×

அரசு நாற்றங்கால் பண்ணையில் கிழிந்து தொங்கும் பசுமை வலை: ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் பாதிப்பு

 

மதுராந்தகம்: வெள்ளபுத்தூர் அரசு நாற்றங்கால் பண்ணையில் கிழிந்து தொங்கும் பசுமை வலையால் மரக்கன்றுகள் சேதம் அடைந்து பாதிப்பு ஏற்படும் அவல நிலையில் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நாற்றங்கால் பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள பசுமை நிழல் வலை பல இடங்களில் கிழிந்து சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு வளர்க்கப்பட்டு வரும் பல்வேறு வகையான மரக்கன்றுகளின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அரசின் பசுமைத் திட்டங்களுக்காகவும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காகவும் இந்த நாற்றங்கால் பண்ணையில் மா, பலா, வேம்பு, புங்கன், தேக்கு, பூவரசு உள்ளிட்ட பல்வேறு ரகத்தில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆனால், பசுமை நிழல் வலை நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையிலேயே இருப்பதால், நேரடி வெயில், மழை மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தால் மரக்கன்றுகள் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கிழிந்துள்ள நிழல் வலை வழியாக பறவைகள் மற்றும் கால்நடைகள் நுழைந்து மரக்கன்றுகளுக்கு சேதம் விளைவிக்கும் அபாயமும் நிலவுகிறது. இதனால் அரசின் மரக்கன்று உற்பத்தி மற்றும் விநியோகப் பணிகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, சேதமடைந்துள்ள பசுமை நிழல் வலையை உடனடியாக சீரமைத்து அல்லது புதிதாக அமைத்து, அரசு நாற்றங்கால் பண்ணையில் உள்ள மரக்கன்றுகளை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Vellaputhur government ,farm ,Vellaputhur panchayat ,Achirupakkam ,Chengalpattu ,
× RELATED பேரம்பாக்கத்தில் கூவம் ஆற்றில் தடுப்பணை பணி 75 சதவீதம் நிறைவு