×

21 மணிநேர மீட்பு போராட்டம் தோல்வி; ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி: கண்ணீரில் மூழ்கிய அரியானா கிராமம்

அம்பாலா: அரியானா மாநிலத்தில் 220 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நான்கு வயது சிறுவன் 21 மணிநேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் தனியோரா கிராமத்தை சேர்ந்த விவசாயி மஞ்சித் என்பவரின் தந்தை கர்னைல் சிங் நேற்று அதிகாலை வயலுக்கு வேலைக்கு சென்றார். அவருக்கு உணவு கொடுக்க மஞ்சித் தனது மகன் நிர்வைர் சிங் (4) என்பவனுடன் காலை 6.30 மணியளவில் வயலுக்கு சென்றார். அங்கு தந்தை வேலை செய்து கொண்டிருந்த நிலையில், சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கிருந்த 220 அடி ஆழமும், 9 அங்குல அகலமும் கொண்ட திறந்தவெளி ஆழ்துளை கிணற்றில் சிறுவன் மண்ணை வீசியுள்ளான்.

எதிர்பாராத விதமாக ஈரமான மண் சரிந்ததால் சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் மீட்க முயன்று தோல்வியடைந்தனர். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, சுமார் 21 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பிறகு இன்று அதிகாலை 3.40 மணியளவில் சிறுவன் வெளியே எடுக்கப்பட்டான். உடனடியாக அம்பாலா கன்டோன்மென்ட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டான். அங்கு பரிசோதித்த மருத்துவர், ‘சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டான்’ என்று தெரிவித்தார். இதுகுறித்து துணை கமிஷனர் அஜய் சிங் தோமர் கூறுகையில், ‘ஆழ்துளை கிணற்றை மூடாமல் அலட்சியமாக இருந்தவர்கள் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளை முறையாக மூட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார். கடந்த மாதம் பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் 20 முதல் 30 அடி ஆழத்தில் விழுந்த சிறுவன் (4) ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ariana ,Ambala ,Ariana state ,Ambala District ,Daniora ,
× RELATED மும்பையில் கனமழை காரணமாக சாலைகளில்...