×

திருவாரூர்-விளமல்-கும்பகோணம் சாலையில் ₹90 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்க பணி

*விபத்து, போக்குவரத்து நெரிசல் குறையும்

திருவாரூர் : திருவாரூர் – கும்பகோணம் சாலையில் விபத்துகளை குறைக்கும் வகையில் ரூ.90 லட்சம் மதிப்பில் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைகள் சரிவர சீரமைக்கப்படாததன் காரணமாக சாலைகள் அனைத்தும் போக்குவரத்திற்கு பயனற்றதாக இருந்தது. இதன் காரணமாக நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது மட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலையும் இருந்து வந்தது.

இதற்கிடையே கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசின் நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்குமாறும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு தேவையான நிலம எடுக்கும் பணிகள் மற்றும் என்ஓசி சான்று மற்றும் சாலை அமைப்பதற்கு தேவையான மண் மற்றும் அரளைகள் போன்றவற்றினை உடனடியாக ஏற்பாடு செய்து கொடுக்குமாறும் நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ. வேலு மேற்பார்வையில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சீரமைக்கப்படாத அனைத்து சாலைகளும் ஒரு வருட காலத்திற்குள்ளாகவே மாநில நெடுஞ்சாலை துறையின் மூலம் சீரமைக்கப்பட்டன. இதில் திருவாரூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரத்து 250 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அகலப்படுத்தும் பணி மற்றும் சீரமைப்பு பணி நடைபெற்ற நிலையில் பல்வேறு இடங்களில் பாலங்கள், சிறு கல்வெட்டுகள் மற்றும் மழைநீர் வடிகால் போன்றவையும் ரூ.100 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி சென்னை – கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு வழித்தட சாலைகள் அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே திருவாரூர் உட்கோட்டத்தில் மயிலாடுதுறை சாலையில் திருவாரூர் நாலுகால்மண்டபத்திலிருந்து வடக்கு வீதி வரையில் தற்போது 7 மீட்டர் அகலத்தில் இருந்து வரும் சாலையானது 10 முதல் 14 மீட்டர் அகலம் வரையில் இட வசதிக்கு ஏற்ப 700 மீட்டர் நீளத்திற்கு ரூ 3 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நகரில் துர்காலயா சாலையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலை, தஞ்சை மற்றும் மன்னார்குடி, புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை என 3 சாலைகள் பிரியும் நிலையில் இந்த இடத்தில் இருந்து வரும் 3 பள்ளிகள் மற்றும் கலெக்டர் அலுவலகம் செல்வோர் என நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் வரையில் கடந்துசெல்வதன் காரணமாக அந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்துகளும் அடிக்கடி நடைபெற்று வந்த நிலையில் அந்த இடத்தில் வேகத்தடை மற்றும் போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் அவ்வப்போது படத்துடன் செய்தி வெளியிடப்பட்டு வந்தது.இந்நிலையில் இந்த இடத்தில் கும்பகோணம் செல்லும் சாலையை ரூ 90 லட்சம் மதிப்பில் நெடுஞ்சாலைத்துறையினர் மூலம் இருபுறமும் தலா 7 மீட்டர் அகலத்திற்கு சாலையினை அகலப்படுத்தி மைய பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

The post திருவாரூர்-விளமல்-கும்பகோணம் சாலையில் ₹90 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்க பணி appeared first on Dinakaran.

Tags : Tiruvarur-Vilamal-Kumbakonam road ,Tiruvarur ,Tiruvarur-Kumbakonam road ,AIADMK ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்