×

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை: பெரியகுளம் அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தேனீ மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி இந்த அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி, வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், அருவி பகுதிக்கு செல்லவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சோத்துப்பாறை மற்றும் மஞ்சளாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

126 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் உபரிநீர் முழுவதுமாக வராகநதியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதே போல் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 184 கன அடியாக அதிகரித்துள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதை அடுத்து ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்று கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது. சோத்துப்பாறை அணை வனப்பகுதி, கல்லாறு வனப்பகுதி, கும்பக்கரை வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் பெரியகுளம் வராக நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுக்ப்பட்டி ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குறிப்பாக கொடைக்கானல் முகப்பு பகுதியில் உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கியது போல தண்ணீர் கொட்டும் காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இதே போன்று வட்டகானல் அருகே லிரில் அருவி என கொடைக்கானலில் உள்ள பல்வேறு அருவிகளில் நீர்வரத்து பெருக்கெடுத்துள்ளது. தொடர்ந்து பெய்துவந்த மழை காரணமாக அருவிகள் மற்றும் மலை சாலைகளில் உள்ள பகுதிகளில் திடீர் அருவிகளும் ஏற்பட்டு தண்ணீர் கொட்டி வருவதால் கொடைக்கானல் வரக்கூடிய பயணிகள் அதனை கண்டு ரசித்து வருகின்றனர்.

 

The post மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை: பெரியகுளம் அருவியில் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Western Ghats ,Forest department ,Periyakulam ,Tamil Nadu ,Theni district ,Kumbakarai ,Vattakanal ,Dinakaran ,
× RELATED குன்னூர் அருகே அட்டகாசம் செய்து வரும்...