×

காளியின் அருள்பெற்ற காளிதாசர்

பகுதி 2

காளிதாசர் போஜ மன்னரின் அரண்மனைக்கு இப்போதுதான் முதன்முறையாக வருகிறார். அந்த நாட்டிற்குள் அவர் நுழைவதற்கு முன்னால், காளிதாசரின் புகழும் பெருமையும் எல்லா இடங்களிலும் பரவி இருந்தன. நேருக்குநேராக அறிமுகம் ஆகவில்லையே தவிர, போஜமன்னர் காளிதாசரைப் பற்றி நன்கு அறிந்திருந்து, ஏற்கனவே தன்னுடைய உள்ளத்தைப் பறிகொடுத்திருந்தார். காளிதாசர் அங்கே போஜ மன்னர் அரசவையில் நுழைந்தபோது, மன்னர் அங்கு இல்லை. அவர் உள்ளே சிவ பூஜை செய்து கொண்டிருந்தார்.

கம்பீரமாக அரசவையில் நுழைந்த காளிதாசர் அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தார். அவருடைய ஆடை- அலங்காரங்கள், கம்பீரம், அழகொழுகும் தோற்றம் ஆகியவற்றைப் பார்த்தவுடன், அங்கு ஏற்கனவே அமர்ந்திருந்த புலவர்கள் எல்லோரும் தங்களை அறியாமலேயே எழுந்து நின்றார்கள். அவர்களையெல்லாம் சமிக்ஞையால் (குறிப்பினால்) கைகளை ஆட்டி அமரச் சொன்ன காளிதாசர், தன்னிடம் இருந்த தாம்பூலத்தை எடுத்துச் சுவைத்தார்; மற்ற புலவர்களுக்கும் கொடுத்தார்.

அவரைப் பார்த்த அங்கிருந்த மற்ற புலவர்கள், “இவர் பெரும் வித்வானாக இருப்பார்போல இருக்கிறது. இல்லாவிட்டால் அரசவையில் அமர்ந்து இப்படிச் செயல்பட மாட்டார். வந்தவுடனே நமக்கெல்லாம் புலவர்களுக்கான வெகுமதியை அளிப்பதைப் போல, மரியாதை செய்கிறாரே” என்று நினைத்தார்கள்.அப்போது அவர்களில் ஒருவர் தன் மனத்தில் இருந்த துயரத்தைச் சொல்லிப் புலம்பினார்; “நேற்று சங்கர கவி என்று ஒரு புலவர் வந்திருந்தார். அவருக்கு அரசர் 12 லட்சம் பொன் வழங்கினார்.

அது தவறு! நாங்கள் அதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். எங்களுக்கெல்லாம் எவ்வளவுதான் சன்மானம் கொடுத்தாலும் ஒரு லட்சம்தான் கொடுப்பார். ஏனென்று தெரியவில்லை. நேற்று அந்த சங்கர கவிக்கு மட்டும் 12 லட்சம் பொன் கொடுத்தார்” என்று புகார் படித்தார் அதற்கு மற்ற புலவர்களும் ஆமோதிப்பதைப்போல ஒத்துப் பாடினார்கள். காளிதாசர் அமைதியாகப் பதில் சொல்லத் தொடங்கினார். “புலவர்களே! அரசர், சங்கர கவிக்குக் கொடுத்தது ஒரு லட்சம் பொன்தான்” என்றார்.

வித்வான்கள் மறுத்தார்கள். ‘‘இல்லை! இல்லை! எங்களுக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமானால் அரசரையே கேட்டுக் கொள்ளுங்கள்! 12 லட்சம் பொன் கொடுத்தது நிரூபணமாகும். வேண்டுமானால், இப்போதே சங்கரகவியைக் கூட்டிக்கொண்டு வந்து நாங்கள் நிரூபிப்போம்” என்றார்கள். காளிதாசர் தொடர்ந்தார். “அவசரப்படாதீர்கள்! அவசரப்படாதீர்கள்! நீங்கள் எல்லோருமே நன்கு கற்றவர்கள். அப்படி இருந்தும் இவ்வாறு அவசரப்படுகிறீர்களே! சங்கரகவி அரசரைப் பார்க்க வந்த நேரத்தில் மன்னர் சிவபூஜையில் இருந்தார்.

