×

வண்டலூர் அருகே பரபரப்பு மருந்தக உரிமையாளர் சரமாரி வெட்டி படுகொலை: பொதுமக்கள் சாலை மறியல்: 3 தனிப்படை அமைப்பு

கூடுவாஞ்சேரி: வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே மெடிக்கல் உரிமையாளர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போலீசார் 3 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். சென்னை, வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம், ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாத்தி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் வினோத்குமார் (45). இவரது மனைவி கஸ்தூரி (43), மகள் ஜீவனா (17), மகன் ரோஷன் (14). இவர் மண்ணிவாக்கம் மற்றும் வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதி, 4-வது தெருவில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில், வழக்கம்போல் மெடிக்கல் கடையை மூடிவிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஓட்டேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள ஒரு பேக்கரி கடைக்குச் சென்று தின்பண்ட பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இவரை நோட்டமிட்டபடி இரண்டு பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வினோத்குமாரை சுற்றி வளைத்து சரமரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் வலது கை, இடது கை மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வினோத்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன், வினோத்குமாரிடம் மாமூல் கேட்டு கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் ரவுடி சிலம்பரசன் தற்போது சிறையில் உள்ளார்.

அவரது தலைமையிலான கும்பல்தான் இந்த கொலையை அரங்கேற்றியதா? அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வினோத்குமார் வணிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சமூக சேவையும் செய்து வந்துள்ளார். அவரை கொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி முழுவதும் அனைத்து கடைகளையும் மூடி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு ஜி.எஸ்.டி சாலையில் வணிகர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் வினோத்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த கானம்கஸ்பா கிராமத்துக்கு நேற்று மாலை அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் காஞ்சிபுரத்திற்கு விரைந்துள்ளனர். இந்த கொலையால் வண்டலூர் ஊராட்சியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

The post வண்டலூர் அருகே பரபரப்பு மருந்தக உரிமையாளர் சரமாரி வெட்டி படுகொலை: பொதுமக்கள் சாலை மறியல்: 3 தனிப்படை அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Guduvanchery ,Panchayat Otteri Government Higher Secondary School ,Chennai, Vandalur ,Rajathi Kalainar Nagar ,Panchayat ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று...