×

இளைஞர் அஜித்குமார் மரணம்.. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல: செல்வப்பெருந்தகை

சென்னை: காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல; அவர்களின் செயல் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருப்புவனம் காவல்துறையினர் அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையின் போது, காவலாளி அஜித் குமார் இறந்து விட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக, 6 தனிப்படை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

காவலாளி அஜித் குமாரின் உறவினர்கள் காவல்துறையினர் கடுமையாக தாக்கியதால்தான் இறப்பு ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். சமீப காலமாக, லாக்அப் இறப்பு நடைபெறுவது மிகவும் வேதனையளிக்கிறது. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல; அவர்களின் செயல் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

வரும்காலங்களில் இதுபோன்ற துர்ச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளவேண்டும். இவ்விஷயம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முறையான ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post இளைஞர் அஜித்குமார் மரணம்.. காவல்துறையினர் சிலர் அத்துமீறி செய்யும் தவறுகள் ஏற்கத்தக்கதல்ல: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : Ajit Kumar ,Chennai ,Tamil Nadu Congress Committee ,Sivaganga District ,Madapuram ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்