×

பாட்னாவில் உள்ள வனஸ்பதி தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

பீகார்: பீகார் தலைநகர் பாட்னாவின் மகுலி சாலையில் உள்ள வனஸ்பதி தயாரிக்கும் டால்டா தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட திரவ பொருட்கள் இருந்ததால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

வானுயரத்திற்கு எழும்பிய புகையால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதால் சுற்றுவட்டார மக்கள் அச்சமடைந்திருக்கின்றனர். கிடங்கில் இருந்த ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், உள்ளூர் காவல்துறை தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் பல தீயணைப்புப் பிரிவுகளாக களம் இறங்கி உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.

அவசர கால நடவடிக்கையாக சுமார் 22-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து பல மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் தீ எப்படித் தொடங்கியது என்பதை அறிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அருகாமையில் பல கிடங்குகள் அமைந்திருந்தாலும், பாதிக்கப்பட்ட கிடங்கு அதிக மக்கள்தொகை கொண்ட குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தள்ளி அமைந்துள்ளதால், அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்குத் தீயினால் உடனடி அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவ்வித உயிர் சேதமோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை.

சேதத்தின் சரியான அளவு இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றும், ஆனால் முதற்கட்ட மதிப்பீடுகளின்படி பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் அழிந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். கிடங்கின் பின்புறப் பகுதியில் தொடங்கிய தீ, பின்னர் முழு வளாகத்தையும் சூழ்ந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தீ அருகில் உள்ள பிற பகுதிகளுக்குப் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Vanaspati ,Patna ,Bihar ,Makuli Road ,
× RELATED கேரளத்தில் மீண்டும் தென்மேற்கு...