சிவ பூஜை செய்யும்போது வந்திருக்கிறார். சங்கரனுக்குப் பூஜை செய்யும் போது சங்கர கவியே வந்திருக்கிறாரே!இப்படிப்பட்ட வைபவங்களில் ருத்ர தானம் என்று ஒன்று உண்டு.அதைத்தான் மன்னர் செய்தார். (ருத்ர தானம் என்பது ருத்ர ப்ரீதியாகச் (ப்ரீதி – பக்தியின் வசப்பட்டு செய்வது) அந்தத் தானத்தைப் பெறுபவர்களை ருத்ரராகவே பாவிக்க வேண்டும். ருத்திரர்கள் 11 பேர்கள் ஏகாதச ருத்ரர்கள் என்றே சொல்லுவார்கள். அதன் காரணமாகவே 11 ருத்திரர்களுக்கு 11 லட்சம் என்று சங்கரகவியிடம் கொடுத்தார், மன்னர். சங்கரகவிக்கு என்று கொடுத்தது ஒரு லட்சம்தான். அடிப்படை நோக்கத்தை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, படித்தவர்களான நீங்கள் எல்லோரும் பொறாமைப் படக்கூடாது; வருத்தப்படவும் கூடாது என்றார், காளிதாசர். அதைக்கேட்ட புலவர்கள் எல்லாம் அடங்கினார்கள். அதேசமயம் தன் சிவபூஜையை முடித்துவிட்டு அவைக்கு வந்த அரசர், காளிதாசர் சொன்னதை எல்லாம் கேட்டார்; வியந்தார்.

“நான் எந்த நோக்கத்தில் சங்கரகவிக்குக் கொடுத்தேனோ, அதை அப்படியே என் மனத்தில் இருந்து பார்த்ததைப் போலச் சொல்லி விட்டாரே! சங்கர கவிக்கு, சிவபூஜை செய்யும் நேரத்தில் வந்திருக்கிறார் என்று ஒரு லட்சம் கொடுத்தேன். ஏகாதச ருத்ரர்களுக்குக் கொடுக்கும் முகமாக 11 லட்சம் என்று அதையும் கூறி விட்டாரே!” என்று வியந்த மன்னர் இரண்டு கைகளையும் நீட்டிய படி வேகமாக வந்து காளிதாசரைத் தழுவிக்கொண்டார்.

அதன்பின் மன்னர், “ஐயா! தங்களைப் பார்த்தால் பெரும் கவிபோல இருக்கிறது. யார் நீங்கள்?” என அன்போடு கேட்டார்.காளிதாசரும் அன்போடு, “மன்னா! என்னை எல்லோரும் காளிதாசன் என்று அழைப்பார்கள்” என்று பதில் சொன்னார். ஏற்கனவே காளிதாசரிடம் தன்னை இழந்திருந்த போஜமன்னர், சற்று நேரத்திற்கு முன்னால் அவருடைய அற்புதமான அருள்வாக்கு மயமான தகவல்களையும் வியந்த போஜமன்னர், மறுபடியும் காளிதாசரைக் கட்டித் தழுவிக் கொண்டார்.

பிறகென்ன? காளிதாசர் – போஜமன்னரின் நட்பு நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வந்தது. சொல்லப் போனால் போஜ மன்னர்-காளிதாசர் நட்பைக் கண்டு மாபெரும் புலவர்கள் கூடப் பலர் பொறாமைப்பட்டார்கள். அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதைப்போல, காலம் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. காளிதாசரும் போஜ மன்னரும் மிகவும் ஒற்றுமையாக இருந்தார்கள். யார் கண்பட்டதோ? தெரியவில்லை.ஒருநாள் திடீரென்று போஜமன்னருக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

“காளிதேவியின் அருளை முழுவதுமாக பெற்றவள் காளிதாசன். பொங்கி வழியக்கூடிய அளவுக்கு ஆற்றல் படைத்தவன். அவன் வாக்கிலிருந்து இதுவரைக்கும் பொங்கி வந்திருக்கும்படியான கவிதை எனும் அமிர்தத்தை, எவ்வளவு வேண்டுமானாலும் வேண்டும் அளவிற்கு அனுபவிக்கிறோம். அவன் வாயிலிருந்து எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாகி விட்டது. நான் இறந்துபோன பிறகு, அவன் எனக்காகச் ‘சரம கவி’ பாடுவான் அல்லவா? அதை நான் கேட்க முடியாது. அது எப்படி இருக்குமோ? அதை மற்றவர்கள் கேட்பார்களே தவிர, நான் எப்படிக் கேட்க முடியும்?” என்ற எண்ணம் தோன்றியது.

