×

ஏன் சந்தேகம் எழுகிறது?

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 74 (பகவத்கீதை உரை)

உதவி, நம்பிக்கை எல்லாம் மனித வாழ்வின் பரஸ்பர மற்றும் இன்றியமையாத அம்சங்கள். யாரேனும் ஒருவரை, ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், எதற்காகவாவது சார்ந்துதான் இருத்தல் வேண்டும் என்பது உலகநியதி, மனிதவிதி. தன் குழந்தைக்கு, தந்தை உட்பட அதன் உறவுகளை ஒரு தாய் சுட்டிக்காட்ட, அதை அந்தக் குழந்தை ஏற்றுக் கொள்வது, தாயின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான். ஆனால் வயதாக ஆக, நம்பிக்கை இருந்தாலும், பாசம் குறைந்துகொண்டு வருவதுதான் துரதிருஷ்டம். இதற்கு முக்கிய காரணம், சுயநலம்தான். பிறரால் தனக்கு எந்த இழப்பும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற பயசந்தேகம்தான்! குழந்தையின் விஸ்வாசமும், நம்பிக்கையும் நீடித்து இருக்க வேண்டும்.

இந்த நம்பிக்கை ஆரம்பத்திலிருந்தே பரிபூரணமாகப் பரந்தாமனிடம் நிலைக்குமானால், யார்மீதும் அவநம்பிக்கை கொள்ளவோ, யாரையும் சந்தேகப் படவோ வாய்ப்பு இல்லை. இப்படி நம்பிக்கை கொண்டவர்மீது பகவானுக்குக் கருணை பிறக்கிறது. இவனுக்குத் தேவையானவற்றைச் செய்து தர, இவனைச் சூழ்ந்தவர்களைத் தயார் படுத்த வேண்டும் என்று பகவான் நினைத்துக்கொள்கிறார், அதன்படியே செய்தும் தருகிறார்.

அதனால்தான், நம்முடைய மிகத் துன்பமான கட்டத்தில் நம்மைக் கைதூக்கிவிடும் அன்பரை, ‘தெய்வம் போல வந்தாயப்பா’ என்று நாம் நெகிழ்ந்து சொல்கிறோம். ஆகவே, சந்தேகமே வாழ்க்கையாகி, அதனால் உலகத்தார் அனைவருக்குமே வேற்றானாகி, இவ்வுலகில் வாழவே தகுதியற்றவனாக ஆகிவிடக்கூடாது என்று அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன். சந்தேகம், பல சந்தர்ப்பங்களை நழுவ விடுகிறது. ‘வாய்ப்பு ஒருமுறைதான் கதவைத் தட்டும், ஆகவே சந்தர்ப்பத்தை நழுவவிடாமல், பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,’ என்பார்கள்.

இப்படி சந்தர்ப்பம் கதவைத் தட்டும்போது சந்தேகம் ஏன் எழுகிறது? அந்த சந்தர்ப்பம் நமக்கு நல்லது தராமல் போய்விடுமோ என்ற பயம்தான் காரணம். முயற்சித்துத்தான் பார்ப்போமே என்ற துணிவு இல்லாததுதான் காரணம். சரி, இந்த அவநம்பிக்கை இந்த சமயத்தோடு போய்விடுகிறதா? இல்லை, எப்போதும் தொடர்கிறது. அது, குடும்பம், நட்பு, சுற்றம், உறவு என்று எல்லா பந்தங்களையும் பாதிக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இறையருளையே சந்தேகிக்கிறது. சூழ இருப்பவர்கள் தனக்குத் துரோகம் இழைக்கக்கூடும், தன்னை ஏமாற்றக்கூடும், தனக்குப் பெரும் நஷ்டம் விளைவிக்கக்கூடும் என்ற அவநம்பிக்கை, இறைவனிடமும் தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம், நமக்கு இறையருளால் நன்மைகள் நடந்தால், அதை சுலபமாக நாம் மறந்துவிடுவதும், துன்பம் நேர்ந்தால், அதைக் கொஞ்சமும் மறக்காமலிருப்பதும்தான். மனிதர்களைப் போலவே, மகாதேவனையும் நினைத்துக் கொள்கிறோம். குறிப்பிட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வதா, வேண்டாமா என்ற தயக்கம், தடுமாற்றம், முடிவெடுக்கத் தெரியாத அறியாமை ஆகிய எல்லாவற்றாலும் நேரத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை இங்கே மிக முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

