×

நயினார் நாகேந்திரனுக்கு எச்சரிக்கை; திமுக உடனான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை: வைகோ உறுதி

கோவை: ‘திமுக உடனான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை’ என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அளித்த ேபட்டி: மதிமுகவின் 31வது பொதுக்குழு இன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது. அதில் சிறந்த முடிவுகள் தீர்மானங்களாக அறிவிக்கப்படும். திமுகவுடன் கரம் கோர்ப்பது என்று எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு எந்த கட்சியுடன் சேர்வதற்கான அவசியமும் இல்லை.

இதைப்பற்றி ரகசியமாக பேசுகின்ற பழக்கமும் எங்களுக்கு இல்லை. ஒன்றிய அரசு வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்து இந்துத்துவாவை திணிப்பதற்கு நினைக்கின்றனர். அமைச்சர் டிஆர்பி ராஜா வெளியில் நடமாட முடியாது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறும் அளவிற்கு, வலிமையோ, உரமோ இல்லாத கூட்டம் அவர்கள். நயினார் நாகேந்திரன் நல்ல நண்பர், இந்த பொறுப்பிற்கு வந்த பிறகு பொருத்தமற்ற முறையில் கற்பனையாக சிலவற்றை பேசி வரும் இந்த போக்கை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். பாஜ உள்ளேயே பல்வேறு குழப்பங்களும், பிரச்னைகளும் இருக்கின்றன.

பாமகவில் தற்போது தந்தைக்கும், மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதால், இரண்டு அணி போன்று தெரிகிறது. காலப்போக்கில் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. கூட்டணி குறித்து திமுக தலைமை தான் முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்தி, சமஸ்கிருதம் திணிப்பில் அமித்ஷா தோற்றுப்போவார்
வைகோ அளித்த பேட்டியில், ‘அமித்ஷா உளறல்களுக்கு எல்லையே இல்லை. ஆங்கிலம் உலக மொழி, ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுகளுக்கும் சென்று வளரலாம். அதனால்தான் பேரறிஞர் அண்ணா தாய் தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டில் இருக்கும் என்று கூறினார்.

அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள மாநில மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழிகள் ஆக்க வேண்டும் என்று மாநிலங்களவையிலேயே அவர் பேசினார். திராவிட இயக்கம் இந்த தீர்மானத்தை முன்வைத்தது. அதனை மதிமுகவும் வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் பாஜவிற்கு இதில் விருப்பம் இல்லை. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்க வேண்டும் என்பதிலேயே தீவிரமாக இருக்கின்றனர், அதில் தோற்றுப்போவார்கள்’ என்று தெரிவித்தார்.

மதவாதத்தை எதிர்க்க திமுகவுடன் கூட்டணி: துரை வைகோ
திருச்சி மதிமுக அலுவலகத்தில் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி நேற்று அளித்த பேட்டி: மதிமுக, திமுக கூட்டணி பொது நோக்கான கூட்டணி. மதவாதத்தை எதிர்க்க ஓரணியாக திரண்டு இருக்கிறோம். ஒரு அணியில், கூட்டணி கட்சிகளுக்கு முரண்பாடு இருக்கலாம் அதற்காக கட்சியில் பிளவு என்று கூறிவிட முடியாது. தேர்தலை எதிர்கொள்ளும் போது கூடுதல் தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட ஆசைப்படுவார்கள், அது அந்தந்த கட்சியின் முடிவு. அனைத்து கட்சியினரும் தங்கள் கட்சி முன்னேற வேண்டும் என்று தான் நினைப்பார்கள். மதிமுகவை பொறுத்தவரை தலைமை வழிநடத்துதலுக்கும், கூட்டணி தத்துவத்திற்கும் கட்டுப்பட்டு நடக்கும் கட்சி. 12 தொகுதிகளில் வெற்றி பெற்றால் அங்கீகாரம் கிடைக்கும். அதற்கு முயற்சி மேற்கொள்வோம்.

பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இந்தியா கூட்டணியில் பிளவு என கூறுவது அவரது அரசியல் தந்திரம். எதிர்க்கட்சிகள் எப்போதும் ஆட்சியில் இருக்கும் கட்சியை வலுவிலக்கசெய்ய நினைப்பது அரசியல் யுக்தி. இவ்வாறு அவர் கூறினார்.

The post நயினார் நாகேந்திரனுக்கு எச்சரிக்கை; திமுக உடனான கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை: வைகோ உறுதி appeared first on Dinakaran.

Tags : Nayinar Nagendran ,Dimuka ,Wiko ,Goa ,Secretary General ,31ST GENERAL MEETING ,MADIMUKA ,WAIGO ,GOI AIRPORT ,Waiko ,Dinakaran ,
× RELATED கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி;...