செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் தேவாலயங்கள், மருத்துவமனை, பள்ளிகள் இயங்கும் இடத்தில் அரசு டாஸ்மாக் கடை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த கடையை மூட வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இதன் விளைவாக கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இந்த கடையை மூடுவதாக அரசு அறிவித்தது. இந்நிலையில் மூடப்பட்ட கடையை மீண்டும் திறப்பதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனை கண்டித்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி விண்ணரசி மாதா தேவாலய பொதுமக்கள், கிறிஸ்தவர்கள் இணைந்து நேற்று காலை 100க்கு மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை தெரிவித்தனர்.
இதனையடுத்து மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் மற்றும் போலீசாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு போலீசார் தரப்பில் டாஸ்மாக் கடையை திறக்காமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து புனித விண்ணரசி அன்னை ஆலயத்தின் பங்கு தந்தை சார்பில், தாம்பரம் காவல் ஆணையருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: நான் மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் கடந்த சுமார் 40 ஆண்டுகளாக புனித விண்ணரசி அன்னை ஆலயத்தின் பங்கு தந்தையாக சேவையாற்றி வருகிறேன். எனது ஆலயத்தில் வார நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் வழக்கமான வழிபாடும், ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் நாள் முழுவதும் ஜெப வழிபாடும் நடைபெற்று வருகிறது. இந்த வழிபாட்டு தளத்தில் கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது அந்த பகுதியில் வசித்து வரும் பிற மதத்தினரும் பங்கேற்று வருகின்றனர். ஆலயத்திற்கு மிக அருகாமையில் கடந்த சுமார் 18 மாதங்களுக்கு முன்னர் அரசு மதுபான கடை ஒன்று தொடங்கப்பட்டது.
இந்த மதுபான கடை தொடங்கப்பட்ட நாள் முதல் ஆலயத்திற்கு மட்டுமல்லாமல், இந்த சாலையில் செயல்பட்டு வரும் அரசுடமை வங்கி, வணிக நிறுவனங்கள், மருத்துவமனை மற்றும் குடியிருப்புகளுக்கு மிகப்பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது. பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக இருந்து வந்த இந்த மதுபான கடையினை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களோடு இணைந்து நாள்தோறும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தி வந்ததன் விளைவாக கடந்த 09.03.2026 அன்று திமுக ஆட்சியில் இந்த கடையை நிரந்தரமாக மூடுவதென அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய கலெக்டரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மூடப்பட்டது.
ஆனால், எங்களின் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும் விதமாக நிரந்தரமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட இந்த மதுபான கடையினை மீண்டும் திறப்பதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருவதாக எங்களுக்கு தெரிய வந்துள்ளது. குடியிருப்பு வளாகங்கள், வழிபாட்டு தளங்கள், அரசு வங்கிகள் செயல்படும் பகுதியில் செயல்பட்டு வந்து, பின்னர் அனைத்து அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகளின் கடும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் விளைவாக நிரந்தரமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 3 மாத காலத்திற்க்குள்ளாகவே மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறியப்படும் அரசு மதுபான கடையினால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வழிபாட்டு தளத்திற்கும் மிகப்பெரும் இடையூறு ஏற்படும் என்றும்,
அதன் தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதையும் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த மூடப்பட்ட மதுபான கடையை மீண்டும் திறப்பதற்கு விண்ணரசி ஆலய பங்கு தந்தை என்ற முறையில் எனது கடுமையான கண்டனங்களையும், ஆட்சேபணைகளையும் தெரிவித்துக் கொள்வதோடு வருகின்ற 30ம் தேதி வரையில் மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்த மதுக்கடையினுடன் இணைந்த மதுக்கூடத்திற்கு அனுமதி நீட்டிப்பு வழங்கவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன். இவர் கூறப்பட்டுள்ளது.
தேவாலயம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஏராளமான கிறிஸ்தவ பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ்படம்: போலீசாரிடம் விண்ணரசி அன்னை ஆலய பங்குத்தந்தை சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
