×

முதல்வர் அனுமதி கிடைக்காததால் கிளாம்பாக்கம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் 300 புதிய அரசு பேருந்துகள் 3 நாட்களாக காத்திருப்பு: தங்குவதற்கு இடம், உணவு இல்லாமல் போக்குவரத்து கழக ஊழியர்கள் தவிப்பு

சென்னை: போக்குவரத்து கழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்ட 300 அரசு பேருந்துகள், முதல்வர் அனுமதி கிடைக்காததால், 3 நாட்களாக கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த பேருந்துகளின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் அடிப்படை வசதியின்றி பிளாட்பாரத்தில் பரிதவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தென் மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இங்கு பண்டிகை காலங்களில் இரவு நேரத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதன் எதிரொலியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, கும்பகோணம், நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி ஆகிய கோட்டங்களில் புதிதாக அரசு பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, போக்குவரத்து கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 300 பேருந்துகளின் தொடக்க விழா, கடந்த 22ம் தேதி முதல்வரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதற்காக புதிய பேருந்துகள் நாகர்கோவில், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 24 நகரங்களில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், 22ம் தேதியும், 23ம் தேதியும் தொடக்க விழா நடத்தப்படாத நிலையில், 300 புதிய பேருந்துகளும் சென்னை கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்துக்கும் 2 ஓட்டுனர்கள், ஒரு நடத்துனர் வீதம் மொத்தம் 900 ஊழியர்களும் சென்னைக்கு வந்துள்ளனர்.

புதிய பேருந்துகளின் இயக்கம் எப்போது தொடங்கி வைக்கப்படும் என்பது தெரியவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஓட்டுனர்களும், நடத்துனர்களும் தங்குவதற்கு இடமும், உணவும் இல்லாமல் கடந்த 4 நாள்களாக தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு பேருந்தை ஒருமுறை சென்னைக்கு எடுத்து வந்து மீண்டும் எடுத்துச் செல்வதற்கு குறைந்தது ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும்.

தொடர்ந்து 3வது நாளாக இந்த பேருந்துகள் எந்த பயன்பாடும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் இழப்பு இன்னும் பல மடங்கு அதிகமாக இருக்கும். ஏற்கனவே போக்குவரத்து கழகங்கள் கடும் இழப்பில் இயங்கி வரும் நிலையில், இது போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் சுமையையே ஏற்படுத்தும், என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து அரசு பேருந்துகளின் டிரைவர்கள் மற்றும் கன்டக்டர்கள் கூறுகையில், ‘‘சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதிலும் உள்ள மதுரை, கும்பகோணம், விழுப்புரம், கோயம்புத்தூர், நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி உட்பட 8 கோட்டங்களில் 300 புதிய அரசு பேருந்துகள் கடந்த 22ம் தேதி முதல்வரின் பிறந்தநாள் அன்று இயக்கப்படுவதாக இருந்தது. ஆனால் இதுவரை இயக்கப்படவில்லை.

இதனால் வீட்டிற்கு கூட செல்ல முடியாமல் கடந்த 3 நாட்களாக அனைத்து பேருந்துகளின் டிரைவர்கள் மற்றும் கன்டக்டர்கள் பேருந்து நிலையத்தின் உள்ளே இருக்கும் பிளாட்பாரங்களில் படுத்து தூங்க வேண்டிய அவல நிலை உள்ளது. உணவு, மாற்று உடை இல்லாமல், குளிக்கவும் முடியாமல் கொசுக்கடியில் காத்திருக்கிறோம். இதில் சுகர், பிபி மற்றும் இதய பிரச்னை உட்பட பலர் நோய்வாய்ப்பட்டு கடும் அவதிப்பட்டு வருகிறோம். எனவே இதுகுறித்து முதல்வர் தலையிட்டு பேருந்துகளை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றனர்.

Tags : Kalampakkam ,Koyambedu ,Chief Minister ,Transport Corporation ,Chennai ,
× RELATED ‘ஆட்சி மாற்றத்துக்கு அவங்கதான்...