×

காமராஜரின் கனவு நினைவாக சாதி மத இனவேறுபாடுகளை கடந்து ஒன்றிணைய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: காமராஜரின் கனவு நினைவாக சாதி மத இனவேறுபாடுகளை கடந்து ஒன்றிணைய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். காமராஜர், மார்ஷல் நேசமணி, மா.பொ.சிவஞானகிராமணி ஆகியோர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முப்பெரும் விழா சென்னை மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமதாஸ், ஏ.கே.மூர்த்தி, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ்; இன்று தமிழகம் வளர அடித்தளமிட்டவர் கர்மவீரர் காமராஜர். அவர் விதைத்த விதை தான் இன்று வளர்ந்து நிற்கிறது. 1952 ல் வன்னியர்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்காது.

முதலமைச்சராக இருந்த ராஜாஜி குலக்கல்வி திட்டத்தைக் கொண்டு வந்தார். அதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் 1954 ல் காமராஜர் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். அவர் ஆட்சி செய்த 9 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் பொன்னான காலம். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்க காரணமாக இருந்தவர் காமராஜர். கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் காமராஜர். மணிமுத்தாறு, வைகை அணை, சாத்தனூர், கீழ்பவானி வாய்க்கால், கே.ஆர்.பி திட்டம், பரம்பிகுளம் ஆழியாறு அணை என 13 பாசன திட்டங்களை உருவாக்கியவர் காமராஜர். ஆனால் இடையில் 56 ஆண்டு காலம் நடுவில் கொஞ்சம் பக்கம் காணாமல் போய்விட்டது.

தமிழ்நாடு நிலப்பரப்பு ஆணையம் கடந்த 45 ஆண்டுகளில் 10 விழுக்காடு விவசாய நிலப்பரப்பு குறைந்துள்ளது என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் கடும் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். காமராஜர் ஆட்சிக் காலத்தில் 27 ஆயிரம் பள்ளிகளைத் திறந்தார். காமராஜரால் தொடங்கி வைக்கப்பட்ட பல தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டு வருகின்றன. காமராஜர் இல்லை என்றால் நான் மருத்துவராக ஆகியிருக்க முடியாது என மருத்துவர் ராமதாஸ் கூறுவார். காமராஜர் ஆட்சியை யாராலும் கொடுக்க முடியாது. ஆனால் அவர் கனவை நிறைவேற்ற தகுதியான கட்சி பாமக தான் என்று கூறினார்.

The post காமராஜரின் கனவு நினைவாக சாதி மத இனவேறுபாடுகளை கடந்து ஒன்றிணைய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Kamaraj ,Anbumani Ramadoss ,Chennai ,BAMA ,
× RELATED திரைப்பட இயக்குனர் மோகனை விடுதலை...