அணைக்கட்டு, ஜூன் 29: அணைக்கட்டு அடுத்த கவுதமபுரத்தை சேர்ந்தவர் குமார், முன்னாள் ராணுவ வீரர். இவர் கடந்த மாதம் 29ம் தேதி குடும்பத்துடன் கோயில் திருவிழாவிற்காக ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். மறுநாள் காலை 30ம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் வெளிப்புற இரும்பு கதவு கேட், வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறக்கப்பட்ட அதில் வைத்திருந்த 13 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.
இதுதொடர்பாக குமாரின் மகன் அஸ்வின்குமார்(26) அணைக்கட்டு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவந்த நிலையில் இந்த மாதம் 3ம் தேதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா வானாபாடி கிராமத்தை சேர்ந்த உதயகுமாரை(26) கைது செய்தனர். இருப்பினும் அவனது நண்பன் முக்கிய குற்றவாளியிடம் நகைகள் இருந்ததால் அப்போது நகைகள் எதுவும் மீட்கப்படவில்லை. அதைத்தொடர்ந்து உதயகுமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 3 நபர்களை தேடி வந்தனர்.
அவர்கள் அதே பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அணைக்கட்டு போலீசார் அவர்களை பிடித்து நேற்று காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா வானாபாடி கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் (எ) அப்பு (28), அரக்கோணம் பருத்திபுத்துரைச் சேர்ந்த ரஜினி (48), ஆம்பூர் தாலுகா சின்னப்பள்ளிகுப்பத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் தேசாந்த் (33) என்பதும் கூட்டாக சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு நகைகளை திருடி சென்றதும் தெரிய வந்தது. தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 13 சவரன் நகையை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
