×

தமிழ்நாட்டில் இரட்டை இலையின் மேல் தாமரை மலர்ந்தே தீரும் : நயினார் நாகேந்திரன் நம்பிக்கை

சேலம்: தமிழ்நாட்டில் இரட்டை இலையின் மேல் தாமரை மலரும் என நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பெருங்கோட்டை பாஜக சார்பில் மாநில தலைவர் அறிமுக கூட்டம், மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது; “2026-ல் பாரதிய ஜனதாக் கட்சி, அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணைந்து வெற்றி பெறும் எழுச்சி தெரிகிறது. அகில இந்திய தலைமையின் முடிவுக்கு கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் ஒரு மீம்ஸ் போட்டால், உடனே இன்னொரு மீம்ஸ் வந்து விடுகிறது.

அகில இந்திய தலைமை சொன்னபடி, சமூக வலைத்தளங்களில் முழுமையாக செயல்பட வேண்டும். சமூக வலைத்தளங்களில் இயங்கும் அனைவரும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால் வேறு மாதிரி போய்விடும். நம் கூட்டணி இறுதியான, உறுதியான கூட்டணி என்பதை மறந்து விடக்கூடாது. இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். எங்களது கூட்டணி நியாயமான, நேர்மையான ஊழலற்ற கூட்டணி என்பதை சொல்லிக் கொள்கிறோம். தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு தயாராக இருக்க வேண்டும். பல தியாகங்களால்தான் பாரதிய ஜனதாக் கட்சி வளர்ந்துள்ளது.

அந்த தியாகத்திற்கு பெருமை சேர்க்க அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டு பூத் அளவில் பணியைத் தொடங்க வேண்டும். பூத் செம்மைபடுத்தினால் நிச்சயம் வெற்றி பெற முடியும். எத்தனை தொகுதிகள் எந்த இடம் என்பதை அமித்ஷா, இபிஎஸ் தான் முடிவு செய்வார்கள். என்னுடைய அதிகாரம் என்பது தொண்டர்களை பாதுகாப்பது என்பதுதான். கட்சியை வளர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய நிலை. எனக்கு மேலே இருக்கிற தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதுதான் கட்சி நிர்வாகிகளின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசுக்கு அதிக அதிகாரம் வேண்டும். அதிக நிதி வேண்டும் என்பதில் எங்களுக்கு தயக்கம் கிடையாது. மற்ற மாநிலங்களை விட அதிக நிதி வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. கச்சத்தீவு மீண்டும் வராது. பிரதமர் நினைத்தால் மட்டுமே நமக்கு கிடைக்கும். ஆனால் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் உறுதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என தெரிவித்தார்.

The post தமிழ்நாட்டில் இரட்டை இலையின் மேல் தாமரை மலர்ந்தே தீரும் : நயினார் நாகேந்திரன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Nayanar Nagendran ,Salem ,Nayinar Nagendran ,President of the State ,Perunkot BJP ,Omalur, Salem District ,Deputy Head of State ,K. B. Ramalingam ,
× RELATED உலகக் கோப்பை ஸ்குவாஷ் இறுதிப் போட்டி:...