உடனே அவர், காளிதாசரை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார். காளிதாசர் வந்ததும், “காளிதாசா! நான் இறந்து விட்டேன் என்று வைத்துக் கொள்!” என்று மன்னர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காளிதாசர் பதறினார். “மன்னா! அப்படிச் சொல்லாதீர்கள்! சொல்லாதீர்கள்!” என்று பதறினார். மன்னர் விடவில்லை;” என் இறப்பிற்குப் பிறகு, என் பெயரில் என்ன எழுதுவாயோ, அதை இப்போதே எழுதி எனக்குக் கொடுக்க வேண்டும்” என்றார்.

காளிதாசருக்குத் தூக்கி வாரி போட்டது. “மன்னா! இது என்ன விபரீத புத்தி! இதைச் செய்ய வேண்டும் என்று. எனக்கு உத்தரவு போடுகிறீர்களே! நிர்ப்பந்தப்படுத்தவும் செய்கிறீர்கள். நான் எழுதுவதா? என்ன தெரியும் எனக்கு? ஆடு மேய்ப்பவனாக இருந்தேன். அம்பிகை அருள் புரிந்தாள். ஏதோ அம்பிகையின் அருளால் அல்லவா. இன்றைக்கு வாயிலிருந்து கவிதை பிறந்து கொண்டிருக்கிறது. என் வாக்கால் ஒன்று பாடினால் மன்னா! அது அப்படியே நடந்து விடும். அதனால் பாட முடியாது” என்று இவரும் அழுத்தமாக மறுத்தார்.

மன்னர் விடவில்லை. ‘‘முடியாதா? நீ பாடவில்லை என்றால், உனக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை கிடையாது. உன் முகத்தில்கூட நான் விழிக்க மாட்டேன். என் முகத்தில் நீ விழிக்கக் கூடாது. ராஜ உத்தரவை மீறினால், உன்னை இந்த நாட்டிலிருந்து விலக்கியவனாக அறிவித்து விடுவேன். அதன்பிறகு இந்த ராஜ்ஜியத்தில் உன்னால் இருக்க முடியுமா?’’ என்றார், மன்னர். எவ்வளவோ சொல்லிப் பார்த்தார் காளிதாசர். மன்னர் கேட்பதாக இல்லை.கடைசியில், “நல்லது மன்னா! நீங்கள் நன்றாக இருந்தாலே போதும். இவ்வளவு நாளும் இந்தக் கவியை – அடியேனை வைத்து ஆதரித்துக் கொண்டிருந்த தாங்கள், என் முகத்தில் விழிக்கா விட்டால் கூடப் பரவாயில்லை.

தங்கள் உத்தரவை மீறியதால் பிரஷ்டனாக, அதாவது விலக்கப்பட்டவனாக நான் எங்காவது போய் விடுகிறேன். இந்தத் தேசமும் கவிகளும் மக்களும் நன்றாக இருக்க வேண்டு மானால், நான் இவ்வாறு விலக்கப்பட்டவனாகத்தான் போக வேண்டும். அதுதான் உங்கள் உத்தரவு” என்று சொல்லி விட்டுச் சபையை விட்டுக் காளிதாசர் போய்விட்டார். போனவர் அன்று இரவிலேயே நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்.

பொழுது விடிந்தது காளிதாசரை காணவில்லை என்ற தகவல் ஊர் எங்கும் பரவியது. போஜமன்னருக்கோ பெரும் துயரம் உண்டானது.அவருக்கு காளிதாசர் எங்கே இருக்கிறார் என்பதைக் கண்டு பிடித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதற்காக மன்னர் என்ன செய்தார் என்றால், மாறுவேஷம் போட்டுக் கொண்டு போனார். குடுகுடுப்பைக்காரர் வேஷத்தில் புறப்பட்டார்.காளிதாசர் அந்த நகரத்திலிருந்து புறப்படும் போது, “நானோ பிரபலமானவன். மன்னருக்கு மிகவும் வேண்டியவன் நம்மை எல்லோருக்குமே தெரியும் மக்கள் நம்மைக் ‌கண்டுபிடித்து விடுவார்கள். ஆகவே, முடிந்தவரை மக்கள் நம்மைப் பார்த்த உடனேயே விலகிப்போக வேண்டும்” என்று தீர்மானித்தார். அதற்கேற்ற வேஷத்தை போட்டுக் கொண்டார்.

