×

மருத்துவ துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு அங்கு பணியாற்றும் துப்புரவுப் பணியாளர் ஒருவரே மருத்துவம் அளித்த காட்சி காணொலியாக வலம் வருவது அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்த நோயாளிக்கு தூய்மைப் பணியாளர் மருத்துவம் அளிக்கவில்லை, ஏற்கனவே போடப்பட்ட கட்டை மட்டும் தான் பிரித்தார் என மருத்துவமனை தரப்பில் விளக்களிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளுக்கு கட்டை பிரிப்பது தூய்மைப் பணியாளரின் வேலை அல்ல. அந்தப் பணியை பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர் தான் மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணிகளை மேற்கொண்ட பணியாளர் ஒருவர், அப்படியே நோயாளிக்கு மருத்துவம் அளித்தால் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

இவற்றை அறிந்திருந்தும் ஒரு நோயாளிக்கு தூய்மைப்பணியாளர் மூலம் சிகிச்சையளிக்கச் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கடும் பற்றாக்குறை நிலவுவது தான் சிக்கலுக்குக் காரணம் ஆகும். எனவே, மருத்துவத் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post மருத்துவ துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,PMK ,Madathukulam Government Hospital ,Tiruppur district ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு