×

உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன: 4 ஆண்டுகளில் 715 புலிகள் அதிகரிப்பு: கணக்கெடுப்பில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2018ல் 2,967 ஆக இருந்தது. 2022ல் 3,682 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச புலிகள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை குறித்து ஒன்றிய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகரில் 2022ம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பு பட்டியலை வெளியிட்டார். அவர் கூறியதாவது: இந்தியாவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுக்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 3,682 புலிகள் உள்ளன. மபி, கர்நாடகா, உத்தரகாண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் கடந்த 4 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்து உள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 785 புலிகள், கர்நாடகாவில் 563, உத்தரகாண்ட் 560, மகாராஷ்டிராவில் 444 புலிகள் உள்ளன. புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு இந்தியாவின் முன்மாதிரியான முயற்சிகள் வெறும் புள்ளிவிவரம் மட்டுமல்ல, தேசத்தின் உறுதிக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். புலிகள் பாதுகாப்பின் கீழ், இந்தியா தனது புலிகளின் எண்ணிக்கையை வெற்றிகரமாகப் பாதுகாத்தது மட்டுமல்லாமல், அனைத்து உயிரினங்களின் எதிர்காலத்தையும் பாதுகாத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் சாதனைக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த விழாவில் நமது நாட்டில் உள்ள காளி, மேல்காட், பிலிபிட், தடோபா அந்தாரி, நவேகான் மற்றும் பெரியார் ஆகிய ஆறு புலிகள் காப்பகங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

* முதுமலை, சத்தியமங்கலம் டாப் களக்காடு முண்டந்துறை வீக்
இந்தியாவில் உள்ள 53 புலிகள் காப்பகங்களில் கார்பெட்டில் 260புலிகள், பந்திப்பூரில் 150, நாகர்ஹோலே 141, பாந்தவ்கர் 135, துத்வா 135, முதுமலையில் 114 , கன்ஹா 105, காசிரங்கா 104, சுந்தர்பன்ஸ் 100 , தடோபா 97 , சத்தியமங்கலத்தில் 85, மற்றும் பென்ச் காப்பகத்தில் 77 புலிகள் உள்ளன. 18 புலிகள் காப்பகங்களில் 10க்கும் குறைவான புலிகள் தான் உள்ளன. அவை உத்தரபிரதேசத்தில் உள்ள ராணிப்பூர், சட்டீஸ்கரில் அச்சனக்மர், இந்திராவதி, உடந்தி சிதநதி, ஜார்க்கண்டில் பலமாவ், மகாராஷ்டிராவில் போர் மற்றும் சஹ்யாத்ரி, ஒடிசாவில் சட்கோசியா, ராஜஸ்தானில் முகுந்தரா மற்றும் ராம்கர் விஷ்தாரி, தெலுங்கானாவில் கவால், தமிழ்நாட்டில் களக்காடு முண்டந்துறை, அசாமில் நமேரி, மிசோரமில் தம்பா ஆகும்.

* ஆந்திர வனத்துக்கு இனி பாதுகாப்பு
திருப்பதி வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் நடந்த உலக புலிகள் தின விழா வில் அமைச்சர் ராமச்சந்திராபேசுகையில், ‘ஆந்திர மாநிலத்தில் கடந்த 2010ம் ஆண்டு 45 புலிகள் இருந்தது. தற்போது 80க்கும் மேல் இருமடங்காக அதிகரித்துள்ளது. புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு அச்சம் ஏற்படும்’ என்றார்.

* நல்லமலை-சேஷாசல சரணாலயங்கள் இணைக்க வழித்தடம் அமைக்கப்படும்
புலிகள் பாதுகாப்பில் ஆந்திர மாநிலம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. எனவே, நல்லமலை மற்றும் சேஷாசல சரணாலயங்களை இணைக்கும் வழித்தடத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், நல்லமலையில் உள்ள பெரிய புலிகள் இங்கு வரலாம். ஸ்ரீசைலம் நாகார்ஜூனாசாகர் புலிகள் மண்டலம் தற்போது 8 லட்சம் ஏக்கராக உள்ளது. அந்த மண்டலத்தை மேலும் 5 லட்சம் ஏக்கராக அதிகரிக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார் என ஆந்திர அமைச்சர் ராமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

* மேற்குதொடர்ச்சி மலைகளில் குறைந்தது
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலிகள் நடமாட்டம் குறைந்துள்ளது. காளி (அன்ஷி தண்டேலி) போன்ற சில பகுதிகளைத் தவிர மேற்குத் தொடர்ச்சி மலைகளில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு அங்கு மனிதர்கள் அதிக அளவு செல்வது தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்திரா சமவெளி நிலப்பரப்புளில் 2018ல் 219 புலிகள் இருந்தன. தற்போது 194 ஆகக் குறைந்துள்ளது. சுந்தரவனக் காடுகளில் 2022ல் 100 புலிகள் உள்ளன. 2018ல் 88 புலிகள் இருந்தன.

* புலிகள் எண்ணிக்கை குறைந்த மாநிலங்கள்
இந்திய வனவிலங்கு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, புலிகளின் எண்ணிக்கை உயர்வு ஆண்டுக்கு 6.1 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அருணாச்சல பிரதேசம் 70 சதவீத புலிகளை இழந்துள்ளது. 2018ல் 29 புலிகள் அங்கு இருந்தன. 2022ல் வெறும் 9 புலிகள் மட்டுமே உள்ளன. ஒடிசாவில் 28ல் இருந்து 20 ஆகவும், ஜார்கண்டில் 5ல் இருந்து 1 ஆகவும், சட்டீஸ்கரில் 19ல் இருந்து 17 ஆகவும், தெலுங்கானாவில் 26ல் இருந்து 21 ஆகவும் புலிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

* மிசோரம், நாகாலாந்தில் தற்போது புலிகள் இல்லை
மிசோரமில் 2006ல் 6 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2022ல் பூஜ்யமாகவும், 2006ல் 10 ஆக இருந்த வடக்கு மேற்கு வங்கத்தில் 2022ல் 2 ஆகவும் குறைந்துள்ளது. நாகாலாந்திலும் தற்போது புலிகள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post உலக எண்ணிக்கையில் 75% இந்தியாவில் 3682 புலிகள் உள்ளன: 4 ஆண்டுகளில் 715 புலிகள் அதிகரிப்பு: கணக்கெடுப்பில் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,Dinakaran ,
× RELATED விசாரணை அமைப்புக்களை தவறாக...