என்றென்றும் அன்புடன் 20
நாம் ஒரு விஷயத்தை கற்கிறோமா?
கற்றல் என்பது வெறும் தகவல்களை அறிந்துகொள்வது மட்டுமல்ல.
கற்றுக் கொள்வது என்பது ஒரு விஷயத்தை மனப்பாடம் செய்வது, அதை அப்படியே எழுதி மார்க் வாங்குவது இல்லை. அது நம்மை மேம்படுத்திக்கொள்ளும் ஒரு தொடர்ச்சியான செயல்பாடு.
கற்றல் என்றால் என்ன?
புதுசா ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கறதா?
ஒரு திறமையை வளர்த்துக்கறதா?
ஒரு பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடிப்பதா?
இவையெல்லாம் கற்றலோட ஒரு பகுதிதான். ஆனால், கற்றல் இதைவிட ரொம்ப ஆழமானது. கற்றலை நாம் சாதாரணமாக சில வகையாக பிரிக்கலாம். முறையான கற்றல் (Formal Learning): ‘‘இது நம்ம ஸ்கூல், காலேஜ், யுனிவர்சிட்டி மாதிரி இடங்களில் கிடைக்கிற ஒழுங்கான கல்வி. பாடத் திட்டம், டீச்சர்ஸ், எக்ஸாம்னு ஒரு குறிப்பிட்ட முறைப்படி நடக்கும் கற்றல் இது. அடிப்படை அறிவு, ஒழுக்கம், ஒரு ஃபீல்டுல எக்ஸ்பர்ட் ஆக இது ரொம்ப அவசியம்.’’
முறையற்ற கற்றல் (Informal Learning): ‘‘இது நம்ம அன்றாட வாழ்க்கையில தானாவே நடக்குற கற்றல். குடும்பத்துல, ஃப்ரெண்ட்ஸ், கூட வேலை பார்க்கறவங்க, மீடியா, சோஷியல் மீடியா மூலமா நாம கத்துக்குறது. உதாரணத்துக்கு, ஒரு புது லாங்குவேஜை ஃப்ரெண்ட்ஸ் கூட பேசிக் கத்துக்குறது, ஒரு சமையல் குறிப்பை வீடியோ பார்த்து கத்துக்குறது மாதிரி. இது நம்ம நடைமுறைத் திறமைகளையும், சமூகத்தைப் பத்தின புரிதலையும் வளர்க்கும்.
அனுபவக் கற்றல் (Experiential Learning): “செஞ்சு கத்துக்கிறது” இதுதான் அனுபவக் கற்றலோட மெயின் பாயிண்ட். ஒரு வேலையை நேரடியா செஞ்சு பார்த்து, அதுல வர்ற விளைவுகளை உணர்ந்து கத்துக்குறது. ஒரு சைக்கிள் ஓட்டக் கத்துக்குறது, ஒரு புது ப்ராஜெக்ட்டை பண்றது, ஒரு தோல்வியில இருந்து பாடம் கத்துக்குறது இதெல்லாம் அனுபவக் கற்றலுக்கு உதாரணங்கள். இது ரொம்ப பவர்ஃபுல்லான கற்றல் முறை, நாம நேரடியா ஈடுபடுறதுனால பாடங்கள் மனசுல ஆழமா பதியும்.’’
சுய-கற்றல் (Self-directed Learning): இது நம்மளோட சொந்த ஆர்வத்துல, நம்மளோட வேகத்துல கத்துக்குறது. ஒரு புது லாங்குவேஜ் கத்துக்குறது, ஒரு மியூசிக்கல் இன்ஸ்ட்ருமென்ட் வாசிக்கக் கத்துக்குறது, ஒரு புது சாஃப்ட்வேர் யூஸ் பண்ணக் கத்துக்குறது மாதிரி நாமளாவே முன்வந்து கத்துக்குறது. இப்போ இருக்கிற டிஜிட்டல் உலகத்துல, இன்டர்நெட், புக்ஸ், ஆன்லைன் கோர்ஸஸ் மூலமா சுய-கற்றல் சாத்தியம்.கற்றலுக்கு முதல் படி ஆர்வம் (curiosity). “ஏன்?”, “எப்படி?”னு கேள்விகள் வரும்போதுதான் கற்றலே ஆரம்பிக்கும். ஒரு விஷயத்தைப் பத்தி தெரிஞ்சுக்க ஆர்வம் இல்லைன்னா, கற்றல் ஒரு சுமையா மாறிடும். ஆர்வம்தான் அறிவோட கதவுகளைத் திறக்கும் சாவிக் கோல்!
