×

குளிர்காலத்தை முன்னிட்டு உத்தரகாண்ட் கேதார்நாத் கோயில் நடை அடைப்பு

உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் குளிர்காலத்தை முன்னிட்டு பிரசித்திபெற்ற கேதார்நாத் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் அமைந்துள்ள மற்றொரு கோயிலான பத்ரிநாத் கோயில் நடை நவம்பர் 17ம் தேதி அடைக்கப்பட உள்ளது. கேதார்நாத் கோயில் இனி 6 மாதங்களுக்கு பிறகே திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குளிர்காலத்தை முன்னிட்டு, உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி ஆகிய கோயில்களின் நடை ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டது. கேதார்நாத் சிவன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலையிலும், யமுனோத்ரி கோயிலில் நண்பகலிலும் நடை அடைக்கப்பட்டதாக கோயில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

இனி 6 மாதங்களுக்குப் பிறகே கோயில் நடை திறக்கப்படும் என்பதால், கேதார்நாத் கோயிலில் இருந்து சிவன் சிலையும், யமுனோத்ரி கோயிலில் இருந்து யமுனா தேவி சிலையும் பல்லக்குகளில் புறப்பட்டன. உகிமத் கோயிலுக்கு சிவன் சிலையும், கர்சாலி கோயிலுக்கு யமுனா தேவி சிலையும் எடுத்துச் செல்லப்பட்டன.

கேதார்நாத் கோயில், கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது. நாட்டில் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான இக்கோயிலில், நடப்பாண்டு யாத்திரை காலத்தில் 16.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். உத்தரகண்டில் இமயமலையில் அமைந்துள்ள மற்றொரு கோயிலான கங்கோத்ரியில் கடந்த சனிக்கிழமை நடை அடைக்கப்பட்டது. பத்ரிநாத் கோயில் நடை நவம்பர் 17-ஆம் தேதி அடைக்கப்படவுள்ளது.

The post குளிர்காலத்தை முன்னிட்டு உத்தரகாண்ட் கேதார்நாத் கோயில் நடை அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Uttarakhand Kedarnath Temple ,Uttarakhand ,Kedarnath Temple ,Badrinath Temple Walk ,
× RELATED தமிழ்நாடு பார் கவுன்சில் வக்கீல்...