×

ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வரும் வள்ளுவர் கோட்டம் பொங்கலுக்கு முன் திறப்பு

* வாகனங்களை நிறுத்த மல்டி பார்க்கிங் வசதி, 1,400 பேர் அமரும் வகையில் அரங்கம், திருக்குறளை மக்கள் அறிய ஆய்வு மையம்

சென்னை: ரூ.80 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் ‘வள்ளூவர் கோட்டம்’ வரும் பொங்கல் தினத்திற்கு முன் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலக பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவருக்கு கோட்டம் அமைக்கும் வகையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் திராவிட கலை மற்றும் பல்லவர் கட்டிடக்கலையுடன் கட்ட திட்டமிடப்பட்டு, அப்போதைய தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கலைஞரால்  அடிக்கல் நாட்டப்பட்டது. 1976ம் ஆண்டு ஏப்.15ம் தேதி திறக்கப்பட்டது.

வள்ளுவர் கோட்டம், கட்டப்பட்டு 48 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முந்தைய ஆட்சியாளர்களால் சரியாக பராமரிப்பின்றி இருந்ததால் முற்றிலுமாக சேதமடைந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது ‘வள்ளுவர் கோட்டம்’ புனரமைப்பதற்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் 275 கட்டிட வல்லுநர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களை கொண்டு பொதுப்பணி துறை மூலமாக துரிதமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, கோட்டத்தின் தரைத்தளத்தின் கீழ் பகுதியில் 1,400 பேர் அமரக்கூடிய வகையில் குளிரூட்டப்பட்ட ஆடிட்டோரியம், 1,330 செய்யுள்களை உள்ளடக்கிய குறள் மண்டபம், திருக்குறள் வசனங்களை காட்சிப்படுத்தும் ஓவியம், கோட்டம் வாயிலின் முன்புறத்தில் இசை நீரூற்று, 1000 புத்தகங்கள் அடங்கிய நூலகம் உள்ளிட்டவை புதிதாக வடிவமைத்து, புனரமைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

மல்டி பார்க்கிங் வசதியுடன் கூடிய வாகன நிறுத்தம், திருக்குறள் ஆய்வு மையம் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுவருகின்றன. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாற்று திறனாளிகளுக்கு நடைபாதை, தேரின் உச்சிக்கு செல்ல சாய்வு தளம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வர்ணம் பூசும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து கட்ட பணிகளும் விரைவில் நிறைவடைந்துவிடும். எனவே, அடுத்தாண்டு பொங்கல் தினம் முன்பாகவே வள்ளுவர் கோட்டத்தை திறக்க பணிகளை துரிதமாக செய்து வருகிறோம் என்றார்.

The post ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வரும் வள்ளுவர் கோட்டம் பொங்கலுக்கு முன் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Valluwar Kotham ,Pongal ,People Seating Stadium ,Thirukulale Peoples' ,Study Centre ,Chennai ,Valluvar ,Kotam ,Pongal Day ,Valluwar ,Kotham ,
× RELATED நெருங்கி வருகிறது பொங்கல் பண்டிகை:...