×

கவலைகளை களைவார் கயிலாசநாதர்

தமிழும், பக்தியும், வரலாற்று மணமும் பின்னிப் பிணைந்து கலைகளின் கருவூலமாக விளங்குகிறது ராசிபுரம், கயிலாசநாதர் கோயில். அருணகிரிநாதரின் பாடல் பெற்ற தலம்.
கயிலாசநாதர் திருக்கோயில் என்றாலே காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னனால் எழுப்பப் பெற்ற கயிலாசநாதர்தான் நம் நினைவில் நிழலாடும். அதனை கிழக்குக் கயிலாயம் என்பர்.
இந்த திருக்கோயிலை மேற்கு கயிலாயம் என்று ஆய்வாளர்கள் அழைப்பர். பாண்டியர்களும், பல்லவர்களும், சோழர்களும் கோயில்கள் எழுப்புவதில் ஆர்வமுடையவர்கள்.
ஆனால், ராசிபுரக் கோயிலை எடுப்பித்தவர் கடை ஏழு வள்ளல்களுள் ஒருவனான கொல்லி ஆண்ட வல்வில் ஓரி ஆவார். பிறகு வந்த பாண்டியர்கள், கோயிலை விரிவுபடுத்தினார்கள்.
ஒரு சமயம், வல்வில் ஓரி வேட்டையாட இப்பகுதிக்கு வரும்பொழுது, ஒரு வெண் பன்றியைக் கண்டு அதைத் துரத்திச் செல்ல, அது நில்லாமல் `ராஜபுரம்’ என்று அன்று வழக்கத்திலிருந்த இப்பகுதியில் இருந்த அடர்ந்த ஒரு புதரில் சென்றோடி மறைந்தது. விரட்டி வந்த ஓரி, அப்புதரை நோக்கி அம்பு எய்தான். எந்த ஒலியும் கேட்கவில்லை; அதனால் அந்தப் புதரை விலக்கி நோக்கினான். என்னே அதிசயம்! அப்புதரினுள் ஒரு சிவலிங்கம் ஒளி வீசியது.
புல்லரித்து போன வல்வில் ஓரி “வந்தது வெண் பன்றி அல்ல; சிவபெருமானே’’ என்று வியந்து பக்தி மேலிட இருகரங்களையும் தலைக்கு மேலே தூக்கி வணங்கி அதே இடத்தில் ஒரு சிறு கோயிலை எழுப்பினான். இதற்கு சான்றாக இக்கோயிலின் கொடிக் கம்பத்தில் பன்றி உருவமும் மன்னனை குறிக்கும் வகையில் கேடயமும் குறிக்கப்பட்டுள்ளன.
கோயிலின் முதல் வாயிலினுள்ளே நுழைவோம். உள்வாயிலின் இருமருங்கும் சிவ சூரியன், சிவ சந்திரன், சித்தி விநாயகர், கஜலட்சுமி, ஏகாம்பரேஸ்வரர், காஞ்சி காமாட்சி, சர்வ லிங்கேஸ்வரர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, சரஸ்வதி ஆகியோரின் திருவுருவச் சிலைகள் நம் கண்களை கவர்கின்றன. அதற்கு அடுத்து, கிழக்கு நோக்கி செல்லுகிறோம்.
அப்பொழுது முதலில் கண்ணில் படுவது, ஏறக்குறைய 10 அடி உயரமும், 30 அடி நீளமும் கொண்ட கல்வெட்டு.
இதில் தமிழ் மணம் வீசுகிறது. இந்த கல்வெட்டில், திருக்குறளை வெகு நேர்த்தியாக செதுக்கியுள்ளனர். அதுபோல, பல்வேறு தேவார, திருவாசக பாடல்களும் பொறிக்கப்பட்டுள்ளன. அடுத்து, நால்வரின் திருவுருவச் சிலைகளையும், சேக்கிழார் சிலையையும் அமைத்துள்ளனர். கிழக்கு மேற்காக 63 நாயன்மார்களின் சிலைகளும் உள்ளன.
அதற்கு அடுத்து திருத்தொண்டத் தொகையும் எழுதப்பட்டுள்ளது. தெற்கு நோக்கி அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தியை தரிசித்து, மேற்கு நோக்கி நடக்கும்போது விநாயக பெருமானுக்கு அமைந்துள்ள தனிக் கோயிலை கண்டுகளிக்கிறோம்.
தனிக் கோயிலில் வீற்றிருக்கும் கலைமகளை கண்டுகளித்து, மூலஸ்தானத்தின் உள்ளே செல்கிறோம். வாயிலின் மேலே மாணிக்கவாசகர் இயற்றி அருளிய சிவபுராணத்தின்
“நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க’’
– என்றும் முதல் இரண்டடிகள் தனிக் கண்ணாடிக்குள் பொறிக்கப்பட்டு ஒளி விளக்கும் வைத்துள்ளார்கள்.
எப்பொழுதும் அந்த இரண்டடிகள் ஒளி வீசிக்கொண்டே இருக்கின்றன. அவற்றை ஓதிக்கொண்டே எம்பெருமானாகிய கயிலாசநாதரை கண்டு கைகூப்பித் தொழுகின்றோம்.
மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் கயிலாசநாதரை கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் அறம் வளர்த்த நாயகி கண்டு புன்முறுவல் பூக்கின்றாள். அம்பாளுக்கு அருகிலேயே நீண்ட வேலாயுதத்துடன் எழுந்தருளியுள்ள ஆறுமுகனையும், தண்டபாணியையும் தரிசித்து விட்டு, கோயிலின் உள் அழகை பருகிவிட்டு வெளியே வருகிறோம். வெளிப்புறச் சுவரில் திருமந்திரம், பட்டினத்தார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், வள்ளலாரின் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இதற்கு எதிரில், மதில் சுவருக்குள்ளேயே வல்வில் ஓரியின் திருவுருவச் சிலையை வீரப்பார்வையோடு கம்பீரமாக வணங்கி நிற்கும் நிலையில் அமைத்துள்ளார்கள். கடை ஏழு வள்ளல்களுள் ஒருவருமான வல்வில் ஓரியின் வீரத்தை புகழ்ந்து வன்பரணர் இயற்றிய புறநானூறு 152-ஆம் பாடலின் அடிகள் இங்கு எழுதப்பட்டுள்ளன.
“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி’’
– எனத் தொடங்கி
“வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன்’’ என முடிகிறது.
இதனை படிக்கும் நாமும் ஓரியின் வீரத்தை புகழ்ந்தவாறும் கயிலாசநாதரையும், அறம் வளர்த்த நாயகியைப் போற்றியும் வெளியே வருகிறோம்.
இத்தலம், சேலத்திற்கு வடக்கே 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

Tags : Kailashanathar ,Rasipuram ,Kailasanathar Temple ,Arunagrinathar ,Kailasanath ,King Pallava ,Kancheepuram ,
× RELATED ஆழ்வார்களின் அருந்தமிழில் வேங்கடவன் பெருமை