×

தனிநபர்கள் தலையீடு இருக்காது கலெக்டர், எஸ்.பிக்கள் சுதந்திரமாக செயல்படலாம்: சென்னை கோட்டையில் நடந்த மாநாட்டில் முதல்வர் விஜய் பேச்சு

 

சென்னை: தனிநபர்கள் தலையீடு இருக்காது. கலெக்டர், எஸ்.பிக்கள் சுதந்திரமாக செயல்படலாம் என்று சென்னை கோட்டையில் நடந்த மாநாட்டில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுடனான இரண்டு நாள் மாநாடு நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகள், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட வன அலுவலர்கள், துறைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மூன்று அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் முதல் நாளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநாட்டில் முதல்வர் விஜய் பேசியதாவது: ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி போன்ற அடிப்படை வசதிக்கெல்லாம் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னையைப் பொறுத்தவரை, நீங்கள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர்வானவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாக துரிதமாக நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதில் நிரபராதிகள் யாரும் தப்பித்தவறி கூட பாதிக்கப்பட்டுவிடக் கூடாது.

மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தை நடத்துவதற்கு முன்னால், மாவட்ட அளவிலான அலுவலர்கள் கூட்டத்தை ஆன்லைனில் நடத்த வேண்டும். விவசாயிகள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கூட்டத்தை முறையாக, சரியாக, கனிவோடு நடத்த வேண்டும். மனு கொடுக்க வருகிற மக்களிடம் கனிவாகக் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுடைய பிரச்னை என்னவென்பதை புரிந்துகொண்டு உடனடியாக அதற்குரிய நடவடிக்கையை எடுத்துத் தீர்வு தர வேண்டும்.

மேலும், திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை வேளையில் கள ஆய்வுக்குச் செல்ல வேண்டும். வேலை செய்வது, மனு வாங்குவது மட்டும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வேலையல்ல. தொடர் கண்காணிப்பு மிகவும் முக்கியம். அதற்காக ஒரு அலுவலரை நியமித்து தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களிடம் குறையைக் கேட்பதைவிட, அதைத் தீர்ப்பது மிகவும் முக்கியம்.

மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம்-ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பித்துவிடாத வகையில் உடனடியாகத் தீர்வு கிடைப்பதற்கு சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையோடு கலந்தாலோசித்து, எந்தவொரு சம்பவமும் நடப்பதற்கு முன்னதாகவே மூலகாரணத்தைக் கண்டறிந்து, குற்றச் சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்களின் நடத்தையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இதற்காக, வருவாய்த்துறை, காவல்துறை அனைத்துத் தகவல்களையும் சேகரித்து, அதைச் சரிபார்த்து, முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

முக்கியமாகப் பெண்கள் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கு உரிய சிறப்பு ஏற்பாடுகள் செய்தே ஆக வேண்டும். மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் அருகிலுள்ள கடைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் நேர்வில் அவ்வப்போது அங்கு சோதனை நடத்த வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கித் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.

கல்வி ஒரு கொண்டாட்டம். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தைப் போதிக்கிற, சாதிய வேறுபாடுகளைத் தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகின்றபோதுதான் கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதைக் கண்காணிப்பதும் உங்கள் கைகளில்தான் உள்ளது.அரசுத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப் படுகின்ற என்பதை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். வெளிப்படை தன்மை அடிப்படையில் இருக்க வேண்டும். அதனால், கலெக்டர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாகச் செயல்படலாம். தனிநபர்களின் தலையீடு இருக்காது. சாதி அடிப்படையிலான பாகுபாடு, வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போக்ஸோ வழக்குகளில் எப்ஐஆர் பதிவில் தாமதம் ஏற்படுவதை சகிக்க கூடாது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் புகார்களை மறைக்கவோ தாமதமாக அனுப்பவோ கூடாது. மாநிலத்தின் சில பகுதிகளில் குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் பதிவாகின்றன. சிறார் குற்றங்களில், கும்பல் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்களில் ஈடுபடும் போக்கு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி இடைநிறுத்தம் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக இருப்பதால், பள்ளி மற்றும் கல்வித்துறைகள் இடைநிறுத்தங்களை நெருக்கமாக கண்காணிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் தடுப்பு குறித்து காவல், வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சட்டவிரோத மலைப்பகுதியில் சட்டவிரோத வடிகட்டல் இடங்கள் பற்றிய தகவல் சேகரிக்க வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லதே செய்யுங்கள், நல்லதே நடக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

* புலம்பெயர் தொழிலாளர்களிடையே கஞ்சா புழக்கம்

‘‘திருவள்ளூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற எல்லையோர மாவட்டங்கள் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்படுவதையும், உரிய அனுமதியின்றி கனிம வளங்கள் கடத்தப்படுவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் போன்ற தொழில்துறை மண்டலங்களில் குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர் மக்களிடையே கஞ்சா, குட்கா மற்றும் பிற போதைப்பொருள்களின் பரவல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழும் பகுதிகளில் இலக்கு கொண்ட விழிப்புணர்வு மற்றும் அமலாக்கம் நடத்தப்பட வேண்டும்’’ என்று விஜய் தெரிவித்தார்.

Tags : Chief Minister ,Vijay ,Chennai Fort ,Chennai ,IAS ,IPS ,Namakkal ,Kavinjar ,Mansion ,Secretariat… ,
× RELATED மீண்டும் மதமாற்ற தடைசட்டமா? பாஜ...