×

நம்மூர் இயறக்கை மூலிகைகள்தான் என் மூலப் பொருட்கள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘பெண்களுக்கு அழகு செய்து கொள்ள பிடிக்கும். அதில் நான் மட்டும் விதிவிலக்கல்ல. சின்ன வயசில் இருந்தே சருமம் மற்றும் தலைமுடி மேல நான் தனிப்பட்ட கவனம் செலுத்துவேன். அதுதான் என்னுடைய பிசினஸாக மாறியது’’ என்று பேச ஆரம்பித்தார் ஈரோட்டை சேர்ந்த கிருத்திகா.‘‘நான் பொறியியல் பட்டதாரி. படிப்பு முடிச்சிட்டு வங்கி மற்றும் ஐ.டி துறையில் வேலை பார்த்தேன். இடையில் எனக்கு திருமணமானது. 2020ல் எனக்கு குழந்தை பிறந்தது.

அதன் பிறகு நான் வேலைக்கு போகவில்லை. ஏதாவது சொந்தமா செய்ய விரும்பினேன். குழந்தைக்கு மூணு மாசம் இருக்கும் போதே நான் இந்த பிசினஸை ஆரம்பிச்சேன். நான் இயற்கை முறையில் சருமம் மற்றும் தலைமுடிக்கான பொருட்கள் தயாரிக்க காரணம், சின்ன வயசில் நான் என்னுடைய சருமத்தை ரொம்பவே கவனமா பார்த்துப்பேன். கடலை மாவு மாஸ்க், பாலாடை மாஸ்க், தலைமுடிக்கும் வெந்தயம் மற்றும் தயிர் பேக் எல்லாம் போடுவேன். மேலும், பொறியியல் நான் ஹாஸ்டலில் படிச்சதால், என்னுடைய சருமம் மற்றும் தலைமுடிக்கு நான் கூடுதல் கவனம் செலுத்துவேன். முதலில் தலைமுடி எண்ணெய்தான் நான் தயார் செய்தேன்.

முழுக்க முழுக்க இயற்கை முறையில் மூலிகைகளை எல்லாம் பயன்படுத்தி தேங்காய் எண்ணெயை காய்ச்சினேன். அது நல்ல பலன் ெகாடுத்தது. எனக்கு முடி நல்ல அடர்த்தியா வளர ஆரம்பிச்சது. பிறகு நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு கொடுத்தேன். அதன் பிறகு இது குறித்து இன்ஸ்டாவில் பதிவு செய்தேன். ஆர்டர் வரத்துவங்கியது’’ என்றவர், அவரின் தலைமுடி எண்ணெயில் ஸ்பெஷாலிட்டி பற்றி விவரித்தார்.

‘‘பொதுவா தேங்காய் எண்ணெய் காய்ச்சும் போது மூலிகைப் பொருட்களை அப்படியே சேர்ப்பாங்க. நான் வெந்தயத்தை கற்றாழையில் முளைக்கட்டி சேர்க்கிறேன். ஆலோவேராவை கீறி அதில் வெந்தயத்தை வைத்து முளைக்கட்டுவேன். ஆலோவேரா தலைமண்டைக்கு ரொம்பவே நல்லது. இன்றைய காலக்கட்டத்தில் கமர்ஷியலா விற்கக்கூடிய பொருட்களுக்கு ஏற்ப நம்மள மாத்திட்டாங்க. ஷாம்புன்னா நுரை வரணும். அப்பதான் தலை சுத்தமாகும்னு நம்மள நம்ப வச்சிருக்காங்க. அதுவே செம்பருத்தி, கற்றாழை, பூந்திக்கொட்டைன்னு இயற்கை முறையில் சேர்க்கும் போது நுரையும் வரும் அதே சமயம் முடியும் ஆரோக்கியமா இருக்கும்.

ஷாம்புக்களில் உள்ள ரசாயனம்

நம்முடைய மண்டையில் படிந்து நாளடைவில் அது முடியின் வேர்க்கால்களை பாதிக்கும். நம்முடைய உடலில் பெரிய பாகம் சருமம்தான். அதனால் இயற்கையாக அதை பாதிக்காமல் என்னவெல்லாம் செய்யணும்னு பார்த்து பார்த்து ஒவ்வொரு பொருட்களையும் தயாரிக்கிறேன். உதாரணத்திற்கு எங்களின் குங்குமப்பூ ஃபேஸ் கிரீம். இதுக்காக காஷ்மீரில் இருந்து
குங்குமப்பூ விவசாயம் செய்யும் இடத்திலிருந்து நேரடியாக வாங்கி வந்து தான் தயாரிக்கிறோம். ஒரு வயசு முதல் எல்லோரும் பயன்படுத்தலாம்.

முகம் பளபளப்பாக்கும், கால் வெடிப்புக்கும் நல்லது, டார்க் பேட்ச் நீக்கும். அதே போல் மரிக்கொழுந்து, தாமரை மற்றும் செம்பருத்தி, மல்லிகை, செண்பகம் கொண்டு பவுடர் நாங்க தயாரிக்கிறோம். இதை காயவச்சு பவுடராக்கி தருகிறோம்’’ என்றவர், இதற்காக பிரத்யேகமாக ஆயுர்வேதம் மற்றும் சருமப் பராமரிப்பு குறித்து படித்த பிறகு தான் பிசினஸே ஆரம்பித்துள்ளார்.‘‘அழகு சார்ந்த பிசினஸ் செய்யும் போது, அதுகுறித்து நன்கு தெரிந்திருக்கணும்.

