×

நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் ஆளுநர் அனுமதி வழங்கியதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு; காங்கிரஸ் போராட்டம்

பெங்களூரு: மைசூரு மாநகர வளர்ச்சி குழும நிலம் முறைகேடு புகாரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு நடத்தி அனுமதி வழங்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மைசூரு மாநகர வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இதனால் வளர்ச்சி குழுமத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகள் கூறி வருகிறது. ஆனால் தனது மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. மூடாவின் சட்ட விதிமுறைகள் பின்பற்றிதான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் நான் முதல்வராக இருந்தபோது நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை. பாஜ ஆட்சி காலத்தில்தான் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும் முதல்வரின் விளக்கம் ஏற்காத எதிர்கட்சிகள், ‘முதல்வர் பதவி விலக வேண்டும். முறைகேடு புகாரை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும்’ என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மூடா முறைகேடு புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க கோரி சமூக ஆர்வலர் டி.ஜெ.ஆப்ரஹாம், ஆளுநர் தாவர்சந்த் கெலாடிடம் மனு கொடுத்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். இதனிடையில் ஆளுநர் அனுப்பிய கடிதத்திற்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, ஆளுநர் கெலாட்டை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். இருப்பினும் இந்த விஷயத்தில் ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மூடா முறைகேடு புகாரில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்கி ஆளுநர் இன்று காலை ஒப்புதல் வழங்கி உள்ளார். அதற்கான கடிதத்தை மாநில தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஷிக்கு அனுப்பி உள்ளார். ஆளுநர் கெலாட்டின் அதிரடி நடவடிக்கை மாநில அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் முடிவுக்கு எதிராக என்ன செய்வது என்பது குறித்து இன்று மாலை கூடி ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரு வந்துள்ளார். மேலும் மாநிலத்தில் பல பகுதிகளில் உள்ள அமைச்சர்கள் உடனடியாக பெங்களூரு திரும்ப வேண்டும் என்று துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையில் முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர், ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் ஆளுநர், மாநிலத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் ஆளுநர் அனுமதி வழங்கியதால் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு; காங்கிரஸ் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Congress ,BANGALORE ,CHITARAMAYA ,MYSORE MUNICIPAL DEVELOPMENT GROUP ,MUDA ,Sidharamaiah ,Dinakaran ,
× RELATED சித்தராமையா வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு