×

நீர்நிலைகள், வயல்களில் மீண்டும் சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பு-நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்

சிவகங்கை : சீமைக்கருவேல மரத்தின் வேர்களை அகற்றாததால் மீண்டும் சீமைக்கருவேல மரங்களே முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு இறுதியில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுக்கு சொந்தமான இடங்கள், கண்மாய்களில் உள்ள இம்மரங்களை அகற்றும் பணியும் நடந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் மிகக்குறைவான அளவிலேயே இம்மரங்களை அகற்றும் பணி நடந்தது. கண்மாய்கள், அரசு இடங்களில் இம்மரங்களை அகற்ற டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்தவர்கள் பல இடங்களில் வேறு நபர்களிடம் மரங்களை அகற்றும் பணியை ஒப்படைத்தனர்.
இவர்கள் விறகு பயன்பாடு உள்ளிட்டவைகளுக்காக இயந்திரங்கள் மூலம் மரங்களை மட்டும் அறுத்து எடுத்தனர். வேர் பகுதியை அகற்றவில்லை. மேலும் மரங்களை அகற்றும்போது இம்மரங்களில் உள்ள அதிகப்படியான காய்கள் நிலத்தில் கொட்டின.

காய்கள் காய்ந்தவுடன் நிலத்தில் விதைகளாக பரவி மீண்டும் அதிகப்படியான சீமைக்கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இதனால் சீமைக்கருவேல மரங்களை அகற்றியும் பயனில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மரங்களை வேருடன் அகற்றிவிட்டு, அகற்றப்பட்ட கண்மாய் மற்றும் அரசு இடங்களில் அதிகப்படியான நீர் தேவையில்லாத மாற்று மரங்கள் நட வேண்டும் என மரங்கள் அகற்றப்பட்டபோது கோரிக்கை வைக்கப்பட்டது.

 புங்கை, நாவல், வேம்பு, அரசு, புளியமரம், பூவரசு, ஆலமரம் உள்ளிட்ட செடிகளை நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அவ்வாறு செய்யாததால் மீண்டும் சீமைக்கருவேல மரங்களே முழுமையாக வளரும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் கூறுகையில், பல இடங்களில் சீமை கருவேல மரங்களை பெயரளவில் அகற்றியது, வேர்களை அகற்றாதது, மாற்று மரங்கள் நடாதது என மாவட்டம் முழுவதும் சீமைக்கருவேல மரம் அகற்றல் பெயரளவிலேயே நடந்தது.

இதனால் அகற்றப்பட்ட இடங்களில் எல்லாம் மீண்டும் இம்மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. கண்மாய்களின் உட்பகுதியில் வேறு மரங்களை நட்டால் அதனால் பன் மடங்கு பயன் கிடைக்கும். சிவகங்கை மாவட்டத்தில் பல கண்மாய்களில் கிராமத்தினரே நாவல் மரங்களை வளர்த்து அதனால் பயனடைந்து வருகின்றனர்.

மேலும் நீரும் பாதுகாக்கப்படும். இதை முன்மாதிரியாக கொண்டு கண்மாய் மற்றும் அரசு இடங்களில் வேருடன் சீமைக்கருவேல மரங்களை அகற்றி அந்த இடங்களில் மாற்று செடிகள் நட்டு வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Sivagangai: As the roots of the juniper tree have not been removed, the juniper trees have sprouted again.
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...