‘வாய்ப்பை அழைத்துக் கொண்டு வரும் காலமே, கொஞ்சம் நில். நான் ஒரு முடிவுக்கு வரவேண்டும், அதுவரை வேறு எங்கும் சென்றுவிடாதே,’ என்று கெஞ்சியும் கேட்க முடியாது. ஏனென்றால் நேரம் நிற்காமல் ஓடிக் கொண்டிருப்பதால்தான். நேரம் நமக்காகக் காத்திருக்காததுபோல, சந்தர்ப்பமும் நம்மை விட்டு விட்டு, தன்னைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பவரிடம் போய்ச் சேர்ந்து விடுகிறது! இதற்கு ஒரே வழி, கிடைக்கும் வாய்ப்பை அப்படியே பயன்படுத்திக் கொள்வதுதான்.

இதனால், அவ்வாறு பயன்படுத்திக் கொள்ளும்போது நாம், ஏதேனும் தவறு செய்துவிட்டால், அந்தத் தவறை நம்மால் திருத்திக் கொள்ள முடியும். ஆனால் வாய்ப்பை ஏற்காமலேயே நின்று விட்டோமானால், நாமும் அப்படியே தேங்கிவிடுவோம். தவறிழைத்தலும், திருத்திக் கொள்வதாகிய அனுபவமும், அதனால் கிடைக்கக்கூடிய அறிவும்கூட நமக்குக் கிட்டாமல் போய்விடும். ஆகவே, மனத்துணிவு பெற, சந்தேகத்திற்கு நம் மனதில் இடம் கொடுக்கவே கூடாது என்பது கிருஷ்ணனின் அறிவுரை.

கொஞ்சம் விலகி யோசித்தோமானால், நாம் கோபப்படும்போதோ, வெறுப்புறும்போதோ, இப்படித் தயங்குகிறோமா, யோசிக்கிறோமா? இல்லை. ஏனென்றால் நம்மை அதல பாதாளத்துக்குத் தள்ளவே இந்த கோபமும், வெறுப்பும் நமக்குள் முளைவிடுகின்றன. அதாவது, எதெதற்கெல்லாம் யோசிக்க வேண்டுமோ, தயங்க வேண்டுமோ அதற்கெல்லாம் நாம் அப்படிச் செய்வதேயில்லை. இது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து பரமாத்மாவின் அருளையும், கருணையையும் சந்தேகிக்கும் அளவுக்குக் கொண்டுபோய்விட்டு விடுகிறது! அதனால்தான் கிருஷ்ணர், ‘சந்தேகம் பெருநஷ்டத்தில் கொண்டுவிடுகிறது,’ (ஸம்சயாத்மா விநச்யதி) என்று அர்ஜுனனிடம் கூறுகிறார்.

இப்போதைக்கு அர்ஜுனன், சந்தேகத்துக்கும் அதன் தொடர்பான தயக்கத்துக்கும் இடம் கொடுப்பானேயாகில் அவன் மிகப் பெரிய நஷ்ட விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று மறைமுகமாக உபதேசிக்கிறார். சந்தேகமற்ற, திட சிந்தனை நேரடியானது. அது பின்விளைவுகளைப் பற்றி இப்போதே சிந்திக்கத் தொடங்குவதில்லை.

அதனால் அதன் முயற்சிகளில் கோணல், மாணல் இல்லை. ‘முதல் கோணல் முற்றும் கோணல்’ என்ற சொற்றொடரானது முதல் அடி, அல்லது முதல் முயற்சியைக் குறிப்பதல்ல; எல்லாவற்றிற்கும் முதலாவதான உறுதியான சிந்தனை அல்லது சந்தேகத்தைக் குறிப்பதுதான். முதலில் யோசனை, அப்புறம்தானே செயல்!

