வடகடம்பாடி அம்பாள் நகரில் குறைந்த மின்னழுத்தத்தால் பழுதாகும் மின்சாதனங்கள்: அதிகாரிகள் அலட்சியத்தால் மக்கள் அவதி

 

மாமல்லபுரம், ஜூன் 26: மாமல்லபுரம் அருகே வடகடம்பாடி ஊராட்சி அம்பாள் நகர் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதால், அப்பகுதியில் உள்ள வீடுகளில் மின்சாதனங்கள் பழுதாகி வருகின்றன. மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாள் நகர் பகுதியில் சுமார் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அம்பாள் நகர் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில், அதிகமான மின் இணைப்புகள் இருப்பதாலும், அதற்கேற்றவாறு டிரான்ஸ்பார்மர் இல்லாததாலும் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறைந்த மின்னழுத்தத்தால் இப்பகுதியினர் தங்கள் வீடுகளில் மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இது ஒருபுறமிருக்க, பள்ளி – கல்லூரி மாணவர்கள் பாட புத்தகங்களை படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை ஆலத்தூர் மின்வாரிய அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தும், செல்போனில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தும் கண்டும்காணாதது போல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், `வடகடம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வசந்தபுரி பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுதானது. இதையடுத்து ஆலத்தூர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு அதிகாரிகள் புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்தனர். ஆனால் அதே இடத்தில் மற்றொரு டிரான்ஸ்பார்மர் மூலம் அம்பாள் நகர் பகுதிக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் மின்னழுத்தம் குறித்து நாங்கள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை’ என்றனர். எனவே, ஆலத்தூர் மின்வாரிய அதிகாரிகள் அலட்சிய போக்கை கைவிட்டு பழைய டிரான்ஸ்பார்மரை அகற்றி, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Related Stories: