சென்னை: ஜவ்வாது மலையில் அதானி குழுமத்தின் ஹைட்ரோ திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களை ஒட்டியுள்ள ஜவ்வாது மலையில் அதானி குழுமம் ஹைட்ரோ மின் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்படும் அபாயம் இருப்பதுடன், பல ஆண்டுகளாக காய்கறி மற்றும் பிற விவசாய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் வளமான விவசாய நிலங்களும் பாதிக்கப்படும்.
மேலும், இயற்கை வளங்கள், நீராதாரங்கள், வனவிலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் ஜவ்வாது மலையின் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என அப்பகுதிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் தலைமையில் உயரதிகாரிகளுடன் நேற்று முன்தினம் நடந்த ஆய்வுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக, நேற்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனளர். இந்நிலையில், திட்டத்தின் அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்களையும் முழுமையாக ஆய்வு செய்து, மக்களின் கருத்துகளையும் உரிய முறையில் கேட்டு அறிந்த பின்னரே எந்த முடிவும் எடுக்க வேண்டும்.
மேலும், வனத்துறை அதிகாரிகள் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி செயல்படக்கூடிய சூழல் இருப்பதாக கூறப்படும் நிலையில், தமிழக அரசு மக்களின் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும். இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால், அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு உருவாகும். மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து, சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறும்.
அதேபோல் சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்தை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு மக்கள் அமைப்புகள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, ஜவ்வாது மலையின் சுற்றுச்சூழல், வனவளம், விவசாய நிலங்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், அதானி குழுமத்தின் ஹைட்ரோ திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு எந்தவித தடையில்லா சான்றிதழ் அல்லது பிற அனுமதிகளையும் வழங்கக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