யோகசயஸ்தகர்மாணம் ஞானஸம்சின்னஸம்சயம்
ஆத்மவந்தம் ந கர்மாணி நிபத்னந்தி
தனஞ்ஜய (4:41)

‘‘தெரிந்துகொள், தனஞ்ஜயா, தன்னுடைய அனைத்துக் கர்மாக்களையும் பகவானுக்கே ஒருவன் அர்ப்பணித்து விடுவான் என்றால், அவன் எந்தவகை சந்தேகத்துக்கும் ஆளாக மாட்டான். அதாவது அந்த அளவுக்கு அவன் ஞானவானாகிவிடுகிறான். இத்தகைய ஞானியை கர்மாக்கள், எப்போதும், எந்த நிலையிலும்
பந்தப்படுத்துவதேயில்லை!’’

உளமார்ந்த சமர்ப்பித்தலுக்கான பெரிய தடையே அகங்காரம்தான். காது கேளாமைக்கு, ‘இவன் என்ன சொல்வது, நாம் என்ன கேட்பது!’ என்ற ஆணவப் போக்குதான் ஆரம்ப காரணம் என்று வேடிக்கையாகக் குறிப்பிடுவார்கள். இன்னார் சொல்வதிலும் நற்பொருள் இருக்கும் என்று ஆர்வமாக செவிமடுப்பதால், செவிப்புலன் கூர்மையடைவதோடு, மனதிலிருந்து
வீம்பும் விலகிவிடும்.

இந்த அனுசரணை, எல்லா நிலைகளிலும், எல்லோரிடமும் மேற்கொள்ளப்படுமானால், அது நிரந்தரமாகவே அகங்காரத்தை அழித்துவிடும். தன்னிடம் குருவுக்கு நல்ல அபிமானம் என்று கணித்திருந்தான் அந்த சீடன். பாடம் பயிலும்போது தன்னுடைய தனித் திறமையால் குருவை அவன் கவர்ந்திருந்தான், அதனால் அவருடைய பாராட்டையும் அடிக்கடி பெற்றிருந்தான். தன்மேல் அவர் தனிக் கவனம், அன்பு செலுத்துவதாக அவன் நினைத்துக் கொண்டிருந்தான்.

பிற மாணவர்களிடம் இல்லாத நெருக்கம் தன்னிடம் குருவுக்கு உண்டு என்றும் கருதியிருந்தான். அந்த குரு, ஒவ்வொரு மாணவனையும் தனித் தனியே அடையாளம் காணக்கூடியவர். ஒவ்வொருவருடைய குணம், பழகுமுறை, நடவடிக்கைகள், ஏன், காலடி ஓசையை வைத்தே, திரும்பிப் பார்க்காமலேயே இந்த மாணவன் வருகிறான் என்பதைத் துல்லியமாகச் சொல்லக்கூடியவர். ஆகவே, இத்தகைய குருவுக்குத் தான் அபிமானவனாகத் திகழ்வதால், பிற எல்லோரையும்விட தன்னை அவர் நெருக்கமாக அறிந்திருக்கிறார் என்றே மாணவன் கருதினான். படிப்பு முடிந்த பிறகும், மாணவர்கள் ஏதேனும் ஒரு காரணத்துக்காக குருவுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள், சந்தித்தார்கள், தம் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டார்கள், தெளிவு பெற்றார்கள்.

அந்தவகையில், இந்த மாணவனும் அவரிடம் தொடர்ந்து பழகி வந்தான். நாளாக ஆக, தன் அறிவாற்றலால் அவன் பிரசித்தி பெற்றவனாக ஆகிவிட்டான். அவனுக்குத் தன்னைப் பற்றிய மதிப்பீடு உயரே சென்றது. அடுத்தடுத்த சந்திப்புகளில் இதை குருவும் உணர்ந்தார், அவனுக்காக வருத்தப்பட்டார்! ஒருசமயம், அந்த மாணவன் குருவை சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றான். வீட்டுப் படியில் தன் செருப்புகளை வீசியபடி கழற்றிய ஓசையில், குரு தன் வருகையை உணர்ந்திருப்பார் என்று கருதினான்.