Active எங்கேஜ்மெண்ட் தேவை. சும்மா கேக்குறதோ, படிக்கிறதோ மட்டும் கற்றல் ஆகாது. கத்துக்கிட்டதை யோசிக்கிறது, விவாதிக்கிறது, கேள்விகள் கேக்குறது, நோட்ஸ் எடுக்கிறது, அதை நடைமுறைப் படுத்துறதுன்னு இந்த மாதிரி விஷயங்கள்ல ஈடுபடும்போதுதான் கற்றல் முழுமையடையும்.Adaptability and Unlearning அவசியமாக இருக்கிறது. உலகம் ரொம்ப வேகமா மாறிக்கிட்டே இருக்கு. இன்னைக்கு நாம கத்துக்கிட்டது நாளைக்கு அவுடேட்டட் ஆகலாம். அதனால, புது தகவல்களை உள் வாங்கிக்கவும், பழைய, தேவையில்லாத கருத்துக்களை “மறக்கவும்” நாம ரெடியா இருக்கணும். புதிப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வளர்ச்சி மனப்பான்மை (Growth Mindset) எல்லோருக்கும் தேவையாக இருக்கிறது. “என்னால முடியாது ”ங்கிற எண்ணத்தை விட்டுட்டு, “நான் முயற்சி பண்ணா கத்துக்க முடியும்”ங்கிற மனப்பான்மையோட இருக்கிறது ரொம்ப முக்கியம். நம்ம திறமைகள் நிலையானது இல்ல, அது பயிற்சி மற்றும் முயற்சியால வளரும்ங்கற நம்பிக்கை, கற்றலை ரொம்ப ஈஸியாக்கும். கற்றல் இன்றைய காலகட்டத்தில் கடினமாக இருப்பது எதனால்?
தகவல் overload. இப்போ இருக்கிற டிஜிட்டல் உலகத்துல தகவல்கள் கொட்டிக் கிடக்கு. எது முக்கியம், எது முக்கியம் இல்லன்னு பிரிச்சு பார்க்குறது கஷ்டம். நம்முடைய சோர்வு, ஆர்வமின்மை, தோற்று விடுவோமோ, தப்பாகி விடுமோ என்கிற பயம். முக்கியமான தடை கவனச்சிதறல். இப்போ இருக்கிற உலகத்துல மொபைல் போன், சோஷியல் மீடியா மாதிரி நிறைய டிஸ்ட்ராக்ஷன்ஸ் கற்றலுக்கு தடையா இருக்கலாம்.இதிகாசங்களில் கற்றல் பலவிதமாக விவரிக்கப்படுகிறது.
இராமாயணத்தில் ராமரும் அவரது சகோதரர்களும் வசிஷ்ட முனிவரிடம் கல்வி கற்று வருகின்றனர். அதுமட்டும் அரசனுக்கு போதுமா?
அந்த இடத்தில விஸ்வாமித்திரர் வருகிறார். ராமனையும் லக்ஷ்மணனையும் அனுப்பி வைக்கச் சொல்கிறார். தசரதன் தடுமாறுகிறான். அந்தக் கணத்தில் வசிஷ்டர் தலையிட்டு அனுப்பிவைக்கிறார்.குருகுலத்தில் வசித்தாலும் அனுபவ கல்வியின் தேவை அவருக்குப் புரிந்து இருந்தது.விஸ்வாமித்திரர் ராமரையும் லட்சுமணரையும் அழைத்துச் சென்று, வனத்தில் அசுரர்களை அழிக்கச் சொல்லும்போது, அவர்கள் வெறும் கோட்பாட்டு அறிவை மட்டுமல்லாமல், நடைமுறை அனுபவத்தையும் பெறுகிறார்கள். இது கற்றுக் கொண்ட அறிவை நிஜ வாழ்க்கைச் சூழ்நிலைகளில் அவருக்கு வனவாசம் செல்லும் பொழுது உதவியது. சவாலான சூழ்நிலைகளில் எதிர்கொள்ளும் அனுபவங்கள், புத்தகப் படிப்பால் மட்டும் கிடைக்காத பல பாடங்களை கற்றுத்
தருகின்றன.
மகாபாரதம், சவாலான சூழ்நிலைகள் மூலம் கற்றலை மையப்படுத்துகிறது. பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான சோதனைகள், உறவுகள், வாழ்க்கையைப் பற்றிய விலைமதிப்பற்ற பாடங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றன. உதாரணமாக, வனவாசத்தின் போதும், அஞ்ஞாதவாசத்தின் போதும் பாண்டவர்கள் அடைந்த அனுபவங்கள், பொறுமை, ஒற்றுமை மற்றும் விவேகத்தின் முக்கியத் துவத்தை உணர்த்தின.ஏகலைவனின் கதை கற்றலை வேறு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது. சுய முயற்சினால் ஒருவரை தள்ளி நின்று பார்த்து கற்றுக் கொள்கிறான். வெறும், போர்க்கலை நிபுணத்துவம் மட்டும் போதாது, மனவலிமையும் அறநெறியும் வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
போர்ச்சூழலில் அர்ஜுனனின் மனக் குழப்பங்களுக்கு கிருஷ்ணர் அளிக்கும் விளக்கங்கள், வாழ்க்கையின் நோக்கத்தையும், கடமையைச் செய்வதன் அவசியத்தையும் தெளிவுபடுத்துகின்றன. கற்றல் போர்க் களத்திலும் தொடருகிறது. பயிற்சி இருந்தாலும் அதை எங்கு பயன்படுத்துவது, எப்படி பயன்படுத்துவது என்பதற்கு அர்ஜுனன் கிருஷ்ணனிடம் mentorship பெற்றுக் கொள்கிறான்.
