×

அரசு மருத்துவமனைகளில் அத்துமீறி வீடியோ எடுத்தால் நடவடிக்கை: தவெகவினருக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை

 

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. மேலும் மாநிலம் முழுவதும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆங்காங்கே முகாம்களை தொடங்கி வைத்தனர். இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சிலர், ஒரு சில அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று போலியோ முகாம்களை ஆய்வு செய்தனர், குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கினர். அதுமட்டுமல்லாது, அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது கடும் விமர்சனங்களுக்குள்ளானது. மருத்துவமனை நிர்வாகத்திடம் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்சி நிர்வாகிகள் தன்னிச்சையாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவமனைகளுக்குள் அனுமதியின்றி எந்த வீடியோவும் பதிவு செய்யக் கூடாது என்பது விதி. அதேபோன்று புகைப்படங்களும் எடுக்கக் கூடாது. விதிகளுக்குப் புறம்பாக எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும். நோயாளிகள், பொதுமக்களின் தனி உரிமைக்கு இடையூறு செய்வது சட்டப்படி குற்றம்.

அவர்கள் மீது தகவல் தொழில்நுட்பச் சட்ட பிரிவு (66)ன் படி, மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகளை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்தல் மற்றும் பிஎன்எஸ் பிரிவு (221)ன் படி, அரசுப் பணிகளுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். விளம்பர நோக்கத்தில் நோயாளிகளின் தனி உரிமை பாதிக்க கூடாது. விழிப்புணர்வுடன் இருக்க சுகாதார பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Health Department ,Thavekavis ,Chennai ,Tamil Nadu ,Tamil Nadu Victory Party ,
× RELATED மீண்டும் மதமாற்ற தடைசட்டமா? பாஜ...