பைத்தியக்காரர்-பிச்சைக்காரர்- துறவி- எனும் மூன்று தோற்றங்களும் இணைந்தாற்போல, ஒரு வேஷத்தைப் போட்டுக் கொண்டார்; ஊர் ஊராகச் சுற்றத் தொடங்கினார்.அதேநேரத்தில் காளிதாசரைத் தேடி போஜ மன்னரும் ஊர் ஊராக அலைந்து திரிந்து கொண்டிருந்தார். ஒருநாள் காளிதாசர் தன்னுடைய பைத்தியக்காரத் துறவி வேஷத்திற்கு ஏற்ப; அங்கிருந்த ஒரு மாமிசக்கடையில் இருந்த மாமிசத் துண்டத்தை தன் கை தண்டத்தால் சுட்டிக்காட்டி,” என்ன விலை?” என்று கேட்டார்.

அந்த நேரத்தில் அங்கு வந்த, குடுகுடுப்பைக்காரர் வேஷத்தில் இருந்த போஜமன்னர், அதைப் பார்த்தார். அந்தத் துறவிதான் காளிதாசர் என்பது தெரியவில்லை அவருக்கு.
“வேஷமோ சன்னியாசி வேஷம். ஆனால் மாமிசத்தை விலை கேட்கிறாரே! இது என்ன ஆச்சரியமாக இருக்கிறது!” என்று எண்ணினார் மன்னர். உடனே அருகில் நெருங்கிப்போய், “சன்னியாசியே! நீங்கள் மாமிசம் சாப்பிடலாமா?” என்று கேட்டார்.

தன்னைக் கேட்கக் கூடியவர்தான் போஜ மன்னர் என்பது காளிதாசருக்கும் தெரியவில்லை. துறவி வேஷத்தில் இருப்பவர்தான் காளிதாசர் என்பது போஜமன்னருக்கும் தெரியவில்லை. இருவருக்குமே வேஷப் பொருத்தம் அவ்வளவு அற்புதமாக இருந்தது.பைத்தியக்கார துறவி வேஷத்தில் இருந்த காளிதாசர், பைத்தியக்காரத்தனத்தை நிரூபிப்பதுபோல, “ கள்ளைக் குடிக்காவிட்டால் மாமிசம் செரிக்காது” என்றார்.போஜமன்னர் திகைத்தார். “நீங்களோ சன்யாசிகள் குடிக்கலாமா? மாமிசம் உண்ணலாமா?” எனக் கேட்டார்.

காளிதாசர் பதில் சொன்னார் ‘‘தேச ப்ரஷ்டம்-நாட்டில் இருக்கக்கூடாது என்று விலக்கப்பட்டவனுக்கு வேறு என்னதான் கதி இருக்கிறது?” என்றார். போஜமன்னர் புரிந்து கொண்டார். “நம் எதிரில் நிற்பது காளிதாசன். காளிதாசனை நாம்தானே விலக்கினோம். நம் பார்வையில் படாமல் இவ்வாறு மாறுவேஷத்தில், நம் நண்பன் அலைந்து கொண்டிருக்கிறான் என்று தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டார். அதேநேரத்தில் பிச்சைக்கார சன்னியாசி வேஷத்தில் இருந்த காளிதாசர்,”என்னை இவ்வளவு கேட்கிறாயே. நீ எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார். “நான் இருப்பது தாரா நகரம். அங்கிருந்துதான் வருகிறேன்” என்று பதில் சொன்னார் மன்னர்.

அதைக்கேட்ட காளிதாசர், “போஜ மன்னர் சௌக்கியமாக இருக்கிறாரா? சௌக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டார்.மன்னர் நிச்சயம் செய்து கொண்டார். “இவன்தான் நம் நண்பன் காளிதாசன். இதுதான் நல்ல நேரம். இவன் வாயினாலே நம்மைப் பற்றிய சரம ஸ்லோகத்தை நாம் கேட்டுவிட வேண்டும்” என முடிவு செய்து, “போஜ மன்னர் இறந்து போய்விட்டார். இன்றுடன் ஆறு நாட்கள் ஆகிவிட்டன’’ என்று அழுது கொண்டே சொன்னார்.

அதை உண்மை என்று நம்பித் திடுக்கிட்ட காளிதாசர், “போஜ மன்னர் போய்விட்டார். தாரா நகரமும் சரஸ்வதி தேவியும் ஆதரவில்லாமல் ஆகிவிட்டார்கள். போஜராஜன் இருக்கின்ற வரைக்கும் சரஸ்வதிக்கும் ஒரு பிடிப்பு இருந்தது. இப்போது அது இல்லாமல் போய்விட்டது. போஜ ராஜா இருந்த வரைக்கும் பண்டிதர்கள் எங்கே இருந்தாலும் பாராட்டப்பட்டார்கள். இப்போது அவர்கள் எங்கே கண்டாலும் கண்டிக்கப்படுவார்கள். இது எல்லாம் எதனால்? போஜராஜா சொர்க்கலோகம் போய்விட்டார். அதனால்தான்!” எனும் கருத்தமைந்த ஸ்லோகம் ஒன்றைப் பாடினார். அதே வினாடியில் எதிரில் குடுகுடுப்பைக்காரர் வேஷத்தில் இருந்து, காளிதாசர் பாடிய சரமகவியைக்கேட்ட போஜ மன்னர் இறந்து கீழே விழுந்தார்.

