×

நித்யானந்தா எங்கே உள்ளார்?.. கைலாசா எங்கு உள்ளது, அங்கு எப்படி செல்வது: ஐகோர்ட் கிளை கேள்வி!!

மதுரை: கைலாசா எங்கு உள்ளது, அங்கு எப்படி செல்வது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை ஆதின மடத்தின் மடாதிபதியாக 292வது ஆதீனமாக அருணகிரி நாதர் உயிருடன் இருக்கும் போது நித்தியானந்தாவை அவருக்கு அடுத்து அதாவது 293 இளைய மடாதிபதியாக நியமித்திருந்தார். அதன்பிறகு ஏற்பட்ட சர்ச்சையால் நித்தியானந்தா மடாதிபதியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில் நித்தியானந்தா தான் ஒரு பக்தனாக மதுரை ஆதின மடத்திற்கு நுழைய அனுமதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மதுரை ஆதின மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக்கூடாது என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து திருவண்ணாமலை நித்யானந்தா பீடத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு ஐகோர்ட் கிளையில் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதில், நித்யானந்தா எங்கு உள்ளார்?. கைலாசா நாடு எங்கு உள்ளது, அங்கு எப்படி செல்வது என கேள்வி எழுப்பினார். இதற்கு நித்யானந்தாவின் சீடர் தரப்பில், ஆஸ்திரேலியா அருகே உள்ள யு.எஸ்.கே. என்ற தனி நாட்டில் நித்யானந்தா வசித்து வருகிறார் என்றார். இதையடுத்து கைலாசாவிற்கு மனுதாரர் சென்று உள்ளாரா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். இந்த நாடு ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட நாடு என்று நித்யானந்தாவின் சீடர் பதில் அளித்தார். மேலும், நித்யானந்தா தரப்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்து, இந்த வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post நித்யானந்தா எங்கே உள்ளார்?.. கைலாசா எங்கு உள்ளது, அங்கு எப்படி செல்வது: ஐகோர்ட் கிளை கேள்வி!! appeared first on Dinakaran.

Tags : Nithyananda ,Kailash ,Madurai ,High Court ,Arunagiri Nath ,Madurai Adina Math ,Court ,Dinakaran ,
× RELATED கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு...