×

கோடையை சமாளிக்க பழைய சோறு… கேழ்வரகுக் கூழ்..

கோடை வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. வெளியில் சென்று விட்டு வீட்டுக்குள் நுழைபவர்கள் முகத்தை நிமிர்ந்து பார்த்தோம் என்றால் “ஷ்..ஷ்..ஷ்.. முடியல..” என்று வடிவேலு பாணியில் சொல்லுவதை போலவே இருக்கும். தகிக்கும் சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக, லிட்டர் லிட்டராக கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களை வாங்கி, பிரிட்ஜில் அடுக்கி வைத்திருப்பது பலரின் வாடிக்கையாகிவிட்டது.வயிற்றுக்கும் பிரச்சினையில்லாமல், பட்ஜெட்டுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல், சத்துக்களை அள்ளித் தரும் எளிய உணவுகளை நமது முன்னோர்கள் ஏற்கனவே நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். காலை உணவாக இவற்றை சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான அத்தனை உயிர்ச் சத்துக்களும் கிடைக்கும். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவில் பாலை ஊற்றி சாப்பிட்டுவிட்டு, பரபரப்பாக ஓடுவதை தவிர்த்து, பாட்டி சொன்ன பாரம்பரியஉணவுகளை சாப்பிட்டு சத்தோடு வாழலாம்.

பழைய சோறு

பெயரைப் பார்த்து இதன் மதிப்பை எடைப் போடாதீர்கள். ‘பழைய சோறு’ என்று நாம் ஒதுக்கிய உணவின் அற்புதத்தை, வெளிநாட்டினர் உணர்ந்துகொண்டனர். இதில் உள்ள சத்துக்கள், உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என்று பல ஆய்வு களின் அடிப்படையில் தெரிந்துகொண்டார்கள். அதன் விளைவாக, ‘ஃபெர்மண்டட் ரைஸ்’ என்ற பெயரில் பழைய சோறை டின்னில் அடைத்து விற்கிறார்கள். இப்போது பல நாடுகளில் இந்த பிசினஸ் சக்கை போடு போடுகிறது.எனது சிறுவயதில், இரவு சாப்பிட்டு முடித்ததும் மீதம் இருக்கும் வெள்ளை சாதத்தில், அம்மா, நிறைய தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு மூடிவைத்து விடுவார்கள். காலை எழுந்ததும் அந்த சாதம் தண்ணீரில் ஊறி இருக்கும். அதனோடு சிறிது பசுந்தயிர் ஊற்றி, தேவையான அளவு கல் உப்பு போட்டு கலந்து வைப்பார்கள். வீட்டில் இருக்கும் எல்லோரும் காலையில் எழுந்து வேலைகளை முடித்து, வட்டமாக உட்கார்ந்து கொள்வோம்.

அம்மா, சிறுசிறு கிண்ணங்களில் கலந்து வைத்த பழைய சோறையும், அதற்கு சைடு டிஷ்ஷாக சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கிச்சிலிக்காய் ஊறுகாய் என்று ஏதாவது ஒன்றையும் கொடுப்பார்கள். அதை சாப்பிடும்போது கிடைக்கும் சந்தோஷம், அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அரிசிச் சோறை இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கும்போது, அதில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வினைபுரிந்து சத்துக்களை அதிகப்படுத்துகின்றன. காலை உணவாக இதை சாப்பிடும்போது, ஊட்டச்சத்துக்கள் உடலில் உறிஞ்சப்பட்டு, நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றல் கிடைக்கும். செரிமானம் சீராகும். வயிறு தொடர்பான பிரச்சினைகள் தீரும். கெட்டகொழுப்பு கரையும். கண்கள் குளிர்ச்சி அடையும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மனம் அமைதியாகும்.இதைப்போலவே நன்மை தரும் எளிய உணவுதான் கூழ். கேழ்வரகுக்கூழ், கம்பங்கூழ் என பலவிதமான வகைகள் இதில் உண்டு. அதைப்பற்றியும் இங்கே
பார்ப்போம்.

கேழ்வரகுக் கூழ்

தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுப் பொருட்களில் கேழ்வரகும் ஒன்று. இதில் பல வகையான உணவுகள் சமைக்கப்பட்டாலும், மிகவும் எளிமையான மற்றும் சத்து நிறைந்த உணவு கூழ்தான்.
இது புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்தது. எடை குறைக்க உதவுகிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது. கொழுப்பைக் குறைக்கிறது. இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கிறது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
-ராஜி

பாரம்பரிய முறைப்படி செய்யப்படும் கேழ்வரகுக் கூழின் செய்முறையை தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு – 1 கப்
பச்சரிசி நொய் அல்லது பச்சரிசி – ½ கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.

பக்குவம்

முதல் நாள் இரவு, 1 கப் கேழ்வரகு மாவில், 3 கப் தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளுங்கள். இதை மூடி, சமையல் அறையில் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள். இந்த மாவு இரவு முழுவதும் புளித்துக் கொண்டிருக்கும்.அடுத்த நாள் காலையில், அடிகனமான பெரிய பாத்திரத்தில், பச்சரிசியை வழக்கம்போல ஊறவைத்து நன்றாக குழையும்படி வேகவையுங்கள். பிறகு, அதில் புளிக்க வைத்திருக்கும் கேழ்வரகு மாவை, கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி நன்றாகக் கிளற வேண்டும். இந்த சமயத்தில் தீயை மிதமாக வைக்கவும். மாவு அடிபிடிக்காமல் நன்றாக வேக வேண்டும். கையை தண்ணீரில் நனைத்துவிட்டு, வெந்து கொண்டிருக்கும் மாவை லேசாக தொட்டுப்பார்த்தால், மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க வேண்டும். இந்தப் பதத்தில் அடுப்பை அணைத்து விடுங்கள்.வெந்து இருக்கும் அரிசி மற்றும் மாவை மூடி இரவு முழுவதும் வைத்து விடுங்கள். அடுத்த நாள் காலையில் தயாரித்து வைத்திருக்கும் கூழில், தேவையான அளவு தண்ணீர், தயிர், கல் உப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.இதற்கு சைடு டிஷ்ஷாக சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், ஊறுகாய், துவையல், வறுத்த கருவாடு என எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்.கம்பங்கூழ் செய்வதற்கும் இதே செய்முறையைத்தான் பின்பற்ற வேண்டும். கேழ்வரகு மாவிற்கு பதிலாக, கம்பு மாவை பயன்படுத்த வேண்டும்.இந்தக் கூழை கெட்டியான பதத்தில் இருக்கும்போது, ப்ரிட்ஜில் பத்திரப்படுத்திக்கொண்டால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்த முடியும்.

The post கோடையை சமாளிக்க பழைய சோறு… கேழ்வரகுக் கூழ்.. appeared first on Dinakaran.

Tags :
× RELATED சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்