சாத்தப்பட்டிருந்த கதவைத் தட்டினான். இந்த ஒலியும் அவருக்கு யார் வந்திருப்பது என்று புரிய வைத்திருக்கும் என்றும் நினைத்தான். கதவு திறக்கப்படவில்லை. கொஞ்சம் பொறுமை இழந்த மாணவன், ‘ஐயா, நான் வந்திருக்கிறேன்,’ என்று சத்தமாகவே அழைத்தான். ‘யார் அது?’ என்று கேட்டபடி வந்தார் குரு. அவனுக்கு ஏமாற்றம். செருப்பு விட்ட ஒலியைக் கேட்டே ஓடோடி வந்து குரு கதவைத் திறப்பார் என்று எதிர்பார்த்தான். அல்லது கதவைத் தட்டிய ஒலியிலாவது தன்னைப் புரிந்துகொண்டிருப்பார் அல்லது அழைத்த தன் குரலிலாவது தன்னை அடையாளம் கண்டு கொண்டிருந்திருப்பார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போனான். எல்லாவற்றையும்விட, ‘யாரது?’ என்ற கேள்வி அவனை மிகவும் அவமானப் படுத்திவிட்டது.

அவர் தன்னுடைய குருதான், ஆனால் தன்னைப்பற்றி, தன் ஒவ்வொரு அசைவையும் பற்றி நன்கு அறிந்திருப்பவர்தான். ஆனாலும் ஏன் இந்தப் புறக்கணிப்பு? அவனைப் பார்த்ததும், ‘ஓ, நீயா? வா, உள்ளே வா,’ என்று அழைத்த அவர், அவனுடைய முகமாற்றத்தைக் கண்டு தன்னிலை விளக்கம் சொன்னார்: ‘‘‘நான் வந்திருப்பதாக நீ சொன்னதிலிருந்து, உன்னை நான் சரியாகப் பயிற்றுவிக்கவில்லையோ என்று சற்று வேதனைப்பட்டேன். உன்னுடைய ஒவ்வொரு அசைவிலும் உன்னை நான் அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீ, அலட்சியமாக செருப்பை வீசியதிலிருந்தும், கதவை சற்றே மூர்க்கமாகத் தட்டியதிலிருந்தும், ‘நான்’ வந்திருக்கிறேன் என்று ஆணவமாகச் சொன்னதிலிருந்தும், உன்னை முறைப்படுத்தாத என் குறையை நான் உணர்ந்தேன்.

சரி, உள்ளே, வா, என்று சொல்லி அவனை உள்ளே அழைத்தார். தன்னைச் சமுதாயத்தில் முன்னிலைக்குக் கொண்டுவந்த குருவிடமே தன்னை முழுமையாக சமர்ப்பிக்காத தன் தவறை அந்த மாணவனும் உணர்ந்தான். அப்படியே அவர் காலடியில் சரிந்து விழுந்து வணங்கினான். ஆசிரியர் தலை நிமிர்ந்து கரும்பலகையில் எழுதி, பாடம் பயிற்றுவிப்பார்; மாணவன் தலை குனிந்து அந்தப் பாடத்தைத் தன் புத்தகத்தில் எழுதுவான்.

கல்வி தரும் முதல் பயிற்சி இது – பணிவு. இதுவே அடுத்தடுத்த கட்டங்களில், முன்னேற்றங்களில் அவனுக்கு அடக்கத்தையும், நல்லொழுக்கத்தையும் வளர்க்கும். நிறைவாக பகவானிடம் கொஞ்சமும் சுயநலம் இல்லாமல் அனைத்தையும் சமர்ப்பிக்கும் மனப்பக்குவத்தை உருவாக்கும்.

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post ஏன் சந்தேகம் எழுகிறது? appeared first on Dinakaran.

Tags :
× RELATED திருச்செந்தூரின் கடலோரத்தில்…