×

பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு முல்லைப் பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா?: பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள்

மதுரை: தென் மேற்கு பருவமழை சரிவர பெய்யாத காரணத்தால், மதுரை மாவட்டத்தில், இருபோக பாசனத்தில் 45 ஆயிரம் ஏக்கர் முதல் போகத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிரமம் ஏற்பட்டு, பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். பெரியாறு, வைகை அணையில் இருந்து மதுரை மாவட்டத்தின் பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான பகுதிகளின் முதல் போக சாகுபடிக்கு ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு நெல் சாகுபடி நடந்தது. இந்தாண்டு, பெரியாறு அணையில் இருந்து, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பாசன பகுதிகளுக்கு மட்டும் கடந்த 1ம் தேதி முதல், தினமும் 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள 43 ஆயிரத்து 50 ஏக்கர், மதுரையை அடுத்த திண்டுக்கல் மாவட்டத்தின் 2 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரத்து 50 ஏக்கர் நிலம், முல்லைப் பெரியாறு பாசனத்தில், இருபோக ஆயக்கட்டு பகுதியாக இருக்கிறது. இந்த நிலங்களுக்காக பாசன வசதி பேரணை முதல் மதுரை கள்ளந்திரி மதகு வரை உள்ளது. இந்த பகுதிகளுகளின் பாசனத்திற்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைகை அணையில் சேமித்து, பின் அங்கிருந்து திறக்கப்படுவது வழக்கம். பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விதிமுறைகள் உள்ளன. அதில் பெரியாறு, வைகை அணைகளில் 4 ஆயிரம் மில்லியன் கனஅடிக்கு மேல் தண்ணீர் இருந்தால், பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான இருபோக ஆயக்கட்டில் முதல் போகத்திற்கு ஜூன் முதல் வாரம் திறப்பது வழக்கம். தண்ணீர் குறைவாக இருந்தால் அதிகரிக்கும் வரை காத்திருந்து, அதிகபட்சமாக ஆக.15க்குள் திறந்தால் மட்டுமே நெல் சாகுபடிக்கு ஏற்றதாக இருக்கும். நேற்றைய நிலவரப்படி, பெரியாறு அணையில் 1,948 மில்லியன் கனஅடியும், வைகை அணையில் 2 ஆயிரத்து 601 மி.க அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. விதிமுறைப்படி, பார்த்தால், இரு அணைகளின் மொத்தம் இருப்பு 4 ஆயிரத்து 549 மி.கன அடியாக இருக்கிறது. இதனால் பெரியாறு பாசனக் கால்வாயில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுதொடர்பாக நீர்வளத்துறை பொறியாளர்கள் ஆலோசனை நடத்தினர். தென்மேற்கு பருவமழை துவங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருக்கிறது.

முந்தைய வழக்கப்படி தண்ணீர் திறந்தால், தொடர்ந்து 120 நாட்களுக்கு தொடர்ச்சியாக வழங்க வேண்டும். ஆனால் பருவமழை பெய்யாத நிலை தொடர்ந்தால், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு, விவசாயத்திற்கு வழங்குவதை இடையில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால், தற்போதைய நிலையில் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. ஒருவேளை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து, தண்ணீர் வரத்து அதிகாரித்தால் மட்டுமே நீர் இருப்பை பொறுத்து திறக்கப்படும். தற்போதைய நிலையில், வைகையில் இருந்து குடிநீருக்கு மட்டும் தினமும் 69 கன அடிவீதம் திறக்கப்பட்டு வருகிறது என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால், வறண்ட வானிலை நிலவுவதால், தென்மேற்கு பருவமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என கூறப்படுகிறது. பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதியளவு மழை பெய்யாததால், நேற்று அணைக்கு 613 கன அடி வீதம் தண்ணீர் வரத்து இருந்தது. வைகை அணைக்கும் கடந்த மூன்று வாரங்களாக நீர் வரத்து இல்லை. நேற்றைய நிலவரப்படி, வைகை அணையில் 49.66 அடி தண்ணீர் உள்ளது. இன்னும் 20 நாட்களுக்குள் தண்ணீர் திறந்தால் மட்டுமே, முதல் போக சாகுபடியை விவசாயிகள் முறையாக செய்ய முடியும் காலம் தவறி தண்ணீர் திறந்தால், விளைச்சல் பாதிக்கப்படும். தற்போதைய நிலையில் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை என நீர்வளத்துறை பொறியாளர்கள் கூறியிருக்கின்றனர். இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்தால் மட்டுமே மதுரை மாவட்டத்தின் 45 ஆயிரம் ஏக்கர் முதல்போக சாகுபடி நிலத்தில் விவசாய பணிளை தொடங்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

The post பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கர் விவசாயத்திற்கு முல்லைப் பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா?: பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : gigaram canal ,Madurai ,Bipoga ,South West ,Mullen Canal ,Dinakaran ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...