×

உதகையில் இடைநிற்றல் குறைந்து மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பு: தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்படும் அரசுப்பள்ளி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிக்கு நடுவே டிஜிட்டல் வகுப்பறை சிசிடிவி கேமரா என அதிநவீன தொழில்நுட்பவசதிகளுடன் தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியின உண்டு, உறைவிட பள்ளி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ளது கரிக்கையூர் என்ற பழங்குடியின கிராமம் 1000க்கும் மேற்பட்ட இருளர், பழங்குடியின மக்கள் வசித்துவரும் இந்த கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக உண்டி உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

சொற்ப அளவிலான மாணவர்களே இங்கு தங்கி படித்து வந்த நிலையில் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்க பள்ளியை தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளபட்டன. அதன் பலனாக கோவையை சேர்ந்த தனியார் தொழில்நுட்ப நிறுவன உதவியோடு பள்ளியில் புரொஜெக்டருடன் கூடிய டிஜிட்டல் வகுப்பறைகள், கணினி, மின்விசிறிகள், சிசிடிவி கேமராக்கள் என பாழடைந்து கிடந்த பள்ளி தற்போது புது பொலிவு பெற்று ஜொலிக்கிறது.

பழங்குடியின சிறுவர்களை கவரும் விதமாக வகுப்பறைகளில் கார்ட்டூன் படங்களும் வரையப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன. கணினிகளை பாடப்புத்தகங்களில் மட்டுமே பார்த்து வந்த மாணவர்கள் தற்போது தினமும் கணினி முன் அமர்ந்து உற்சாகமாக கல்வி கற்று வருகின்றனர். இதனால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையும் 112ஆக அதிகரித்துள்ளது. அரசு ஒரு புறம் பள்ளிகளை மேம்படுத்தி வந்தாலும் இது போன்ற தனியார் நிறுவனங்கள் உதவ முன்வந்தால் கரிக்கையூர் போன்ற மற்ற பழங்குடியின கிராமங்களில் உள்ள பள்ளிகளும் புது பொலிவுடன் ஜொலிக்கும் என்பதில் மற்றம் இல்லை.

 

The post உதகையில் இடைநிற்றல் குறைந்து மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பு: தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் செயல்படும் அரசுப்பள்ளி appeared first on Dinakaran.

Tags : Utd ,Nilgiris ,Nilgiri ,
× RELATED நீலகிரியில் பூத்துக்குலுங்கும் மஞ்சள் நிற சீகை மர பூக்கள்