சி பொங்க கட்டித்தழுவி கண்ணீர் விட்டனர். இதனால் தந்தை-மகன் மோதல் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து பேசிய அருள், ‘‘ராமதாசை நம்பி பயணித்து பல கோடிகளை இழந்து இருக்கிறோம். அவர் எங்களை நட்டாற்றில் விட்டு விட்டார்,’’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அருள் புதிய கட்சி தொடங்குவது குறித்து நேற்று சென்னையில் ராமதாஸ் அணியில் பயணித்த திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ‘‘இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவை அறிவிப்போம்,’’ என்றார்.

Related Stories: