×

திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண்ணிற்கு கத்திக்குத்து: காதலன் வெறிச்செயல்

திருப்பூர்: திருப்பூர் காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (35). இவர் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை செய்த வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து கொண்டனர். குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் குழந்தையுடன் கவிதாவின் கணவர் பிரிந்து சென்றார். தனிமையில் வசித்து வந்த கவிதாவுக்கும் நாகப்பட்டினத்தை சேர்ந்த பிரகாஷ் (38) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று பிரகாஷிடம் கவிதா வற்புறுத்தி வந்தார்.

இதனால் இருவருக்கும் இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கவிதா வீட்டில் இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். பின்னர் திருமணம் செய்துகொள்ளுமாறு கவிதா வற்புறுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ் சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து கவிதாவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கவிதா அலறி சத்தம்போட்டார். கவிதாவின் அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பொதுமக்கள் வருவதை பார்த்த பிரகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் கவிதாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை தேடி வருகின்றனர்.

The post திருமணத்திற்கு வற்புறுத்திய இளம்பெண்ணிற்கு கத்திக்குத்து: காதலன் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Kavita ,Tiruppur Kamanayakanbalam ,Thiruppur Banyan Company ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...