×

சென்னையில் கலெக்டரை சந்தித்து மனு; எப்சிஆர்ஏ சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து அனைத்து மாநிலங்களிலும் போராட்டம்: சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் பி.வில்சன் தகவல்

சென்னை: வெளிநாடு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டமசோதாவை திரும்ப பெறும்வரை ஒன்றிய அரசுக்கு எதிராக போராடுவோம் என்று சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை குழு தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.வில்சன் தெரிவித்துள்ளார். வெளிநாடு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்ட மசோதாவை (எப்சிஆர்ஏ) நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசு தாக்கல் செய்தது. இந்த சட்ட மசோதாவில் பல திருத்தங்களை கொண்டு வந்து இருக்கிறார்கள். எப்சிஆர்ஏ உரிமம் பெற்ற ஒரு தொண்டு நிறுவனத்தின் பதிவு ரத்தானாலோ அது புதுப்பிக்கப்படவில்லை என்றாலோ அல்லது உரிமத்தை சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனமே சரண்டர் செய்தாலோ அதன் ஆளுகைக்கு உட்பட்ட சொத்துகள் வெளிநாட்டு நிதி ஆகியவை ஒன்றிய அரசால் கையகப்படுத்தப்படலாம், நிர்வகிக்க படலாம் அல்லது தேவைப்பட்டால் அதை விற்பனை செய்யலாம் என்று இந்த மசோதாவில் உள்ளது.

இந்த மசோதா இரண்டு அவையில் நிறைவேற்றி அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமாக வந்தால் இஸ்லாமியர்கள், சிறுபான்மையினர் ஜெயின் சமூகத்தினர் சொத்துகள் பறிபோகும், வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறும் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு லைசென்ஸ் கொடுக்கும் அந்த லைசென்ஸ் இல்லாதவர்கள் பணம் பெற்றால் சட்டப்படி குற்றமாகும். ஏற்கனவே 20 ஆயிரத்து 700 லைசென்ஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. லைசென்ஸ் புதுப்பிக்கவில்லை என்றால் இந்த சட்ட மசோதா சட்டம் ஆகி விட்டால் ஒன்றிய அரசுக்கு சென்று விடும். அப்படி சென்று விட்டால் அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுக்காமலேயே அதை விற்றுவிடலாம்.

இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவதற்காக சிறுபான்மையினர் மீதான கூட்டு நடவடிக்கை மன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து நேற்று அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து தொண்டு நிறுவனங்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டன. மசோதாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் மூலம் பெறப்படும் கையெழுத்து பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். சென்னையில் நேற்று சிறுபான்மையினர் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் பி.வில்சன் தலைமையில் சிஎஸ்ஐ தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சென்னை கலெக்டரை சந்தித்து மசோதாவை திரும்ப பெற வலியுறுத்துவதற்காக பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை பிரதமருக்கு அனுப்புவதற்காக வழங்கினர்.

இதுகுறித்து பி.வில்சன் கூறும்போது, இந்த கையெழுத்து இயக்கம் நாடு முழுவதும் வரும் நாட்களில் தொடர்ந்து நடைபெறும். இந்த கையெழுத்து இயக்கத்தில் மத அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரசு சாரா அமைப்புகள் உள்ளிட்டவை பங்கேற்று பிரதமருக்கு மனு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கொடூரமான மசோதாவை திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும் என்றார்.

Tags : Chennai ,Minority Joint Action Committee ,President ,P. Wilson ,Rajya ,Sabha ,Union government ,
× RELATED தானியங்கி பட்டா மாறுதல் – 15 நாட்களில்...