×

குழந்தைகளின் நினைவாற்றல், கையெழுத்து மாற்றும் திருக்குறள் கதைகள்!

நன்றி குங்குமம் தோழி

‘உலக பொதுமறை’ எனப் போற்றப்படுவது திருவள்ளுவர் தந்த திருக்குறள். அதன் சிறப்புகளை வார்த்தைகளில் அடக்க முடியாது. திருக்குறளில் சொல்லப்படாத வாழ்வியல் கருத்துகளே இல்லை என்று சொல்லுமளவிற்கு அனைத்து தரப்பு மக்களும் நல்வாழ்க்கை வாழ அவர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றக்கூடிய வகையில் நீதி கருத்துக்கள் ஏராளம் உள்ளன. குறிப்பாக தொழிற்நுட்ப மோகத்தால் தங்கள் சுயத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையினரையும் எதிர்கால சந்ததியினரான குழந்தைகளையும் திருக்குறள் கதைகள் மூலம் மாற்ற முடியும் என்கிறார் ‘திருக்குறள் புவனா’ என்றழைக்கப்படும் புவனேஸ்வரி. அவர் தனது ‘ஹா ஹா லேர்னிங்’ என்ற ஆன்லைன் தளத்தின் மூலம் குழந்தைகளின் தமிழ், ஆங்கில கையெழுத்தை சரி செய்து, நினைவாற்றலையும் பெருக்கி அவர்களுக்கு நன்னெறி புகட்டி வருகிறார்.

‘‘நான் திருப்பூர் மாவட்டத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். அங்குள்ள கல்லூரியில் ஆங்கிலத்தில் எம்.ஏ., எம்.ஃபில் பட்டம் பெற்றேன். அதே கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தேன். என்னுடைய உறவினர் லஷ்மி இராமச்சந்திரன் என்பவர்தான் என் வழிகாட்டி. அவர் சிறந்த மேடை பேச்சாளர். மோட்டிவேஷன் ஸ்பீக்கராகவும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் டிரெய்னராகவும் இருந்தார்.

அவரின் பேச்சை அடிக்கடி கேட்பேன். நானும் அவரைப் போலவே ஆக வேண்டும் என்று நினைத்து அவரைப் பின் தொடர ஆரம்பித்தேன். என்னுடைய பேச்சுத் திறமைகளை வளர்த்துக் கொண்டேன். எனக்கு குழந்தைகள் மற்றும் அவர்களின் நலனில் அதீத அக்கறை உண்டு’’ என்றவர், தன் ஆன்லைன் கற்பித்தல் தளத்தைப் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.

‘‘ஆரம்பத்தில் சில தனியார் கார்ப்பரேட் மையங்களில் உள்ளவர்களுக்கும் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கும் மோட்டிவேஷன் டிரெய்னராகவும் கையெழுத்து பயிற்சியாளராகவும் இருந்தேன்.
அப்போதுதான் என்னிடமுள்ள கதை சொல்லும் திறனை உணர்ந்தேன். எனக்கு இயல்பாகவே கதைகள் சொல்ல வந்தது. என் அண்ணன் மகளுக்கு அடிக்கடி கதைகள் சொல்வேன். கதைகள் எல்லாமே ஏற்கனவே யாரோ எழுதி வைத்தது இல்லை. எல்லாமே என் கற்பனையில் உருவானவை. என் தோழி ஒருவர் தன் மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறாள் என என்னிடம் சொல்லி வருத்தப்பட்டார். அவளுக்கு சில கதைகள் சொன்னேன். அதன் மூலம் அவள் நடத்தையில் நல்ல மாற்றம் இருப்பதாக என் தோழி கூறினாள்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நான் நிறைய குழந்தைகள் சம்பந்தமான கதைகள் எழுதினேன். எல்லாவற்றிற்கும் மூலக்கரு ‘நன்றியுணர்வு’ என்ற திருக்குறளின் தலைப்புதான். அதைச் சுற்றியே நிறைய கதைகளை உருவாக்கினேன். இதை மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்றுத்தர விரும்பியே ‘ஹா ஹா லேர்னிங்’ ஆன்லைன் கற்பித்தல் தளத்தை உருவாக்கினேன்’’ என்றார் புவனேஸ்வரி.

