×

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை உலுக்கிய 2 பூகம்பங்கள் ஆயிரக்கணக்கானோர் பலி? ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டம்; 970 பேர் காயம்

காரகஸ்: வெனிசுலாவில் அடுத்தடுத்து நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 970 பேர் காயத்துடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள நாடு வெனிசுலா. இந்நிலையில் வெனிசுலாவில் நேற்றுமுன்தினம் இரவு அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

முதலாவது நிலநடுக்கம் 7.2 ரிக்டர் என்ற அளவிலும், அடுத்த நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளது.  இந்த நிலநடுக்கமானது, கரீபியன் கடற்கரையில் அமைந்துள்ள மோரோன் என்ற பகுதிக்கு மேற்கே, தலைநகர் காரகஸிலிருந்து சுமார் 168 கிமீ தொலைவில், நடுக்கடலுக்கு அடியில் 13 கிலோமீட்டர் ஆழத்திலும் மையம் கொண்டிருந்தது. இதனால் காரகஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒரு நிமிடத்திற்குள், அதைவிட மிக சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் அளவிலான 2வது நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில், மோரோன் பகுதிக்கு தென்மேற்கே 16 கிமீ தொலைவை மையமாக கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து, விர்ஜின் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் காரகஸில் உள்ள வீடுகள், வணிக வளாகங்கள், அடுக்கு மாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் அதிர்ச்சியடைந்த மக்கள், தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்தன.

ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டு மக்களிடம் உரையாற்றுகையில், லா குவைரா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த நிலநடுக்கத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். 970-க்கும் பேர் காயமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடங்களில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றார். நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். ட்ரூஜிலோ,காரபோபோ, அராகுவா, மிராண்டா ஆகிய பிற மாகாணங்களிலும் கட்டிடங்கள் இடிந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மாநிலங்களில் மீட்பு பணிகள் நடந்து வருவதால் பலி எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வெனிசுலாவின் சுதந்திர போராட்ட வீரர் சைமன் பொலிவரின் நினைவாக கொண்டாடப்படும் கரபோபோ போர் ஆண்டு விழா கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அந்த நாட்டில் விடுமுறை தினம் என்பதால் பெரும்பாலானோர் தங்கள் வீட்டிலேயே இருந்தனர். இதனால், பெரும்பாலான மக்கள் உயிர் தப்பினர்.

* மக்களுக்கு எச்சரிக்கை
உயிரிழந்தோர் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும் என கூறப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. மேலும், தொடர் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் யாரும் அவசரப்பட்டு தங்களது வீடுகளுக்குள் செல்ல வேண்டாம் என்றும், பொது இடங்களில் திறந்தவெளியில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* விமான நிலையம் மூடல்
வெனிசுலாவின் முக்கிய விமான நிலையமான சைமன் பொலிவார் சர்வதேச விமான நிலையம் கடுமையான சேதமடைந்ததை அடுத்து, அது உடனடியாக மூடப்பட்டுள்ளது. வெனிசுலாவின் கடுமையான பாதிப்புகள் காரணமாக பெரும் மனிதாபிமானப் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

* ஆன்ட்ராய்டு போன்களில் எச்சரிக்கை செய்தது கூகுள்
வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில நொடிகள் முன்பாக, லட்சக்கணக்கான மக்களின் ஆன்ட்ராய்டு போன்களுக்கு எச்சரிக்கை செய்தியை கூகுள் அனுப்பி அலர்ட் செய்தது. நிலநடுக்கத்தை கூகுள் முன்கூட்டியே கணிக்கவில்லை என்றாலும், செல்போன்களில் உள்ள கூகுளின் ஆன்ட்ராய்டு நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பு, ஆரம்பகட்ட நில அதிர்வுகளை வைத்து அலர்ட் செய்தியை அனுப்பியிருக்கிறது. இது பேரிடருக்கு முன்பாக, நாம் தப்பிக்க சில நொடிகள் அவகாசம் அளிக்கக்கூடியதாக இருக்கும்.

* இந்தியா உதவி
இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெனிசுலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ள பேரழிவு ஆழமான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்களின் சார்பில், வெனிசுலா அரசாங்கத்துக்கும் மக்களுக்கும், குறிப்பாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதோடு, இக்கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட அனைவருடனும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம். சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

* ஐநா அறிக்கை
ஐ.நா. மனித உரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கையில், இந்த மாபெரும் துயரச் சம்பவத்திற்கான தேசிய மற்றும் சர்வதேச நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் மனித உரிமைகளுக்கான முழுமையான அர்ப்பணிப்பே வழிகாட்டியாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

* 100 கட்டிடங்கள் தரைமட்டம்
நிலநடுக்கத்தால் வெனிசுலாவின் துறைமுக நகரான லா குவைராவில் மட்டும் 100 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன என்று ஐநாவின் மனிதாபிமான உதவி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

* அமெரிக்கா உதவி
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலாவுக்கு தேடுதல் மற்றும் மீட்பு படைகளை உடனே அனுப்புவதாகவும் அந்த நாட்டுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதாகவும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய அறிவிப்புக்கு வெனிசுலா இடைக்கால அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். இதை தவிர கத்தார், மெக்சிகோ, எல்சல்வாடார் நாடுகளும் உதவி செய்வதாக அறிவித்துள்ளன.

* பலி எண்ணிக்கை ஒரு லட்சம் வரை உயரலாம்
வெனிசுலாவில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. மீட்புப்பணிகள் முடிவடையும் போது பலி எண்ணிக்கை ஒரு லட்சம் வரை உயரலாம் என்று அமெரிக்காவின் புவியியல் துறை எச்சரித்துள்ளது.

* 100 ஆண்டுகளில் முதல் முறை
வெனிசுலா கடந்த ஒரு நூற்றாண்டில் கண்டிராத மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும். மோசமான நிலநடுக்கத்தையடுத்து நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

* ஜப்பானிலும் நிலநடுக்கம்
வெனிசுலாவை தொடர்ந்து ஜப்பானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானது. இதனால் பெரியதாக சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Tags : Venezuela ,CARACAS ,north ,South America ,
× RELATED வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த...