×

மந்திர உபதேசத்தை திருப்பி கொடுத்தான்!

வாழ்வதற்காக, சாப்பிட வேண்டுமே தவிர; சாப்பிடுவதற்காகவே வாழக்கூடாது. இதை விளக்கும் இந்த நிகழ்வு, 17-ம் நூற்றாண்டில் நடந்தது. இளைஞன் ஒருவன்; சொந்த பந்தம் எதுவும் கிடையாது. படிப்பறிவு கிடையாது; வேலை செய்யத்தயாராக இல்லை அவன். அவனுடைய எண்ணம் எல்லாம், நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பது மட்டுமே!
யார் வீட்டில் நல்லது – கெட்டது நடந்தாலும் தவறாமல் போய்விடுவான்; முதல் பந்தியில் உட்கார்ந்து மூக்குப்பிடிக்கச் சாப்பிட்டு விட்டுத் திரும்புவான் அவன். (வளமான சாப்பாட்டைத் தேடியலைந்த அவன் பெயர் மூல நூல்களில் இல்லை. நாம் கற்பனையாக `வளவன்’ எனப்பெயர் சூட்டுவோம்) அந்த நேரத்தில், ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த மன்னர் வீர சிவாஜி, தன் குருநாதரான ராமதாசர் இருந்த காட்டிற்கு அடிக்கடி செல்வார்.
அங்கே இருக்கும் அனைவருக்கும், அரசவிருந்து வைப்பார். இது தெரிந்த வளவன், தன் வழக்கப்படி அங்கு போய், அரசவிருந்தைச் சாப்பிட்டான்.
“ஆகா! இந்த ராமதாசர்கூட இருந்தால், நல்ல சாப்பாட்டிற்குப் பஞ்சமே இருக்காது’’ என்று எண்ணி, ஒருநாள் நேரே ராமதாசரிடம் போனான்.
“சுவாமி! நான் தனி ஆள். உறவு என்று சொல்ல, யாரும் இல்லை. நீங்களோ பெரிய மகானாக இருக்கிறீர்கள், உங்களை அண்டியிருந்தால், உணவுக்கும் உடைக்கும் பஞ்சமே இருக்காது என்று எண்ணியே, உங்களிடம் வந்திருக்கிறேன்’’ என்றான் வளவன். அவ்வாறு சொன்ன அவனைச் சில விநாடிகள் உற்றுப் பார்த்தார் ராமதாசர்;
“அரிதான மனிதப்பிறவி கிடைத்தும், ஆத்ம முன்னேற்றத்தைப் பற்றித் துளிக்கூட நினைக்காமல், வெறும் வயிற்றுப்பாட்டைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறானே!’’ என்று நினைத்தார்.
“இவனைத் திருத்த முடியாது. இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம்’’ என நினைத்த ராமதாசர், வளவனை நீராடி வரச் சொல்லி, அவனுக்கு மந்திர உபதேசம் செய்தார். அதற்குள் ராமதாசரின் சீடன், பிட்சை எடுத்த தானியத்தோடு வந்தான். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழும் மகானான ராமதாசர், சீடன் கொண்டுவந்த தானியத்தை மாவாக்கி, ரொட்டி தயாரித்தார். சீடனுக்கும் வளவனுக்கும் தந்துவிட்டு, தானும் உண்ணத் தொடங்கினார். குருவும் சீடனுமாக ரொட்டிகளைச் சுவைத்து உண்ணும்போது, தன் கையில் தரப்பட்ட ரொட்டிகளை வெறுப்புடன் பார்த்தான் வளவன்;
“சை! இதை மனுஷன் தின்பானா? இதைப்போய் இப்படி ரசித்து – ருசித்துத் தின்கிறார்களே!’’ என்று `திருதிரு’வென விழித்தான். அதே சமயம், மன்னர் வீரசிவாஜி, ராமதாசரைத் தேடி வந்தார். அவர் வருவதை, தூரத்திலேயே பார்த்த வளவன், உற்சாகத்தோடு எழுந்து குதித்தான்;
“மன்னர் வருகிறார். வழக்கப்படி ராஜ விருந்துதான்’’ என்பது அவன் எண்ணம். அதற்கு ஏற்றாற்போல், ஏராளமான பிரசாதங்களைக் குரு முன்னால் வைத்து வணங்கி, நின்றார் வீர சிவாஜி. அதைப் பார்த்த வளவனுக்கோ, நாக்கில் எச்சில் ஊறியது. ஆனால் ராமதாசரோ, அந்தப் பிரசாதத்தில் இருந்து சிறிதளவு எடுத்து, சீடனிடமும் வளவனிடமும் தந்து விட்டு, மீதி அனைத்தையும் காட்டில் இருந்த குரங்குகளுக்குப் போட்டு விட்டார். பார்த்துக் கொண்டிருந்த வளவன், எரிச்சல் பட்டான். அதே சமயம் ராமதாசர், தம் ரொட்டியில் இருந்து கொஞ்சம் எடுத்து, வீர சிவாஜியிடம் தந்தார். மன்னரும் அதை ரசித்து – ருசித்துச் சாப்பிட்டார். பார்த்துக் கொண்டிருந்த வளவன் ஆச்சரியப் பட்டான்;
“யாரும் சீண்டக்கூடத் தகுதியற்ற இந்த ரொட்டியைப் போய், மன்னர் இப்படிச் சாப்பிடுகிறாரே! எப்படி? மன்னர் கொண்டு வந்ததையும் குரங்குகளுக்குப் போட்டு விட்டார் குரு நாதர். எனக்கு ஏதும் கிடைக்கவில்லை. குரங்கைவிட நாம் மட்டமாகப் போய் விட்டோமா? இனி இங்கு இருக்கக் கூடாது. வேறு இடம் பார்க்க வேண்டியதுதான்’’ என்று தீர்மானித்தான் வளவன். தீர்மானித்தபடியே, மன்னர் போனதும் ராமதாசரை நெருங்கிய வளவன், “சுவாமி! என்னால் இங்கே சந்தோஷமா இருக்க முடியவில்லை. நான் போகிறேன்’’ என்றான்.
“சரி! அவ்வப்போது வந்து போய்க் கொண்டிரு!’’ என்று வளவனை வழியனுப்பிவைத்தார் ராமதாசர். அங்கிருந்து போன வளவன், தன் ஊருக்குள் நுழைந்தான். அவன் போன நேரம், ஒரு வீட்டில் ஏதோ மந்திர ஓசை கேட்டது. தன் வழக்கப்படி, அந்த வீட்டிற்குள் நுழைந்தான் வளவன். அந்த வீட்டில், குரு உபதேசம் பெற்றதை முன்னிட்டு அந்த வீட்டுக்காரர், குருவுக்குப் பெரும் விருந்து ஏற்பாடு செய்து இருந்தார். உள்ளே நுழைந்த வளவன், தானும் உட்கார்ந்து நன்கு சாப்பிட்டு எழுந்தான்;
“என்ன சாப்பாடு! அற்புதம்! அற்புதம்! பேசாமல் இந்தப் புது குருநாதருடன் இருக்க வேண்டியதுதான்’’ என்ற எண்ணத்துடன், அங்கிருந்த குருநாதரிடம் போய் வணங்கினான்.
“குருநாதா! நான் ராமதாசரிடம் சீடனாக இருந்தேன். அவரால் எனக்கு எந்தப்பலனும் இல்லை; தொந்தரவுதான் ஏற்பட்டது. அதனால், உங்களிடம் சீடனாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்’’ என்றான் வளவன். அந்தக் குருநாதர், “அப்பா! ஒருவரை ஞான குருவாக ஏற்றபின், அவநம்பிக்கை கொண்டு அவரை விட்டு, வேறொருவரிடம் போகக் கூடாது’’ என்றார். வளவன் விடவில்லை; சொன்னதையே சொல்லி வற்புறுத்தினான். பார்த்தார் அந்தக் குருநாதர்;
“சரி! நீ ராமதாசரிடம் போய், அவரிடம் பெற்ற மந்திரத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்து விட்டு வா!’’ என்றார். வளவன் உடனே ராமதாசரிடம் போய்,
“சுவாமி! வேறொரு குருவைத் தேடிக்கொண்டேன். இங்கு இருப்பது, மிகவும் தொந்தரவாக இருக்கிறது. அந்தப் புது குருநாதர், உங்களிடம் பெற்ற மந்திர உபதேசத்தை, உங்களிடமே திருப்பித்தந்து விட்டு வரச்சொன்னார். அதற்காகத்தான் வந்தேன்’’ என்றான். அவ்வாறு சொன்ன வளவனை ஒரு பார்வை பார்த்த ராமதாசர், “அப்படியா? சரி! இந்தா! இந்தத் தண்ணீரை வாயில் ஊற்றிக் கொப்பளித்து விட்டு, கீழே உமிழ்ந்து விடு!’’ என்று சொல்லிச் சிறிதளவு தண்ணீரை வளவனிடம் தந்தார். அதை வாங்கிய வளவன், வாயில் ஊற்றிக் கொப்பளித்து விட்டுக் கீழே உமிழ்ந்தான். அவன் கீழே உமிழ்ந்த தண்ணீர், அப்படியே, ராமதாசர் உபதேசித்த மந்திர வடிவாகவே இருந்தது. அதைப்பார்த்த ராமதாசர்,
“பார்த்தாயா? நான் தந்த மந்திரத்தை, நீ திரும்பிக் கொடுத்து விட்டாய். இனி நீ போய், அந்தப் புதுக் குருநாதரை ஏற்கலாம்’’ என்றார். வளவன் மிகுந்த மகிழ்ச்சியோடு புறப்பட்டுப் போய், புதுக்குருநாதரிடம் நடந்தவற்றை எல்லாம் விரிவாகச் சொன்னான். அதைக்கேட்ட புது குருநாதர், “முட்டாள்! மந்திர எழுத்துக்களைத்திரும்பப் பெறும் ஒரு மகானுபவரைவிட, வேறொரு பெரிய குருநாதர் உலகில் உண்டா? அப்படிப்பட்டவரை விட்டுவிட்டு வந்த உன்னைவிட முட்டாள், உலகத்தில் உண்டா? உன்னைச் சீடனாக ஏற்க மாட்டேன் நான். திரும்பிப் போய்விடு!’’ என்று வளவனை விரட்டி விட்டார். நல்ல உத்தமமான குருநாதர் கிடைத்தும், வாய் ருசிக்காகவே வாழ்ந்த வளவன் வீணாய்ப்போனான். 17-ம் நூற்றாண்டில் நடந்த சம்பவம் இது.

உணர்வோம்! உயர்வோம்!

Tags :
× RELATED இறைவனும் மனிதனும்