×

வாள்வச்ச கோஷ்டத்தில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் ஐம்பொன்சிலை கண்டெடுப்பு-தூர்வாரும் பணியில் கிடைத்தது

நாகர்கோவில் : வாள்வச்ச கோஷடத்தில் உள்ள அம்மன் கோயில் தெப்பக்குளத்தை தூர்வாரும் போது ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் வாள்வச்ச கோஷ்டத்தில், மஹிஷாசுர மர்த்தினி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த கோயிலில் உள்ளன. பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்த போது, அவர்களின் ஆயுதங்களை இந்த கோயிலில் மறைத்து வைத்ததாக ஐதீகம் உள்ளது. அது போல் திருவிதாங்கூர் மன்னர் யுத்தத்துக்கு செல்வதற்கு முன் இந்த கோயிலில் வாளை வைத்து பூஜை செய்ததாகவும், அப்படி வாள் வைத்து பூஜை செய்து விட்டு சென்றால், அந்த போரில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்துள்ளது.

இந்த கோயிலில் எதிரிகள் விலக சத்துரு சம்ஹார பூஜை, காரியம் சித்தி அடையவும், நோய் நீங்கவும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. குமரி மாவட்டத்தில் அதிக நகைகள் உள்ள அம்மன் கோயில் இந்த கோயில் ஆகும். பாதாள அறைகளும் இந்த கோயிலில் உண்டு என கூறுவார்கள். இந்த கோயிலில் வைகாசி மாத திருவிழா நாளை (24ம்தேதி) தொடங்குகிறது. இதையொட்டி கோயில் தெப்பக்குளத்தை தூர்வாரும் பணி நடந்தது. அப்போது தெப்பக்குளத்துக்குள் இருந்து சுமார் ஒன்றரை அடி ஐம்பொன் அம்மன் சிலை கிடைத்தது.

கோயிலில் பலியின் போது பயன்படுத்தும் உற்சவ சிலை போல் உள்ளது. அம்மன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை மீட்டு கோயிலில் வைத்துள்ளனர். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த சிலையை கோயிலில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும், சிலைகள் காப்பக அறைக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வாள்வச்ச கோஷ்டத்தில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் ஐம்பொன்சிலை கண்டெடுப்பு-தூர்வாரும் பணியில் கிடைத்தது appeared first on Dinakaran.

Tags : Valvacha Koshta ,Aimbonsil ,Theppakulam ,Nagercoil ,Aimpon ,Amman Koil Theppakulam ,Valvacha Koshadam ,Kumari District… ,Dinakaran ,
× RELATED மதுரையில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்ததால் சாலைகள் நீரில் மூழ்கின!