×

செண்பகத்தோப்பில் மூலிகை துணிகள் பயன்படுத்துவதால் ‘ரூட்’ மாறி சென்ற காட்டு யானைகள்: பந்தப்பாறையில் மரங்களை ஒடித்து அட்டகாசம்


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் மூலிகை கலந்த துணிகளை பயன்படுத்துவதால் யானைகள் வேறு இடத்திற்கு சென்று மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் இரவு நேரங்களில் இறங்கி வரும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கரும்பு, தென்னை மற்றும் வாழைகளை சாப்பிட்டு விட்டு மரங்களை சாய்த்து விட்டு செல்கின்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் துணை இயக்குனர் தேவராஜ் உத்தரவின் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர் ரேஞ்சர் செல்லமணி தலைமையில் தொடர்ச்சியாக யானைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை.

இந்நிலையில் வனத்துறையினர் யானைகள் வராமல் தடுக்க கோயம்புத்தூர் பகுதியில் பயன்படுத்துவதுபோல் இயற்கை மூலிகைகள் தடவப்பட்ட துணிகளை யானை வரும் பாதைகளில் கட்டி தொங்கவிட்டனர். செண்பகத் தோப்பு பகுதியில் இந்த துணிகளை கட்டியதில் இருந்து யானைகள் வரவில்லை என தெரிகிறது. ஆனால் அதற்கு பதிலாக யானைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை, பந்தப்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. குறிப்பாக அந்த பகுதியில் தென்னை, வாழை போன்றவற்றை சேதப்படுத்தி வருகிறது.

இதனால் விவசாயிகள் செண்பகத்தோப்பு பகுதியில் ரசாயன மூலிகை துணிகளை கட்டி பயன்படுத்தியது போல் பந்தப்பாறை பகுதிகளிலும் பயன்படுத்த வேண்டும். மேலும் யானைகள் வராமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செண்பகத்தோப்பில் மூலிகை துணிகள் பயன்படுத்துவதால் ‘ரூட்’ மாறி சென்ற காட்டு யானைகள்: பந்தப்பாறையில் மரங்களை ஒடித்து அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Bandaparai ,Srivilliputhur ,Chenbagathoppu ,Western Ghats ,Chenbagathop ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்...