கொச்சி: கேரள மாநிலத்திலுள்ள வயநாட்டில், பெருமழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீட்புப் பணிகள் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. கேரளாவை உலுக்கியுள்ள இச்சம்பவத்தால், சமீபத்தில் வெளியாக இருந்த திரைப்பட அறிவிப்புகள் மற்றும் நிகழ்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜிதின் லால் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடப்பட இருந்தது.
ஆனால், வயநாடு துயரச் சம்பவத்தால் அப்டேட் வெளியாகாது என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், ‘வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் துக்கத்தில் பங்கெடுக்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் வெளியாக இருந்த படத்தின் அப்டேட் வேறொரு நாளுக்கு மாற்றி வைக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது. சைஜூ ஸ்ரீதரன் இயக்கத்தில் விஷாக் நாயர், மஞ்சு வாரியர் நடித்துள்ள படம், ‘ஃபுட்டேஜ்’. இது நாளை திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், ‘வயநாடு மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். துயரமான இச்சம்பவத்தால் படத்தின் ரிலீசையே நாங்கள் தள்ளிவைக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது. அதுபோல், மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கம் (அம்மா), கேரள தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்த இருக்கும் விருது நிகழ்ச்சி குறித்த செய்தியாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது.
வயநாடு பேரிடர் தொடர்பாக மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள அவசர கால உதவி எண்களைப் பகிர்ந்துள்ள நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, பிருத்விராஜ் ஆகியோர், வெளியூர் பயணங்களை பொதுமக்கள் தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி பதிவிட்டுள்ளனர். அத்துடன் இந்த 3 நடிகர்களும் தன்னார்வலர்களை நியமித்து மீட்பு பணிகளில் அவர்களை ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது.
The post வயநாடு நிலச்சரிவு துயர சம்பவம்: களத்தில் குதித்த மம்மூட்டி மோகன்லால், பிருத்விராஜ் appeared first on Dinakaran.