×

பாம்பன் புதிய மின்ரயில் பாலத்தில் வெர்டிகல் லிப்ட் பாகங்கள் இணைப்பு

ராமேஸ்வரம்: பாம்பன் கடலில் புதிதாக கட்டப்பட்டு வரும் இருவழி மின்சார ரயில் பாலத்தில் கப்பல் செல்ல வழி விடும் வெர்டிகல் லிப்ட் பாகங்களை ஒன்றிணைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் அருகே பாம்பனுக்கும், மண்டபத்துக்கும் இடையில் கடலில் ரூ.535 கோடி செலவில் புதியதாக இருவழி மின்சார அகல ரயில் போக்குவரத்து பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2 கிமீ தூரத்திற்கு கடலுக்குள் 20 மீட்டர் இடைவெளியில் நூறு கான்கிரீட் தூண்களுக்கு மேல் 99 இரும்பு கர்டர்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் தண்டவாளம் பொருத்தப்படுகிறது. இந்த பாலத்தின் இடையில் பாம்பன் கால்வாயின் இருபுறமும் 72.5 மீட்டர் இடைவெளியில் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூண்களின் மேல் வெர்டிகல் லிப்ட் பாலம் அமைக்கப்படவுள்ளது.

கால்வாயில் கப்பல்கள் வரும் போது தண்டவாளம் இணைக்கப்பட்டுள்ள வெர்டிகல் லிப்ட் பாலம் செங்குத்தாக 40 அடி உயரத்திற்கு தூக்கப்பட்டு கீழே கப்பல்கள் செல்ல வழி ஏற்படுத்தும். தொடர்ந்து கப்பல்கள் பாலத்தை கடந்து சென்றவுடன் மீண்டும் கீழே பழைய நிலைக்கு வந்து ரயில் செல்ல வழி விடும். எலக்ட்ரோ மெக்கானிக்கல் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த வெர்டிகல் லிப்ட், பாலத்தின் முக்கிய கட்டுமான பகுதியாகும்.

இந்த வெர்டிகல் லிப்ட் பரமக்குடி அருகிலுள்ள சத்திரக்குடி ரயில் நிலைய வளாகத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வெர்டிகல் லிப்ட் 520 டன் எடையில் உருவாக்கப்படுகிறது. இப்பாலத்தின் இணைப்பு பாகங்களை சேர்க்கும் பணிகள் தற்போது பாம்பன் கடற்கரையில் நடைபெற்று வருகிறது. இதற்காக பாம்பன் கடற்கரையில் புதிய பாலம் கட்டுமானம் துவங்கும் இடத்தில் 50 அடி அகலம் 200 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பணிமனை மேடையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் பாலம் கட்டுமானப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வரும் ஜூலை மாத இறுதிக்குள் புதிய பாலத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடையும் என கூறப்படுகிறது. நேற்று பாம்பன் வந்த தெற்கு ரயில்வே பாலங்கள் முதன்மை பொறியாளர் சுமித் சிங்கால் மற்றும் அதிகாரிகள் வெர்டிகல் லிப்ட்டிற்கான பாகங்களை ஒன்றிணைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆலோசனை செய்தனர்.

The post பாம்பன் புதிய மின்ரயில் பாலத்தில் வெர்டிகல் லிப்ட் பாகங்கள் இணைப்பு appeared first on Dinakaran.

Tags : Pampan New Railway Bridge ,Rameswaram ,Pampan sea ,
× RELATED கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு