×

நெல்லை – தென்காசி வழித்தடத்தில் நடைமேடைகளின் நீளம் அதிகரிக்கப்படுமா?

*கூடுதல் பெட்டிகளை நிறுத்த முடியாமல் ரயில்வே துறையினர் திண்டாட்டம்

நெல்லை : நெல்லை – தென்காசி ரயில்வே வழித்தடத்தில் உள்ள நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க வேண்டும். தற்போது 17 பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க முடியாமல் ரயில்வே துறையினர் திண்டாடி வருகின்றனர். நூற்றாண்டு பெருமை கொண்ட நெல்லை – தென்காசி வழித்தடத்தில் சமீபகாலமாக ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனால் இவ்வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் போதிய நடைமேடை வசதிகள் இல்லை. தென்காசியில் 540 மீ கொண்ட 3 நடைமேடைகள், 507 மீ கொண்ட ஒரு நடைமேடையும், கீழப்புலியூர், மேட்டூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழ ஆம்பூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பேட்டை, நெல்லை டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் 405 மீ நீளம் கொண்ட ஒற்றை நடைமேடையும், பாவூர்சத்திரம், கீழக்கடையம், சேரன்மகாதேவி ஆகியவற்றில் 405 மீ நீளம் கொண்ட இருநடை மேடைகளும், அம்பையில் 475 மீ கொண்ட 3 நடைமேடைகளும் உள்ளன.

காருக்குறிச்சியில் 270 மீ கொண்ட ஒற்றை நடைமேடை உள்ளது.
இவ்வழித்தடத்தில் மையமாக திகழும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் வகையில் 5 பயணிகள் நடைமேடைகள், 2 குட்ஸ் லைன்கள், ஒரு விஐபி லைன், 5 ஸ்டேபிளிங் லைன், 2 சிக் லைன் உள்ளன. 24 பெட்டிகள் கொண்ட ரயில்கள் நிறுத்துவதற்கு 540மீ நீளம் கொண்ட நடைமேடை தேவை. தென்காசி மற்றும் நெல்லை ரயில் நிலையங்களில் மட்டுமே இவ்வழித்தடத்தில் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடைகளின் நீளம் உள்ளது. இவ்வழித்தடத்தில் உள்ள மற்ற நடைமேடைகளின் நீளத்தை நீட்டித்தால் மட்டுமே கூடுதல் ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க முடியும்.

இதுகுறித்து ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், ‘‘தற்போது நெல்லை – தென்காசி ரயில் வழித்தடத்தில், அதிகபட்சமாக நெல்லை – மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் 15 பெட்டிகளுடனும், செங்கோட்டை – தாம்பரம் ரயில் 17 பெட்டிகளுடனும் தற்போது இயங்கி வருகின்றன. இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம், நெல்லை – தென்காசி வழித்தடங்களில் உள்ள முக்கிய கிராசிங் நிலையங்களான சேரன்மகாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் நடைமேடைகளின் நீளத்தை 540 மீ வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும்.

ஏற்கனவே செங்கோட்டை – தாம்பரம் அதிவிரைவு ரயிலில் கூடுதல் தூங்கும் வசதி பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 405 மீட்டர் நீளம் கொண்ட நடைமேடைகளை கூடுதலாக 135 மீட்டர் நீளம் அதிகரித்தால் 24 பெட்டிகள் நிறுத்த முடியும். ஒரு நடைமேடையை நீட்டிப்பதற்கு தோராயமாக ரூ.15 லட்சம் வரை செலவாகும். எனவே தெற்கு ரயில்வே உடனடியாக போர்க்கால அடிப்படையில் நெல்லை- தென்காசி ரயில் வழித்தடத்தில் உள்ள நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றார்.

The post நெல்லை – தென்காசி வழித்தடத்தில் நடைமேடைகளின் நீளம் அதிகரிக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : south kasi ,Nedalya ,South Kasi Railway ,Dinakaran ,
× RELATED சங்கரன்கோவிலில் மல்லிகைப்பூ விலை அதிகரிப்பு.!!