பாகவத புராணம், கதைகள் மூலம் கற்றலை எளிதாக்குகிறது. உதாரணமாக, சுக்ருதரால் சபிக்கப்பட்ட பரீட்சித் மன்னன் தன் மரணத்தை ஏற்றுக்கொண்டு, ஏழு நாட்களில் சுக பிரம்மத்திடம் கதைகள் கேட்டு, அதன் மூலம் மோட்சம் அடைகிறான்.துருவன், உத்தானபாதர் ( சுவயம்புவ மனுவின் மகன் ) என்ற மன்னருக்கும் அவரது மனைவி சுனிதிக்கும் மகனாகப் பிறந்தார். அந்த மன்னருக்கு, தனது இரண்டாவது ராணி சுருசிக்குப் பிறந்த மற்றொரு மகனான உத்தமன் பிறந்தார், அவர்தான் அவரது பாசத்திற்குரியவர்.
ஒருமுறை, துருவனுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, தனது தம்பி உத்தமன், ராஜாவின் சிம்மாசனத்தில் தனது தந்தையின் மடியில் அமர்ந்திருப்பதைக் கண்டார். துருவனின் மீது பொறாமை கொண்ட சுருச்சி (சுருசியின் மகன் அல்ல, அரியணைக்கு வாரிசாக இருப்பார் என்பதால்), இளம் துருவன் தனது தந்தையின் மடியில் அமர முயற்சித்ததற்காக அவரைக் கொடூரமாகத் திட்டினார்.
துருவன் எதிர்ப்பு தெரிவித்து, தனது தந்தையின் மடியில் அமர அனுமதிக்கலாமா என்று கேட்டபோது, சுருசி, ‘கடவுளே என் வயிற்றில் பிறக்கச் சொல்லுங்கள். அப்போதுதான் உனக்கு அந்த பாக்கியம் கிடைக்கும்’ என்று அவரைத் திட்டினார்.துருவன் கிளம்பினான். எதுவும் அறியாத குழந்தை, எதை யாரிடம் கேட்க வேண்டும் என்று தெரியாத குழந்தை கிளம்பிற்று. தேடல் மற்றும் இருக்க வழி பிறந்தது. நாரதர் வந்தார். வழிகாட்டினார்.
துருவன் கற்றுக்கொண்டு செயல்படுத்தினான். எந்தக் கேள்விகளும் அவனிடம் இல்லை. அவனிடம் குழப்பம் இல்லை. எதையும் தேக்கி வைத்துக் கொள்ளவில்லை. அவன் கற்றுக் கொண்டது அவனுக்கு பலித்தது. உயர்ந்த இடத்தை அடைந்தான்.கற்றல் செயல்பாட்டில் பயம் ஒரு பெரிய தடையாகும். தோல்வி பற்றிய பயம், பிறரின் தீர்ப்பு பற்றிய பயம் அல்லது தவறு செய்து விடுவோமோ என்ற பயம் கற்றலைத் தடுக்கிறது. பயமில்லாமல், சுதந்திரமாக ஆராயும் மனப்பான்மையே உண்மையான கற்றலுக்கு அவசியம்.
புற உலகையும் அக உலகையும் கூர்மையாகவும், கவனத்துடனும் கவனிப்பதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும், எந்தவித முன் முடிவுகளும், தீர்ப்புகளும் இல்லாமல் விஷயங்களை அப்படியே பார்ப்பது, நுண்ணறிவை பெருக்கும். மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்வது அல்லது கடந்த கால அனுபவங்களை ஒப்பிடுவது உண்மையான கற்றலைத் தடுக்கிறது. ஒவ்வொரு தருணமும் புதியது, அதை அப்படியே அணுக வேண்டும். ஒப்பீடுகள் இல்லாமல், தனித்துவமான முறையில் கற்றுக் கொள்வது அவசியம்.
நாம் யார், நமது எண்ணங்கள், உணர்வுகள், பயங்கள் என்ன என்பதைப் புரிந்து கொள்வதே உண்மையான கற்றலின் அடிப்படை. நமது மனதின் செயல்பாடுகளை ஆராய்வதன் மூலம், சுய-அறிவைப் பெறலாம். இதுவே வெளிப்புற உலகைப் புரிந்து கொள்வதற்கான திறவுகோல்.கற்றல் என்பது ஒரு முடிவற்ற பயணம். ஒவ்வொரு அனுபவமும், ஒவ்வொரு சவாலும் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு.அறிவு முக்கியமானது என்றாலும், அது முழுமையானது அல்ல என்பதையும், அதன் வரம்புகளையும் புரிந்து கொள்வது அவசியம். அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் உள்ளன, அவற்றை புதிய மற்றும் திறந்த மனதுடன் அணுக வேண்டும்.
ரம்யா வாசுதேவன்