காரணம், சில பொருட்கள் சேராது. சிலது நல்ல ரிசல்ட் தரும். அதுபற்றி முதலில் தெரிந்து கொள்ளதான் நான் படிச்சேன். இன்னும் நான் என்னை அப்கிரேட் செய்து வருகிறேன். அதேபோல் சருமப் பராமரிப்பு குறித்து முழுக்க முழுக்க இயற்கை பொருட்களை மட்டுமே வைத்து எவ்வாறு அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கணும்னு தனிப்பட்ட கோர்ஸ் படிச்சேன். நான் நிறைய பயணம் செய்து அங்குள்ள இயற்கை விஷயங்களை தெரிந்து கொள்வேன். நம்மூரில் இல்லாத இயற்கை பொருட்கள் வேற எங்கும் கிடையாது.

அதெல்லாம் பயன்படுத்தினாலே நல்ல ரிசல்ட் கிடைக்கும். பூந்திக்கொட்டைக்கு நிகர் ஷாம்பு கிடையாது. அதேபோல் பீட்ரூட், கேரட், பாதாம் மற்றும் கடலைமாவு சேர்த்து ஒரு பேக் தயாரிக்கிறோம். அதை முகத்தில் போட்டு கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். பிளீச்சுக்கு அவசியம் இருக்காது. பீட்ரூட் பயன்படுத்தி லிப்பாம் தயாரிக்கிறோம். வெண்குங்கிலியம் பயன்படுத்தி ஒரு லோஷன் அறிமுகம் செய்திருக்கிறோம். இது சருமப் பிரச்னைக்கு நல்லது. மகிழம் பூவில் பாடி வாஷ் மற்றும் பாரிஜாதப் பூவில் பர்ப்யூம் தயாரிக்க இருக்கிறோம். பர்ப்யூம் தயாரிப்பு குறித்தும் படிச்சிருக்கேன்.

ஒரு பொருள் தயாரித்தால் அது மக்கள் பயன்படுத்தும் போது அவர்களுக்கு பயனுள்ளதா இருக்கணும்னு பார்த்து பார்த்துதான் தயாரித்தேன். மேலும், மக்கள் என் பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தவுடன், அவங்களே சில பொருட்கள் வேணும்னு கேட்பாங்க. அப்படித்தான் ஹேர் பேக், ஃபேஸ் பேக், ஃபேஸ் வாஷ் எல்லாம் தயாரிக்க ஆரம்பித்தேன். இந்தப் பொருளை பொறுத்தவரை நம்பிக்கை முக்கியம். நான் தயாரித்த பொருட்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுத்தேன்.

அவங்க மூலமாக வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிச்சாங்க. அதன் பிறகுதான் நான் இன்ஸ்டாவில் மார்க்கெட்டிங் செய்ய ஆரம்பிச்சேன். நாங்க அகலக்கால் எடுத்து வைக்கல. சின்னச் சின்ன அடி எடுத்து தான் ஒவ்வொரு பொருளாக தயாரித்தோம். இன்ஸ்டா மட்டுமில்லாமல் கண்காட்சியில் ஸ்டால் போடுவேன். மக்கள் மத்தியில் என் பொருட்களை கொண்டு போய் சேர்த்தேன். நிறையவே உழைச்சேன். நம்மளுடைய பொருளை நாமதான் மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். என்னை நம்பி மக்கள் வாங்கினாங்க.

அப்படி வாங்கினவங்க அதன் பிறகு மறுபடியும் என்னை தேடி வந்தாங்க. காரணம், அந்தப் பொருள் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கணும். இந்த பிசினஸ் செய்றது ஈசி கிடையாது. நிறைய தடைகள் வரும். காஸ்மெடிக் தயாரிக்க உரிமம் பெறணும். தரம் மெயின்டெயின் செய்யணும். அதற்கான பொருட்களை வாங்கணும். எல்லாவற்றையும் விட இந்த மார்க்கெட் பெருசு. பலர் இதில் இருக்காங்க.

அதில் நம்முடைய பொருளுக்கான வாடிக்கையாளர்களை சம்பாதிக்கணும். சருமம் மட்டுமில்லாமல் பயோடின், ABC மால்ட், மில்லட்ஸ் கொண்டு குழந்தைகளுக்கான எனர்ஜி பார் தயாரிக்கிறோம். ஆரம்பத்தில் நான் மட்டும்தான் செய்தேன். அப்பா உதவி செய்தார். இப்ப எங்களின் பொருட்களை பிராண்டிங் செய்யணும். பிரான்சைஸி முறையில் விற்பனை செய்ய இருக்கிறோம்’’ என்றார் கிருத்திகா.

தொகுப்பு: ஷன்மதி

Tags : Saffron ,
× RELATED திருமண ஆடைகளும் வாடகைக்கு கிடைக்கும்!