‘‘என்னைப் பொறுத்தவரை நம் வாழ்க்கையே கதைதான். நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள், மனிதர்களை வைத்து குழந்தைகளுக்கு கதைகள் சொல்லும் போது எந்த வாழ்வியல் உண்மைகளையும் எளிமையாக உணர்த்த முடியும். குறிப்பாக ‘நன்றியுணர்வு’ என்ற ஒரு கருத்தை வைத்து குழந்தைகளின் எல்லா பழக்கங்களையும் சரி செய்ய முடியும். நான் திருக்குறளில் கதைகளை எல்லாம் நன்றியுணர்வு வைத்தே உருவாக்கியுள்ளேன். அதனை குழந்தைகளிடத்தில் கையெழுத்துப் பயிற்சி எடுக்கும் போது பயன்படுத்துகிறேன். அதில் நல்ல மாற்றம், வளர்ச்சியை பார்க்க முடிகிறது. பெற்றோர்களும் இந்த முறையை பெரிதும் வரவேற்கிறார்கள். மேலும், சில கதைகள் மூலம் அவர்கள் நடத்தையிலும் மாற்றம் இருப்பதாக பெற்றோர்கள் சொல்லும் போது இன்றைய குழந்தைகளை நல்ல முறையில் வழிநடத்துகிறோம். சிறந்த ஒழுக்கமான மாணவர்களை உருவாக்குகிறோம் என்று பெருமையாக உணர்ந்தேன்.

நான் தற்போது நிறைய டிரெய்னர்களை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறேன். என்னுடைய செயல் பல மாணவர்களை சென்றடைய வேண்டும். மாணவர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இரண்டு மாதங்கள் பயிற்சிகள் வழங்கப்படும். தினமும் காலை 4.30 முதல் 5.30 வரை வகுப்புகள் இருக்கும். இரண்டு மாதங்கள் முடிவில் தமிழ், ஆங்கில மொழியில் மாணவர்களின் கையெழுத்து, நினைவாற்றல் மற்றும் பிரெய்ன் டெவலப்மென்ட் எல்லாவற்றையும் வெளிப்படையாக பார்க்கலாம். பயிற்றுநர்களுக்கு முதல் கட்டமாக பத்து மாணவர்களை நாங்களே தந்துவிடுவோம். அதன் மூலம் அவர்கள் தங்கள் பயிற்சி வகுப்புகளை பெருக்கலாம். இதுவரை ஏராளமான மாணவர்களை உருவாக்கியிருக்கிறேன்’’ என்கிறார் திருக்குறள் புவனா.

‘‘என் பயிற்றுமுறையால் மாணவர்கள் கையெழுத்து மட்டுமல்ல நினைவாற்றல், நேர்மை, ஒழுக்கம், நல்லெண்ணங்கள், பழக்க வழக்கங்கள், மதிக்கும் பண்பு ஆகியவும் வளர்கின்றன. திரைப்படங்களில் காட்டப்படும் சைக்காலஜிக்கல் டிராமாக்களையே இன்றைய இளைஞர்களும் குழந்தைகளும் உண்மை என்று நம்பி அவர்களை பின் தொடர்கின்றனர். திருக்குறள் தந்த திருவள்ளுவர், ஞானம் என்ற ஒன்றே எல்லாவற்றையும் மாற்றும் திறவுகோல் என்கிறார். அதனை எளிமையாக குழந்தைகளுக்கு கற்பிக்கிறேன்.

நான் பயிற்சியின் போது குழந்தையாகவே மாறி அந்த தோணியிலேயே கதை சொல்லும் விதம் எல்லா குழந்தைகளையும் கவர்கிறது. இந்த மாதிரியான கருத்துகள் அடங்கிய வேல்யூ எஜூகேஷன் கல்வியை எல்லாப் பள்ளிகளிலும் கொண்டு வர வேண்டும். இன்றைய மாணவர்களுக்கு இதைத்தான் அதிகமாக சொல்லித்தர வேண்டும். குருகுலக் கல்வியிலும் ஒழுக்கம், மரியாதை, நேர்மை, பணிவு ஆகியவற்றிற்கு பிறகே மொழிக்கல்வி கற்பிக்கப்பட்டது. அடிப்படை வாழ்வியல் கல்வி மற்றும் திறன்களே மனிதர்களை முழுமையாக்குகின்றன. இதனை மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கற்றுத் தருவதே என் வாழ்நாள் கடமை மற்றும் பொறுப்பாக கருதுகிறேன்’’ என்கிறார் திருக்குறள் புவனா.

தொகுப்பு: கலைச்செல்வி

 

Tags : Kungumam Dhoshoi ,Thiruvalluwa ,
× RELATED திருமண ஆடைகளும் வாடகைக்கு கிடைக்கும்!