×

திருவொற்றியூரில் பாராகவும், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறி வரும் பூங்கா: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி பூங்கா பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலம், 4வது வார்டுக்கு உட்பட்ட ஜோதி நகர் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான சிறுவர் பூங்கா மற்றும் மழைநீர் சேமிப்பு குளம் உள்ளது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர்கள், பெண்கள், முதியவர்கள் பலர் தினமும் பூங்கா பகுதிக்கு வந்து குழந்தைகளோடு விளையாடி மகிழ்கின்றனர். மேலும், இந்த குளத்தை சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டிருப்பதால் மாலை நேரங்களில் ஆண், பெண்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் பூங்கா உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் வந்து மது அருந்துகின்றனர். மேலும் காலி மதுபாட்டில்களை பூங்கா மற்றும் நடைபயிற்சி செல்லும் மழைநீர் சேமிப்பு குளத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் விளையாடும் சிறுவர்களுக்கும் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் மதுபாட்டில்களின் உடைந்த கண்ணாடி துண்டுகள் காலில் குத்தி காயம் ஏற்படுகிறது. எனவே, பூங்காவிற்கு வருவதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

இப்படி மாநகராட்சி பூங்கா இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி இருப்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வார்டு கவுன்சிலர் ஜெயராமன் காவல்துறை மற்றும் மண்டல குழு கூட்டத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தொடர்ந்து இரவு நேரங்களில் பூங்காவில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. எனவே சாத்தாங்காடு காவல் நிலைய அதிகாரிகள் இரவு நேரங்களில் பூங்கா பகுதியில் ரோந்து பணி செல்ல வேண்டும். மது அருந்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஜோதி நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்காக சென்னை மாநகராட்சி சுமார் ₹1.50 கோடியில் நடைபாதையுடன் கூடிய மழைநீர் சேமிப்பு குளம், சிறுவர் பூங்கா, தெருவிளக்கு போன்ற பல்வேறு வசதிகளை செய்து கொடுத்துள்ளது. பள்ளிக்கு மற்றும் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள பூங்காவில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் முறையான கண்காணிப்பு இல்லாததால் சமூக விரோதிகள் மது அருந்தும் பாராக பூங்காவை பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post திருவொற்றியூரில் பாராகவும், சமூகவிரோதிகளின் கூடாரமாகவும் மாறி வரும் பூங்கா: பொதுமக்கள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Thiruvotripur ,Thiruvotiyur ,Thiruvotiur ,Park ,Chennai ,Jyoti Nagar ,Thiruvotiyur Zone ,4th Ward ,Paraka ,
× RELATED திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு