நன்றி குங்குமம் டாக்டர்
யோகா ஆசிரியர் செளந்தரராஜன்.ஜி
உள்ளம் உருகுதய்யா…
சமீபத்தில் ஒரு நூல் அறிமுக விழாவில் முதலில் பேசியவர், ’அந்த நூலை படிக்கையில் மனதில் புன்னகையும், மனநிறைவுமாகப் படித்து முடித்தேன்’ என்று கூறினார். அதே மேடையில் பேசிய மற்றொரு எழுத்தாளர், அந்த நூல் கொடுத்த உணர்வுநிலைகளையும் அந்த நூல் கிளப்பிய நினைவுகளையும் பரவசமாக நினைவுகூர்ந்தார். அந்த நூலுக்கு ஏற்புரை வழங்கிய எழுத்தாளர் ‘தான்’ கண்டடைந்ததைச் சொன்னார். தனது ‘புத்தி’ கூர்மை வெளிப்படும் விதமாகவும் பேசினார்.
இந்த மூவரில், ஒருவர் மனதிலிருந்து பேசுகிறார். ஒருவர் ‘நினைவு’ எனும் அடுக்கிலிருந்து பேசுகிறார். மூன்றாமவர் ‘தான்’ மற்றும் ‘புத்தி’ எனும் நிலையிலிருந்து பேசுகிறார். ஒரு பொது நிகழ்ச்சியானாலும், தனிப்பட்ட வாழ்க்கை ஆனாலும் நாம் நம்மை இந்த மூன்று நிலைகளில் இருந்துதான் வெளிப்படுத்துகிறோம். நாம் சொல்லும் சொற்களானாலும், செய்யும் செயல்களானாலும், நினைக்கும் எண்ணங்களானாலும், உணரும் உணர்ச்சிகளானாலும், சிந்திக்கும் புத்தியானாலும் அதை ‘மனம் செயல்படுகிறது’ எனச் சொல்கிறோம்.
ஆனால், மனம் என்பது தனித்துச் செயல்பட முடியாத ஒரு இயந்திரம். அந்த இயந்திரம் மேலும் மூன்று காரணிகளை, கச்சாப்பொருட்களை இணைத்துக்கொண்டே இயங்க முடியும் என்கிறது இந்திய மரபு.எனக்கு மனசே சரியில்ல அல்லது எனக்கு மனசுக்கு சந்தோசமா இருக்கு போன்ற நாம் அன்றாடம் பயன்படுத்தும் மனசு எனும் சொல், கிட்டத்தட்ட இந்திய தரிசனங்கள் அனைத்திலும் நான்கு அல்லது அதற்கும் மேலான இயக்கங்கள் இணைத்த ‘மனஸ்’ என்ற சொல்லில் சுட்டப்படுகிறது.
ஆதி முதல் இன்றைய வடிவம் வரையான அனைத்து யோக கல்வியிலும் பெரும்பாலும் ‘மனம்’ எனும் நிலையை சமன் செய்வது அல்லது ஒருமுகப்படுத்துவது எனும் நோக்கத்தை மையமாக வைத்தே பாடத்திட்டங்கள், பயிற்சிகள், தியானங்கள் என மிக நீண்ட பயணம் முன்வைக்கப்படுகிறது. அதிலும் முழுமையான யோகத்தை மையமாகக் கொண்ட மரபார்ந்த யோக கல்வித் திட்டங்கள் ‘மனம்’ எனும் இந்த தளத்துக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
அதற்கு, ‘துக்க காரணம், மோக்ஷ சாதனம்- மனம்’ எனும் பிரபலமான வரியை முன் வைக்கிறது. அதாவது துன்பத்துக்கு எது காரணமோ அதுவே மோட்சத்துக்குச் செல்வதற்கு சாதனமாகவும் இருக்கிறது. அந்த சாதனத்துக்கு பெயர் ‘மனம்’ என்கிறது யோக மரபு. இதை மனம் எனும் ஒற்றை வார்த்தையில் சுருக்கி விடாமல், மனதை அதன் அடுக்குகளை நான்கு அலகுகளாகப் பிரிக்கிறது. மனம் செயல்படுவதற்கும், செயலற்று வீற்றிருப்பதற்கும், சித்தம், புத்தி அகங்காரம், மனஸ் ஆகிய நான்கின் துணை தேவையாயிருக்கிறது.
முதலில் சித்தம், இதைப் பெரும்பாலான இந்திய மரபுகள் ‘நினைவின் அடுக்குகள், ஞாபகம், நினைவுத் தொகுப்பு என வகைப்படுத்துகின்றன. யோக மரபு ‘சித்தம்’ என்பதற்கு ஆழ்மனம் மற்றும் ‘நினைவுத் தொகுப்பு’ எனக் கூறுகிறது. உதாரணமாக நான் இன்று முதன் முதலாக ஒருவரைப் பார்க்கிறேன். எந்தக் காரணமுமின்றி அவரை எனக்குப் பிடிக்கவில்லை. அவருக்கும் எனக்கும் எந்தப் பகையுமில்லை, முன்விரோதமும் இல்லை. அவர் எனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. இருப்பினும் நான் அவரை வெறுக்கிறேன் என்றால், அது என் சித்தத்தில் பதிந்திருக்கும் ஒரு நினைவுத் தொகுப்பில் இருந்து எழும் செயல்.
இந்த சித்தம் எனும் அடுக்கில் நினைவுகள் சேகரமாகிக்கொண்டே இருக்கின்றன. அதுவே மனம் செயல்படுவதற்கான முதல் கச்சாப்பொருளை அளிக்கிறது. இங்கே மனிதர்கள், காலம், நிகழ்வுகள் என அனைத்தும் சேமிக்கப்படுகின்றன. இந்தப் பிறவியில் மட்டுமல்ல, பல பிறவிகளாகத் தொடர்ந்து இது சேமிக்கப்படுகிறது. ஆகவே நான் ஒருவரை வெறுப்பதற்கு, விரும்புவதற்கு நான் மட்டுமே காரணமல்ல. என்னுள் உயிரணுக்கள், மரபணுக்கள், வடிவில் உறையும் என் மூதாதைகளும் காரணமாகின்றனர். அது புலன் உறுப்புகளாலும், வெளிப்புறச் சூழலாலும் தூண்டப்பட்டு, பின்னோக்கிச் சென்று ஒரு நினைவு இன்றைய தளத்துக்கு இழுத்து வந்து மனதுக்குத் தருகிறது. அதை வைத்து மனம், துன்பம், ஏக்கம், மகிழ்ச்சி என ஏதேனும் ஒன்றாக இயங்கத் தொடங்குகிறது.
அடுத்தது புத்தி எனப்படும் தகவல்கள். அவற்றைப் பகுத்து அறியும் அறிவு அல்லது அறிவைப் பயன்படுத்தி வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதல், அதன் மூலம் மனம் இயங்குதல். புத்தி எனும் இந்த கச்சாப் பொருளைக்கொண்டு மனம் தெளிவையோ, துன்பத்தையோ பெருக்கிக்கொள்கிறது. புத்தியால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை நிராகரிப்பதன் வழியாக மனம், கோபம், விரக்தி, சலிப்பு போன்ற நிலையை அடைகிறது, மூன்றாவதாக அகங்காரம் எனும் நிலையால் இயக்கப்படும் மனம். இது நாம் அன்றாடத்தில் பயன்படுத்தும் ‘ஆங்காரம் பிடிச்சவன்’ என்கிற பதத்தில் சொல்லப்படவில்லை. தன்முனைப்பு எனும் அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. புத்தியும் , சித்தமும் இணைத்து உருவாக்கிய சுயம் இங்கே திகழ்கிறது.
நான், எனது, எனக்கு எனத் தன்னைச் சுற்றியே உலகம் இயங்குகிறது அல்லது இயங்க வேண்டும் என்கிற தன்முனைப்பு. வெல்ல வேண்டும், புகழ்பெற வேண்டும் என்கிற உந்துதலுக்கும், சுய பட்சதாபம், சுய கழிவிரக்கம், தன்னைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற மனச்செயல்களுக்கும், ‘அகங்காரம்‘ எனும் நம்மோடு உடன்பிறந்த மூன்றாவது கச்சாப்பொருளே காரணம்.
மேலே சொல்லப்பட்ட மூன்றின் துணை கொண்டு செயல்படும் ஒரு இயந்திரத்துக்குப் பெயர்தான் ‘மனம்’. ஆச்சரியமாக இந்த இயந்திரத்தில் ஏதேனும் ஒரு கச்சாப்பொருள் போடப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
நாம் வீட்டில் அமர்ந்திருக்கிறோம். கண் முன்னே இருக்கும் பருப்பொருட்கள் அனைத்தும் மனதை ஏதோ ஒருவகையில் இயக்குகின்றன. நாற்காலி , கணினி, காபி அருந்திவிட்டு வைத்த டம்ளர் என கண்ணில் படும் ஒவ்வொரு பொருளும், மனதைச் சென்று தொடுகிறது. சொல்லாகவோ செயலாகவோ நம்மை இயக்குகிறது. ரொம்ப நேரமா இந்த டம்ளர் இங்க இருக்கு, எடுத்துட்டு போய் உள்ளே வை என ‘உள்ளத்திலிருந்து ஒரு குரல் அல்லது சமிக்ஞை வருகிறது. உடனே செயல்படுகிறோம் அல்லது சலிப்படைகிறோம். ஆக கண்கள் வழியாக வந்த புலனுணர்வு மனதை சென்று தொட்டு செயல்பட வைக்கிறது.
இப்படி ஐந்து புலனுணர்வுகள் மூலமாகவும் உள்ளே வரும் சமிக்ஞைகள் ஏற்கனவே நம்மில் உள்ள, சித்தமெனும் நினைவூட்டத் தொகுப்பாகவும், புத்தி எனும் பகுத்தறியும் தர்க்கமாகவும், அகங்காரம் எனும் தன்முனைப்பாகவும் தூண்டப்பட்டு, மனதின் செயலாக மாறுகிறது.இப்படி மனதைப் பற்றிய நீண்ட நெடிய ஆராய்ச்சியை ஒட்டித்தான் யோக மரபு பல படிகளாக யோகக் கல்வியை அமைத்திருக்கிறது. மன அமைதிக்காக தியானம் மட்டும் கற்றுக்கொள்கிறேன் எனச் சொல்லும் ஒருவர் தெரிந்தோ தெரியாமலோ சித்தம், புத்தி, அகங்காரம் எனும் மற்ற மூன்றிற்குமான பயிற்சியைத் தவறவிடுகிறார் என்றே பொருள். அவர் இருபது வருடம், முப்பது வருடம் தியானம் செய்த பின்னரும் சலிப்பும், கோபமும், குழப்பமும், சஞ்சலமும் மிக்க ஒருவராகவே நீடிப்பார்.
ஆகவே, பதஞ்சலி தனது முதல் சில சூத்திரங்களிலேயே மேலே சொன்ன அனைத்தையும் சமன் செய்யக்கூடிய அஷ்டாங்க யோகம் எனும் எட்டு வழி சாலை மற்றும் அதில் செய்ய வேண்டிய பயணம் குறித்து வரிசைப்படுத்தி விடுகிறார். முக்கியமாக தியானம் என்பது ஐந்தாவது நிலையான பிரத்யாஹாரத்தில் தொடங்கி சமாதி எனும் எட்டாவது அங்கம் வரை நீள்கிறது. எனவே வாழ்நாள் முழுவதும் பயணிக்க வேண்டிய பாதை இது என வகுக்கிறார். உள்ளம் சார்ந்த பயிற்சிகள் மேற்கொள்பவர்களின் அன்றாடத்தில் இருந்தே ஆக வேண்டியவை இந்த நான்கும் எனலாம்.
நவ்காசனம்
இந்தப் பகுதியில் நாம் ‘ நவ்காசனம்’ எனும் பயிற்சியைப் பார்க்கலாம். சவாசனம் எனும் நிலையில் தரையில் படுத்து, கால்களை இணைத்து வைத்து கைகளை உடலுக்கு அருகில் வைத்து மூச்சு உள்ளே வரும்பொழுது, தலை, முதுகு, கால்கள் இரண்டும் மேல் நோக்கி உயர்த்தவும் இறுதி நிலையில் சில நொடிகள் நின்றுவிட்டு பின்னர் மெதுவாக உடலைத் தரையில் தளர்த்திக்கொள்ளவும். வயிற்றுப்பகுதி மற்றும் முதுகுத்தண்டை பலமாக்கவல்ல முக்கியமான பயிற்சி இது. பத்து முறை செய்யலாம்.
The post ங போல் வளை….யோகம் அறிவோம்! appeared first on Dinakaran.