தூக்கி வாரிப்போட்டது காளிதாசருக்கு; ஒரு சில வினாடிகளிலேயே நடந்ததைப் புரிந்து கொண்டு விட்டார். “மன்னா நீ தான் போஜராஜாவா? நான் உன்னை பற்றிய சரம ஸ்லோகத்தை உன் எதிரில் பாட மாட்டேன் என்றேனே! உன் பிடிவாதத்தினால் இறந்து போய்விட்டாயே!” என்று கதறினார்.அவருடைய துக்கத்தைச் சகிக்க முடியாமல் சரஸ்வதி தேவி அங்கே தோன்றினாள். அந்த சரஸ்வதியிடம் காளிதாசர் ஒரு வேண்டுகோள் விடுத்தார். “ அம்மா! இந்தப் போஜராஜனை எப்படியாவது பிழைக்க வை! பிழைக்க வை!”என வேண்டினார். சரஸ்வதிதேவி சொல்லத் தொடங்கினாள்.

“காளிதாசா!அவனைப் பிழைக்க வை என்று கேட்கின்றாயே! உனக்கு உண்மை தெரியுமா? உனக்கே இன்னும் ஏழரை நாழிகைதான் ஆயுள், இன்னும் ஏழரை நாழிகை வரை (மூன்று மணி நேரம்) தான் நீ உயிருடன் இருப்பாய்! உனக்கு உண்டான ஆயுள் அவ்வளவு தான்”என்றாள்.காளிதாசர் பரபரத்தார். “அம்மா அதில் ஒன்றும் கவலை இல்லை. என் ஆயுளில் பாதியை, நான் போஜமன்னருக்குக் கொடுக்கிறேன். அவரை எழுப்புங்கள்!” என வேண்டினார்.

சரஸ்வதி தேவி இரங்கினாள். “சரி முன்பு பாடியதை மாற்றிப் பாடு! உனக்காக அவனுக்கு நான் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) உயிர் தருகிறேன். இருவரும் ஏதாவது வாய் வார்த்தையாவது பேசிக் கொள்ளுங்கள்!” என்று அருள் புரிந்தாள்.உடனே காளிதாசர் தான் முன்பு பாடியதை மாற்றிப் பாடினார். அவ்வாறு அவர் பாடி முடித்ததும் போஜ மன்னர் கண்களை விழித்துக் கொண்டு எழுந்தார்.

காளிதாசர், போஜமன்னரைக் கட்டிக் கொண்டு, “மன்னா! இப்படிச் செய்து விட்டீர்களே! இன்னும் மூன்றே முக்கால் நாழிகை தானே நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்!” என்று வருத்தத்தோடு கூறினார். போஜமன்னரோ, “காளிதாசா! இறந்து போவது ஒரு துக்கமா? உன் வாக்கிலிருந்து வந்த அமிர்தத்தைக் கேட்டேனே! அந்த ஒரு பாக்கியம் கிடைத்தது போதாதா? இன்னும் மூன்றே முக்கால் நாழிகை இருக்கிறது.

கவலைப்படாதே! நம்முடைய நினைவாக ராம சரித்திரத்தை, அந்த மூன்றே முக்கால் நாழிகைக்குள் பாடி முடித்து விடலாம்” என்றார்.உடனே, காளிதாசாரும் போஜமன்னருமாக ராம சரித்திரத்தைப் பாடினார்கள். ஆளுக்கு ஒரு சுலோகமாக மாற்றி மாற்றிப் பாடினார்கள். அற்புதமான நூல் நிறைவு பெற்றது. அதுதான் சமஸ்கிருதத்தில் – வடமொழியில் மிகப் பிரபலமான ‘போ‌ஜ சம்பு’ எனும் அற்புதமான காவியம்! பாடி முடித்தவுடன் போஜ மன்னரும் காளிதாசரும் இறைவனுடைய திருவடியை அடைந்தார்கள்.

பி.என். பரசுராமன்

Tags : Calidasar ,Callie ,KALIDASAR ,KING BOJA ,Bojamnar ,
× RELATED முகப்பேரில் மகப்பேறு அருளும் ஸ்ரீ னிவாசப்பெருமாள்