×

பர்லியார் பகுதியில் காட்டு யானைகள் உலா: வியாபாரிகள் பீதி


குன்னூர்: குன்னூர் அருகே பர்லியார் பகுதியில் காட்டுயானைகள் உலா வந்ததால் கடை வியாபாரிகள் பீதி அடைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குன்னூர் மலைப்பாதையில் இருபுறங்களிலும் பசுமையாக காட்சியளித்து வருகிறது. மேலும் இப்பகுதி வனப்பகுதிக்குள் ஏராளமான பலா மரங்கள் உள்ளது. தற்போது பலா சீசன் துவங்கியுள்ள நிலையில் சமவெளி பகுதிகளில் உள்ள யானைகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகிறது. மேலும் 10க்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து மலைப்பாதையில் உள்ள கோரை புற்கள், வாழை மரங்கள், பலா பழங்கள் போன்றவைகளை உட்கொண்டு பசியை போக்கி வருகிறது.

இதனிடையே பர்லியார் குடியிருப்பு அருகே இரவு நேரத்தில் ஒரு குட்டியுடன் உலா வந்த 2 காட்டு யானைகள், நீண்ட நேரமாக சாலையின் ஓரத்தில் நின்றன. இதனை அறிந்த வாகன ஓட்டிகள் சிலர் அந்த யானைகளை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்ததோடு, சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இருப்பினும் பர்லியார் பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும், 15க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ள நிலையில் யானைகளை கண்டு குடியிருப்புவாசிகளும், கடை வியாபாரிகளும் பெரும் பீதி அடைந்துள்ளனர்.

குறிப்பாக பர்லியார் பகுதியில் உள்ள பழக்கடைகளில் விற்பனைக்காக பலாபழங்கள் வைத்துள்ள நிலையில், பலா பழத்தின் வாசனையை அறிந்து, கடையை உடைத்து விடுமோ என்கிற அச்சத்தில் கடை வியாபாரிகள் உள்ளனர். இருப்பினும் குன்னூர் வனத்துறையினர் யானைகளை மீண்டும் சமவெளி பகுதிகளுக்கே விரட்டும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post பர்லியார் பகுதியில் காட்டு யானைகள் உலா: வியாபாரிகள் பீதி appeared first on Dinakaran.

Tags : Burliar ,Gunnar ,Nilgiri district ,Kunnur mountain road ,Dinakaran ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்